வியாழன், 22 செப்டம்பர், 2016

10. சகரன்
திரிசங்குவின் மகன் ஹரிச்சந்திரன். இவர்கள் வம்சத் தோன்றல் பாகு. அவன் இல்லற சுகத்தில் ஈடுபட்டு மகிழ்ந்திருக்க பகைவர்கள் படை எடுத்து வர, அவன் மனைவி யாதவியுடன் காட்டிற்குச் சென்று வசிக்கலானான். பாகுவை விரட்டியவர்கள் ஹதயர்களும், தலஜங்கா மன்னர்களும். அவர்களுக்கு சகர்கள், யவனர்கள், பரதர்கள், காம்போஜர்கள், பஹ்லவர்கள் உதவினர். காட்டில் மன்னன் பாகு மரிக்க, அவன் மனைவி யாதவி உடன்கட்டை ஏற விரும்பினாள். அவள் கருவுற்றிருந்ததால் அவளை அவுர முனிவர் தடுத்து நிறுத்தி தன் குடிலுக்கு அழைத்துச் சென்று ரக்ஷித்து வந்தார். பாகுவின் மற்றொரு மனைவி யாதவிக்கு விஷமூட்டிக் கொல்ல முயன்றாள். ஆனால், விஷம் அவளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. எனினும் குழந்தை நச்சுடனே பிறக்க அது சகரன் எனப்பட்டது. அவுர முனிவர் சகரனுக்கு சகல கல்விகளையும், வித்தைகளையும் கற்பித்தார். புனித ஆக்னேய அஸ்திரத்தை உபயோகிக்கும் முறையையும் அவன் கற்றான். சகரன் பெரியவனானவுடன் தன் தந்தையை விரட்டிய பகைவர்களை ஆக்கினேய அஸ்திரத்தின் உதவியால் வென்று அவர்களைக் கொல்ல யத்தனிக்கையில், வசிஷ்டர் அவர்களை முடி நீக்கிடுதுல் போன்றவை செய்து அவமானப்படுத்துமாறும், கொல்ல வேண்டாம் என்றும், அவர்கள் வேதங்களைப் பின்பற்றக்கூடாது என்றும் கூறினார். சகரன் தோற்கடித்த மன்னர்கள் கோனசர்ப்பர்கள், மஹிஷகர்கள், தார்வர்கள், சோழர்கள், கேரளர்கள் ஆகியோர்.
சசுர மன்னனுக்கு கேசினி, சுமதி என்று இரண்டு மனைவியர். அவுர முனிவர் அருளால் கேசினிக்கு ஒரு மகனும், சுமதிக்கு அறுபதினாயிரம் புத்திரர்களும் பிறந்தனர். கேசினியின் மகனின் பெயர் பஞ்சஜனன். சுமதிக்கு ஒரு பூசணிக்காய் தோன்ற அதனுள் ஒரு மாமிச பிண்டம் இருந்தது. அதை ஒரு பெரிய நெய் பானையில் வைத்தனர். அதில் நெய் நிரம்பி இருந்தது. அந்த பிண்டத்திலிருந்து அறுபதாயிரம் மக்கள் பிறந்தனர். சகரன் உலகை ஒரு குடைக்கீழ் ஆள திக் விஜய யாத்திரை தொடங்கினான். அதற்காக ஓர் அசுவமேத யாகம் செய்ய யாகக் குதிரையை உலகெங்கும் திரியவிட, அறுபதினாயிரம் மக்களும் அதனைப் பின் தொடர்ந்திட, குதிரை தென்கிழக்குக் கடற்கரையை அடைந்தது. சகர புத்திரர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது குதிரை களவாடப்பட்டது. குதிரையைத் தேடிச் சென்ற அவர்கள் தவம் செய்து கொண்டிருந்த முனிவரைக் கண்டனர். அவர்கள் வருகையால் தவம் கலைந்த முனிவர் அவர்களைக் கோபத்துடன் உற்று நோக்க, அவர்கள் எரிந்து சாம்பலாயினர். அவர்களில் வர்ஹிகேது, சுகேது, தர்மகேது, பஞ்சஜனன் நால்வர் மட்டும் தப்பிப் பிழைத்தனர். சாகரத்திலிருந்து யாகக்குதிரை சகரனால் பெறப்பட்டதால் அது சாகரம் எனப்பட்டது. பஞ்சஜனனின் மகன் அமஷுமனன். அவன் மகன் திலீபன். திலீபன் மகன் பகீரதன் தவம் செய்து கங்கையை உலகுக்குக் கொண்டுவர, வரும் வழியில் சாம்பலான சகர புத்திரர்களைக் காத்து மோக்ஷம் கிடைக்கச் செய்தான். பகீரதனால் புவிக்குக் கொண்டு வரப்பட்ட கங்கை பாகீரதி என்று பெயர் பெற்றது. பகீரதனின் பின் வந்தோர்களில் ரகு, ரகுவின் மகன் அஜன். அவன் மகன் தசரதன். தசரத குமாரன் ஸ்ரீராமச்சந்திரன் அனைவரும் சூரிய வம்சத்தினரே.
www.danvantarinadi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக