ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

ஜீவநாடி!


நாடிசோதிடம் குறித்து ஏற்கனவே பல தகவல்கள் அகத்தியர் ஆவணத்தில் இருப்பதாகக் கேள்விப்படுவதாலும், பலர் அதனை நம்பாததாலும், பலருக்கும் அதில் விருப்பம் இல்லாததாலும் அது பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. ஆயினும் ஜீவ நாடி என்னும் அற்புத நாடி குறித்துச் சில மட்டும் அன்பர்களின் பார்வைக்கு... 

நாடியில் குறிப்பிடத் தகுந்த ஒன்றாக ஜீவநாடியைக் கூறலாம். இதை ஒரு அதிசய நாடி என்று கூறினும் தவறில்லை. ஜீவன் என்றால் உயிர். ஜீவிதம் என்றால் வாழ்க்கை. எனவே ஒரு மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வை வழங்குவதுதான் ஜீவநாடியின் சிறப்பாகும். அந்நோக்கிலேயே முனிவர்கள் இதனை இயற்றியுள்ளனர்.

ஜீவநாடி பார்ப்பதற்கு எந்த மனிதரின் கைரேகையும் தேவையில்லை. மேலும் பார்க்க வந்திருப்பவர் தம்மைப் பற்றிய எந்த விவரங்களையும் சோதிடரிடம் கூறவேண்டியதும் இல்லை.

மற்ற நாடிகளில், ஓலையில் எழுத்துக்கள் முன்னரே எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஜீவநாடியில், ஒரு மனிதனின் சிக்கல்களுக்குத் தகுந்தவாறு எழுத்துக்கள் தோன்றித் தோன்றி மறையும். (டிவி. நியூஸ் மானிட்டர் போல). அதுவும் ஒவ்வொரு மனிதருக்கும், அவருடைய பிரச்னைகளுக்குத் தகுந்தவாறு, ஒவ்வொரு மாதிரியான அமைப்பில் காணப்படும். இதுவே ஜீவநாடியின் சிறப்பு மற்றும் தனித்தன்மை எனக் கூறலாம்.

எல்லோரிடமும் இத்தகைய ஓலைச் சுவடிகள் இருக்காது. இதனை வைத்திருக்கும் சோதிடர்கள் மிகவும் ஒழுக்கம் மிக்கவர்களாகவும், தினமும் இறைவழிபாடு செய்பவர்களாகவும், பக்தி மிகுந்தவர்களாகவும், பணம், பொருள், புகழ் போன்றவற்றிற்கு அதிக ஆசைப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும். சுயநலமில்லாமல், சேவை மனப்பான்மையுடன் தான் இந்தத் தொழிலைச் செய்து வர வேண்டுமே தவிர மற்ற ஆசைகளுக்கு இடம் தரக் கூடாது. அவ்வாறு அவர்கள்முறை தவறி நடந்து கொண்டால் நாடி பலிக்காது, மேலும் செயலிழந்து விடும். தவறாக நடந்து கொண்டால், அந்த நாடியை வைத்திருப்பவர்களுக்குத் தண்டனையும், முனிவர்களின் சாபமும் தான் கிடைக்கும். எனவே தான் இத்தகைய நாடிகள், பரவலாக சோதிடர்களிடம் காணப்படுவதில்லை


இந்த ஜீவ நாடியின் சிறப்பு என்னவென்றால், தனி நபரின் சிக்கல்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டின் சிக்கல்களுக்குக் கூட வழிகாட்டுவதுதான். இதன் மூலம் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். நடந்தது, நடக்கின்றது, நடக்கப் போவது என அனைத்தையும், தனிநபர்களுக்கு மட்டுமல்லாது, நாட்டுக்கும் கூடக் கண்டறியலாம். ஆனால் அதற்குச் சம்பந்தப்பட்ட முனிவரின் அருளாசி தேவை, இல்லையெனில் பலன்கள் சரியாக அமையாது.


நாடிசோதிடத்தில் ஆர்வமுடைய, பிரபல நகைச்சுவை நடிகர், இயக்குநர், சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பேட்டியில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், தனது கார் டயர் பஞ்சர் ஆகும் என்ற தகவல்கூட நாடியில் வந்திருந்ததாகத் தெரிவித்திருந்தார். அந்த அளவிற்குத் துல்லியத் தன்மை வாய்ந்தது இந்த ஜீவ நாடி. இந்த நாடியினைப் பார்ப்பதற்கும், விதி அமைப்பும், சம்பந்தப்பட்ட முனிவரின் அருளாசியும் இருந்தாலன்றிச் சாத்தியமில்லை.


மேலும் மற்ற நாடிகளைப் போல் ஒரே இடத்தில் படிக்க வேண்டி அல்லது பற்பல இடங்களுக்கும், அதாவது சில குறிப்பிட்ட செய்திகளைத் தெரிந்து கொள்ள, குறிப்பிட்ட சில இடங்களுக்குச் சில ஆலயங்களுக்குச் சென்றும் படிக்க வேண்டி வரும். அந்தஅளவிற்குத் தெய்வீகத்தன்மை வாய்ந்தது இந்த ஜீவ நாடி. ஜீவ நாடியின் மூலம் பல்வேறு அதிசயச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், பல்வேறு வரலாற்று உண்மைகள் வெளிவந்துள்ளதாகவும் திரு விக்கரவாண்டி இரவிச்சந்திரன், தமது 'முனிவர்களின் சுவடிகளும், முற்பிறவி உண்மைகளும்' என்ற நூலில் ஆராய்ந்து எழுதியுள்ளார்.



ஆதி என்னும் அசுதினாபுரம் கேளப்பா சொல்லுவேன்
இப் பாரதத்ததுப் பெரு நகர் ஆங்கெண் ஔர் விரிசலும்
காலவழி தன்னிலே குறுக்கிடலும் விதியாகும்.
வலுவிழந்தார்ப் போலே வாட்டமது கொண்டார்ப் போலே
நின்றிடினும் கூட்டமது காண ஔர்வழி
உலகுக்கு ஒளி ஒத்து உத்தமர்க்குப் பெரும்பலன்
ஏற்றிய விளக்கொளி என்று ஞானியரும் ஜீவ முக்தரும்
யோகியரும் சித்தாதிப் பெருமுனியோரும் விண்டுரைத்தவாறு
தவ ஒளியாலே ஔர் பலன் துல்லியமாய் எழுந்துபேச
துரிதத்தினால் துரியாதீதம் கடந்து மறு கண்ணும் ஔர்வழி கண்டு
வையகத்தார்க்கு உறவென்னும் ஔர் நிலை பதவி உகந்தே கூட்டவே
பாரதத்தின் பெருமை ஒளி பாருலகோர்க்குக் கண்ணொளியும்
நிறைபலம் காணச் செய்யும் விதியது இனியாகுமப்பா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக