கேட்பது பெண்கள் குணம்; வாங்கிக் கொடுப்பது ஆண்கள் கடமை!!!
ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர்:–லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:1245; தேதி 23 ஆகஸ்ட் 2014
மனு ஸ்மிருதி எழுதிய மனு கொஞ்சம் ஓரச் சார்புடையவர் போலத் தோன்றுகிறது!! பெண்கள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டுமாம்!! அவை என்ன என்ன என்பதில் நகைகளையும், துணிமணிகளையும் சேர்த்துவிட்டார் மனு! இந்த சுவையான விஷயத்தை சிறிது ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்கவேண்டாம்
என்று உலகநாதர் உலகநீதியில் சொன்னால் அது சரி என்று படுகிறது. ஏனெனில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வேதமே போற்றுகிறது. ஆனால் சகோதரியும், மனைவியும் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று மனு தர்மம் கூறுகிறது. இது எந்த வகையில் நியாயம்?
ஒரு நாள் வைர நெக்லஸ், மறு நாள் டிசைனர் ஷூ, டிரஸ், குக்ஸி பை என்று விலை மதிப்பு மிக்க பொருட்களைக் கேட்டால்……………………………………………
இதோ மனு தர்ம சாஸ்திரம் எழுதிய மனு சொல்கிறார்:
யத்ர நார்யாத் பூஜ்யந்தே தத்ர ரமதே தேவதா
யத்ரைதஸ்து ந பூஜ்யந்தே சர்வதத்ரத் அபலா க்ரியா (மனு 3—56)
இதே ஸ்லோகம் மஹாபாரதத்திலும் உளது!
பொருள்: எங்கே பெண்கள் துதிக்கப் படுகிறார்களோ (வாழ்த்தப் படுகிறார்களோ) அங்கே இறைவன் மகிழ்கிறான். எங்கே பெண்கள் போற்றப் படவில்லையோ அங்கே புண்ய காரியங்கள் பலனளிக்காமல் போய்விடும்.
இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் மனு மேலும் சொல்கிறார்:
எங்கே பெண்கள் துன்பப் படுகிறார்களோ அந்தக் குடும்பம் நாசமடையும்–(மனு 3—56)
அப்பாமார்கள், அண்ணன்மார்கள், கணவன்மார்கள், மைத்துனர்கள் ஆகியோருக்கு ஏதேனும் அதிர்ஷ்டம் அடிக்க வேண்டுமானால் அவர்கள் வீட்டுப் பெண்களை மதிக்க வேண்டும், போற்றவேண்டும்—-(மனு 3—55)
பெண்கள் சாபம் விழுந்த வீடுகள் அடியோடு அழியும் —-(மனு 3—58)
ஆகையால் ஆண்கள் நல்லபடி வாழ வேண்டுமானால் விழாக்காலத்திலும் வீட்டு விஷேச காலங்களிலும் எப்போதும் பெண்களை நகைகள், துணிமணிகள், உணவு வகைகள் மூலம் மகிழ்விக்கவேண்டும்—-(மனு 3—59)
ஒரு ஆசார்யார் (குரு), பத்து உபாத்யர்களுக்கு மேல்;
ஒரு தந்தை 100 ஆசார்யார்களுக்கு மேல் பெருமை உடையவர்;
ஒரு தாயோ ஆயிரம் தந்தைகளை விடப் பெருமை வாய்ந்தவள் —–மனு 2-145
பேரழகி ராஜகுமாரி லோபாமுத்திரை
இதற்கெல்லாம் மூல காரணம் உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் உளது. அகஸ்தியர் என்பவர் மிகவும் குள்ளம். அவருக்கு விதர்ப்ப நாட்டு பேரழகி, இளவரசி லோபா முத்ராவின் மீது கொள்ளை ஆசை! கல்யாணத்துக்கு மனுப் போட்டார். அவளோ ராஜகுமாரி. ஐயன்மீர்! ராஜா போல உடை உடுத்திக் கொண்டு வாரும், அத்தோடு ஒரு ராஜகுமாரியை மகிழ்விக்கும் அளவுக்கு நகை நட்டுக்களையும் கொண்டுவாரும் என்று சொல்லிவிட்டாள். அகஸ்தியர் அரண்மனை தோறும் ஏறிஏறிப் பார்த்தார்; பலன் இல்லை. இல்வலன் என்ற அசுரனிடம் கேட்டார். அவன் தம்பி வாதாபியை “வாதாபி ஜீர்ணோ பவ” என்று சாப்பிட்டு ஏப்பம் விட்டதால் அவன் பயந்து கொண்டே பணத்தைக் கொடுத்து, ஐயா, இங்கே இருந்து போய் விடுங்கள் என்று அனுப்பிவைத்தான். அகஸ்தியர் ராஜா போல படுக்கை அறையுள் நுழைந்தார். லோபாமுத்திரை, அகஸ்தியர் மூலம் ததாஸ்யு என்ற பெறும் கவிஞரைப் பெற்றுக் கொடுத்தாள். இது மஹாபாரத வனபர்வத்தில் உள்ள கதை.
லோபாமுத்ராவின் மீது அகஸ்தியர் கண் ஏன் விழுந்தது? அது ஒரு தனிக் கதை. அகஸ்தியரின் முன்னோரின் ஆவிகள் ஒரு பாழுங் கிணற்றில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு புத்திரனைப் பெற்றால்தான் அவர்கள் கடைத்தேறுவார்கள் என்பதை அறிந்த அகஸ்தியர் உலகிலுள்ள எல்லா அழகிகளின் அம்சங்களை ஒன்று சேர்த்து விதர்ப்ப நாட்டு மஹாராணியின் குழந்தையாக ((லோபாமுத்ரா))) கருவுற, தனது தவ வலிமையால் வழிவகுத்தார்.
ஆண் குழந்தையைப் பெற்று அவர்கள் மூலம் பிதிர் காரியங்களைச் செய்யவேண்டும் என்பது (பிதிர் கார்யம்= நீத்தாருக்கு செலுத்தப்படும் நீர்க்கடன்) தொன்று தொட்டு நிலவும் நம்பிக்கை. ஐயன் வள்ளுவனும் இதற்குச் சான்று பகர்வான். சங்கதமிழ் புலவர்களும் இதை ஆதரித்துப் பாடி இருக்கிறார்கள் (காண்க புறம் 222, புறம் 9 பாடல்கள்).
சத்யபாமா, கைகேயி, சீதை
பாரிஜாத மலர் வேண்டும் என்று கேட்ட உடனே கிருஷ்ணர், சுவர்க்கலோகம் சென்று இந்திரனுடன் சண்டை போட்டு பாரிஜாத மலரைக் கொண்டு வந்ததும் பெண்களை மகிழ்விக்கவே!!
இதன் மூலம் மனிதகுலத்துக்குக் கிடைத்த நன்மை:– பாரிஜாத மரம்!!
கைகேயி சொன்னவுடன், ராம பிரான் காடேகியதும் பெண்ணின் வேண்டுகோள் அன்றோ! பொன் மானைப் பிடித்துக் கொண்டு வா என்று ராமனிடம் அடம்பிடித்த சீதையை மகிழ்விக்க ராமனும் ஓடவில்லையா?
இதன் மூலம் மனிதகுலத்துக்குக் கிடைத்த நன்மை:– சிவனுறை கயிலாயத்தையே பெயர்க்க முயன்ற அசுரன் ராவணன் வீழ்ந்துபட்டான்.
திரௌபதி கோரிக்கை
சௌகந்திக மலர் எனக்கு உடனே வேண்டும் என்று திரவுபதி ஒரு அன்புக் கட்டளை இட்டாள். ஓடினான், ஓடினான், பீமன்- காட்டின் ஓரத்திற்கே ஓடினான். வழியில் அவனுடைய அண்ணன் அனுமன் சண்டைக்கு அழைக்கவே அனுமன் பெருமை தெரிந்தது. மாபாரதப் போரில் கொடியில் உட்கார்ந்து கொண்டு உனக்கு வெற்றி தேடித் தருவேன் என்று அனுமன் வாக்குறுதி கொடுத்தான்.
சௌகந்திக மலர்ப்பொய்கையில், அதைக் காத்து நிற்கும் யக்ஷர்களைக் கொன்று குவித்து மலர் பறித்தான் பீமன். குபேரனுக்கு கொள்ளை மகிழ்ச்சி! ஏன்? யக்ஷர்கள் மீது அகஸ்தியர் இட்ட சாபம் அன்றோடு முடிந்தது
இதன் மூலம் மனிதகுலத்துக்குக் கிடைத்த நன்மை:– மாபாரதப் போரில் தர்மம் வென்றது. யக்ஷர்கள் மீதான சாபம் நீங்கியது.
மற்றொரு சமயம் தண்ணீர் வேண்டும் என்று திரவுபதி கேட்கவே, காட்டுக்குள் போன நான்கு சகோதர்களையும் ஏரிக்கரை பூதம் (யக்ஷன்) நாலு பேரையும் விழுத்தாட்டியது. இறுதியில் தர்மன் சென்று ஏரிக்கரைப் பேயின் கேள்விகளுக்குப் பதில் சொல்லி நான்கு சகோதர்களையும் உயிர்ப்பித்து மீட்டு வந்தான்.
இதன் மூலம் மனிதகுலத்துக்குக் கிடைத்த நன்மை: யக்ஷப் பிரஸ்னம் என்னும் பேயின் கேள்வி—பதில் தொகுப்பு. (இதுபற்றி ஏற்கனவே விரிவான கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். படித்து மகிழ்க)
மைத்ரேயி- காத்யாயனி கோரிக்கை
இரண்டு பெண்டாட்டிக்கார ரிஷி யாக்ஞவல்கியர், “பெண்களே, சொத்து சுகங்களைப் பிரித்துக் கொடுத்துவிட்டு காடேகப் போகிறேன். உங்களுக்கு யாது வேண்டும்?” — என்று கேட்க, மைத்ரேயி தத்துவ உபதேச விஷயங்களே தேவை என கோரிக்கை விடுத்தாள். காத்யாயனி செல்வம் முழுதும் பெற்றாள்.
இதன் மூலம் மனிதகுலத்துக்குக் கிடைத்த நன்மை: தத்துவ உபதேசம் (காண்க: பிருஹத் ஆரண்யக உபநிஷதம்)
பெண்கள் கோரிக்கை இத்தோடு நிற்கவில்லை: க்ஷத்ரிய குலப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வதற்காக, வில்லை முறித்தான் ராமன். வில்வித்தையில் வென்றான் அர்ஜுனன். ஆக பெண்கள் என்றால்= கோரிக்கைகள்!!!!
ஆனால் பெண்கள் போட்ட அததனை கோரிக்கை மனுக்களும் மனித குலத்துக்கு நன்மையே செய்ததால், மனு சொல்கிறான். அவர்கள் எதைக் கேட்டாலும் வாங்கிக் கொடுங்கள் என்று!!
மனு வாழ்க!! மனுதர்மம் போற்றும் பெண்கள் வாழ்க, வாழ்க!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக