சனி, 3 செப்டம்பர், 2016

பத்தினி சாபம் பலிக்குமா?

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் இருக்கிறது. வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று சொல்வார்களே அந்த மாதிரி. ஆறு சகோதரர்கள். ஆறு பேருக்குமான சுமார் 10-12 குழந்தைகள் இருப்பார்கள். அவர்களில் சிலருக்கு நாற்பதைத் தாண்டியும் திருமணம் ஆகவில்லை. அப்படியே ஆனவர்களில் இரண்டு பேருக்கு பல வருடங்களாக குழந்தை கிடையாது. மீதமிருள்ளவர்களுக்கு குழந்தை பிறந்தாலும் அவை ஆண் வாரிசுகளாக இல்லை. வேறு குடும்பத்துக்கு வாழ்க்கப்பட்டுப் போன பெண்களுக்கும் இது பொருந்துவதாக இருக்கிறது. மேலும் பொருளாதார ரீதியில் ஓஹோவென விளங்கிய அந்தக் குடும்பம் 50 ஆண்டுகளில் உருக்குலைந்து போயிருக்கிறது.
அந்த ஆறு பேரும் சின்ன வயதில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி அதனால் அந்தப் பெண் மனமுடைந்து, இந்தக் குடும்பம் வாரிசில்லாமல் மூடிப் போகட்டுமென சபித்து விட்டு தற்கொலை செய்து கொண்டாராம். கேட்பதற்கு நம்பும்படியாக இல்லை. அறிவியல் பூர்வமாக நிரூபிக்க ஆதாரமும் இல்லை. ஆனால் அப்படித்தான் நடந்திருக்கிறது. பத்தினி மனதாரச் சபித்தால் பலிக்குமென்ற நம்பிக்கை நமக்கு இன்னுமிருக்கிறது. கண்ணகி மதுரையை எரித்த கதையை இன்னும் பேசிக்கொண்டுதானிருக்கிறோம்.
அப்படி ஒரு கதைதான் மைசூர் ராஜ வம்சத்தின் கதை. அந்த வம்சத்தின் கடைசி மன்னர் ஸ்ரீகாந்த தத்தா நரசிம்மராஜ உடையார் டிசம்பரில் காலமானது அனைவருக்கும் தெரிந்திருக்கும். தனது 21 ஆவது வயதில் 1974 இல் மகுடம் தரித்தவர் இப்போது அறுபது வயதில் மரணித்த புள்ளியில் அந்த வம்சமே முடிவுக்கு வந்திருக்கிறது. அரியணைக்கு மட்டுமல்லாது பலாயிரணக் கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துக்கும் யார் வாரிசென்று முடிவு செய்யால் முடிவுக்கு வந்திருக்கிறது அவரது வாழ்க்கை.
மைசூர் அரச வம்சத்தை நிழல் போலத் தொடர்ந்து வந்த தலக்காட்டு சாபம் மறுபடியும் பலித்து விட்டதென வரலாற்றாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள். காவிரி ஆற்றின் கரையில் ஸ்ரீரங்கப்பட்டினத்திற்குக் கீழே உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர் தலக்காடு. நதிக்கரை நாகரீகத்தில் ஓங்கிச் சிறந்த ஊர்களில் ஒன்று. தமிழத்தில் பூம்புகார் போல கர்நாடகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு அதற்குண்டு. அந்த இடத்தில், கிழக்கு நோக்கிப் பாயும் காவிரி ஆறு திடீரென தெற்காகத் திரும்பி மறுபடியும் கிழக்கே திரும்பிப் போகும். கிட்டத்தட்ட U வடிவத்தில் ஆறு ஓடுவதால் மூன்று பக்கமும் ஆறு சூழ்ந்த ஊராகவே தலக்காடு இருந்தது.
ஆற்றுக்கு இடது கரையில் அமைந்திருப்பது தலக்காடு. நதியில் அக்கக்கரையில் தலக்காட்டுக்கு எதிரே உள்ள ஊர் மலாங்கி. பதினோராம் நூற்றாண்டில் தலக்காடு சோழர் வசமிருந்ததாகச் சொல்கிறார்கள். அப்போது தலக்காட்டிற்கு ராஜராஜபுரம் என்ற பெயரும் இருந்ததாம். அதன் பிறகு சோழர்கள் கையிலிருந்து கன்னட ஹெளசல்ய அரசன் விஷ்ணுவர்த்தன் அதை மீட்டதாகவும், பிறகு விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கீழ் வந்ததாகவும் சரித்திரம் சொல்கிறது. 14 ஆம் நூற்றாண்டிலிருந்து அந்தப் பிராந்தியம் விஜயநகரப் பேரரசால் ஆளப்பட்டது.
விஜயநகரப் பேரரசின் சார்பில் அங்கே நிர்வாகம் செய்ய ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ஒரு பிரதிநிதி இருந்தார். காவிரியின் பாதையில் மைசூருக்குக் கீழே இருக்கிறது ஸ்ரீரங்கப்பட்டினம். இங்கே காவிரி இரண்டாகப் பிரிந்து போய் மறுபடியும் ஒன்று கூடுமாகையால் இதை ஒரு குட்டித் தீவோடு ஒப்பிடலாம். திருச்சி ஸ்ரீரங்கம் கூட அப்படித்தானே! ஒரே பெயர் கொண்டுள்ள இந்த இரண்டு தீவுகளிலும் பிரசித்த பெற்ற ரங்கநாதர் ஆலயம் உண்டு என்பதைத் தனியாகக் குற்ப்பிட வேண்டியதில்லை. இந்த ஸ்ரீரங்கப்பட்டினம் ஆங்கிலேயருக்கு தீராத தலைவலியைக் கொடுத்த திப்பு சுல்தானின் தலைநகராக விளங்கியது தனிக்கதை.
1610 இல் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்து விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியாக ஆட்சி செய்துகொண்டிருந்தவர் திருமலைராஜா என்பவர். ஸ்ரீரங்க ராயர் என்ற பெயரும் கொண்டு விளங்கிய அவருக்குக் கீழே அடங்கிக் கப்பம் கட்டும் பாளையக்காரர்களில் ஒருவராக மைசூர் ராஜ உடையார் இருந்தார். விஜயநகர சாம்ராஜ்ஜியம் தேய்ந்து கொண்டிருந்த சமயம் அது. எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்ற வேட்கையுடன் மைசூர் பாளையக்காரர் சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தார்.
திருமலைராஜா இந்தச் சமயத்தில் நோய்வாய்ப்பட்டார். முதுகில் கட்டி வந்து தொந்தரவு செய்தது. தீராத வியாதியை அந்த வைத்தியநாதனே தீர்க்கட்டும் என்று முதல் மனைவியை அழைத்துக்கொண்டு தலக்காட்டில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் பயணிக்கிறார். அப்போது ஸ்ரீரங்கப்பட்டிணத்தின் நிர்வாகத்தை தனது இரண்டாவது மனைவி அலமேலம்மாவிடம் ஒப்படைத்து விட்டுச் செல்கிறார் அவர். ஆனால் தலக்காடு சென்றவவுடன் அவரது நிலைமை மேம்படுவதற்குப் பதிலாக மோசமாகிறது. மரணத்தின் விளிம்பில் உள்ள திருமலைராஜாவின் சங்கதி கேட்ட அலமேலம்மாவும் தலக்காட்டுக்குப் பயணிக்கிறார். அவர் அங்கு வந்து சேர்வதற்குள் திருமலைராஜாவின் உயிர் பிரிந்து விடுகிறது.
கழுகுப் பார்வையோடு காத்திருந்த ராஜ உடையார் ஸ்ரீரங்கப்பட்டினத்தைக் கைப்பற்றி தன் வசமாக்கிக் கொள்கிறார். மைசூர் மகாராஜாக்களின் ராஜவம்சம் அங்கே உதயமாகிறது. ஸ்ரீரங்கப்பட்டினத்திற்குத் திரும்ப முடியாத அலமேலம்மாவா தலக்காட்டுக்கு அக்கரையில் உள்ள மலாங்கியில் தங்கியிருக்கிறார். ஸ்ரீரங்கப்படிண ராணியாகிய அலமேலம்மா தனது ராஜ அலங்கார நகைகளை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ரங்கநாயகித் தாயாருக்குச் சாத்தி வழிபடுவது வழக்கம். அவர் தலக்காடுக்கு அந்த நகைகளையும் தன்னோடு எடுத்துச் சென்றிடுந்தார்.
இப்போது உடையாருக்கு அந்த நகைகள் தேவைப்பட்டன. அவர் மலாங்கிக்கு தன் சிப்பாய்களை அனுப்புகிறார். அலமேலு தரமாட்டேன் என்று சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பி விடுகிறார். மறுபடியும் ஆட்களை அனுப்புகிறார் உடையார். இம்முறை வெறும் கையோடு திரும்பக் கூடாதென்ற உத்தரவு. அலமேலம்மா மூக்குத்தியை மட்டும் கொடுக்கிறார். மற்ற நகைகளைத் தூக்கிகொண்டு தப்பி ஓடுகிறார். வெறும் கையோடு திரும்பினால் உடையாரின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமென அஞ்சிய சிப்பாய்கள் துரத்துகிறார்கள்.
தன் பலம் கொண்ட மட்டும் நகைப்பெட்டியோடு ஓடிய அலமேலம்மா காவிரியில் குதித்து விடுகிறார். அதற்கு முன் மனமுடைந்து சாபம் கொடுக்கிறார்: “ஓ ரங்கா, நான் உன் பக்தை என்பது உண்மையானால், தலக்காடு மண் மேடாகப் போகட்டும். மலாங்கி நீர்ச் சுழியால் அழியட்டும். மைசூர் ராஜ பரம்பரை வாரிசில்லாமல் போகட்டும்”
பத்தினி சாபமல்லவா, நானூறு ஆண்டுகளாகத் துரத்துகிறது. அதன் பிறகு வரலாற்றுச் சிறப்பு மிக்க தலக்காடு நகரம் நிஜமாலுமே மண் மேடாகிப் போனது. ஆற்றங்கரையில் இருந்து காற்றில் பறந்து வந்த மணல் துகள்கள் வருடத்திற்கு 5 முதல் 10 அடி மணல் அந்த நகரத்தை மூடத் துவங்கியது. படிப்படியாக மக்கள் அவ்வூரை விட்டு வெளியேறத் துவங்கினர். இன்றைக்கு பல மீட்டர் ஆழத்திற்கு மண் மூடிக் கிடக்கிறது. சுமார் 30 கோவில்கள் முற்றிலுமாக மணலுக்கு அடியில் புதைந்து விட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தோண்டித் தோண்டி கல்வெட்டுகளை ஆராந்து கொண்டிருக்கிறார்கள். அவை கன்னடத்திலும், தமிழிலும் இருக்கின்றனவாம்.
இன்னொரு பக்கம் மலாங்கி. U அல்லது V வடிவில் ஆறு வந்து குத்தும் இவ்விடத்தில் அபாயகரமான சுழிகள் உருவாயின. அதன் கரையை ஆறு கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டே போனது. இந்த இரண்டாவது சாபத்தைக் காட்டிலும், மைசூர் ராஜவம்சத்திற்கு வாரிசில்லாமல் போகுமென்ற மூன்றாவது சாபமே முக்கியமானதும், கவனிக்கப்பட வேண்டியதும் ஆகும். உண்மையில் அலமேலம்மாவின் தற்கொலையும், சாபமும் உடையாரைக் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும்.
பழைய விஜயநகர மரபின் படி அவர் தசரா கொண்டாட்டங்களை ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் நடத்தினார். (தலைநகர் மைசூருக்கு மாறியது பிற்பாடு) அவரது மகன்களில் ஒருத்தன் தசராவின் ஒன்பதாவது நாள் இறந்து போனான் என்கிறார்கள். நொறுங்கிப் போன உடையார் அலமேலம்மாவைக் கும்பிட ஆரம்பித்தார். அதன் பின்னர் ஒவ்வொரு தசரா கொண்டாட்டங்களின் போதும், தசரா இல்லாத சமயங்களிலும் மைசூர் உடையார்கள் சபித்துச் சென்ற அலமேலுவை வணங்கிய வண்ணமே இருந்தார்கள்.
இருந்தாலும் சாபம் தொடர்ந்தது. பட்டத்து ராணியின் வயிற்றில் ஆண் வாரிசுகள் உதிக்கவே இல்லை. ஆசை நாயகிகளுக்கு குழந்தைகள் பிறக்கும். ஆனால் முறையான வாரிசென யாருமில்லை. ராஜாவுக்கு குழந்தை இருக்காது. அவர் சொந்தத்தில் யாரைவாது தத்து எடுத்து வாரிசாக ஏற்றுக் கொள்வார். அப்படி வாரிசாகி அரியணைக்கு வரும் ராஜாவுக்கு குழந்தை பிறக்கும். ஆனால் அந்தக் குழந்தைக்கு வாரிசு இருக்காது. இப்படித்தான் 400 வருடத்திற்கும் மேலாகத் தொடந்திருக்கிறது.
எத்தனை ஆடம்பரங்களில் திளைத்தாலும் மைசூர் ராஜாக்கள் அலமேலம்மாவின் சாபத்துக்கு அஞ்சியே வாழ்ந்திருக்கிறார்கள். இலட்சக் கணக்கான மக்கள் திரளும் மைசூர் தசரா திருவிழாவின் போது அரண்மனை வளாகத்தினுள் அமைந்து அலமேலம்மா கோவிலின் மூடிய கதவுகளுக்குள் கங்கணத்தைக் கழட்டி அவளது காலடியில் வைத்து வணங்கிய பிறகே வெளியே வருவார்கள். ஒன்று விட்ட அரசர்கள் வாரிசில்லாமல் போவார்கள் என்பதறிந்து அவர்கள் சொந்தத்தில் ஒரு பையனைத் தத்தெடுப்பார்கள்.
ஆனால் ஸ்ரீகாந்த தத்தா நரசிம்மராஜ உடையார் மட்டும் தத்தெடுக்காமல் தனக்கு எப்படியும் ஒரு ஆண் வாரிசு தரித்து விடுமென்ற நம்பிக்கையில் காத்திருந்தார். தன் கனவில் அலமேலம்மா வந்ததாகவும், தன் முன்னோர் செய்த பாவத்தை மன்னித்து சாபத்தைத் திரும்ப எடுத்துக்கொண்டதாகவும் நிறையப் பேரிடம் நம்பிக்கையோடு அவர் சொல்லிக்கொண்டிருந்தார். டிசம்பரில் அந்த நம்பிக்கை அவரோடு சேர்ந்து மண்ணில் புதைந்து விட்டது.
மறைந்த மன்னரின் மனைவிக்கும், சகோதரிகளுக்குமான சண்டையின் முடிவில் சிருங்கேரி மடாதிபதியின் துணையோடு அறிவிக்கப்படவிருக்கும் இன்னொரு சபிக்கப்பட்ட மகாராஜாவுக்காக் காத்திருக்கிறது மைசூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக