ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கீதை-ஒரு அறிமுகம் – 8. அர்ஜுனன் மக்களின் பிரதிநிதி

பாண்டவர் ஐவருள் பகவான் கீதையைப் பார்த்தனுக்கு உபதேசித்தருளியதின் கருத்து யாது? போர் புரிதல் அப்போதைக்கேற்பட்ட அவசரச் செயல் என்றால் அர்ஜுனனைவிட பீமன் அதற்கென்றே துடித்துக்கொண்டிருந்தான், கொஞ்சம் தூண்டியிருந்தால் அவனைக்கொண்டு அக்காரியம் எளிதில் நிறைவேறியிருக்கும். மற்று அமர் புரிதல் அல்ல, அறன் வலியுறுத்தலே அண்ணலின் நோக்கமென்றால் அதற்கேற்றவன் அறக்கடவுளின் வடிவாகிய அண்ணன் யுதிஷ்டிரன். போர் புரிதற்குப் பொருந்தியவன் பீமன், தர்மத்தை உணரத் தகுந்தவன் தர்மராஜா. இவ்விருவரையும் விட்டுவிட்டு, வில்லாளி அர்ஜீனனைப் பொறுக்கி யெடுத்ததில் பொருளொன்றுண்டு. பீமனிடத்திருந்தது முரட்டுத்தனம்; கிட்டத்தட்ட அது விலங்கின் பாங்கு. கீழ்மையே வடிவெடுத்திருப்பவனுக்கு யோக சாஸ்திரம் உதவாது. கீழ்மகன் அதைக் கேட்கவும் மாட்டான், அனுஷ்டிக்கவும் மாட்டான். மூத்தவன் தர்மராஜன் போன்று தெய்வத் தன்மையில் நிலை பெற்றிருப்பவனுக்கு யோக சாஸ்திரம் முற்றிலும் தேவையானதன்று. நூலின் துணையின்றியே அவன் நன்மை கடைப்பிடிக்க வல்லவன். இனி, அர்ஜுனனுடைய பாங்கு இவ்விருவருடைய பாங்குகளுக்கு நடுவில் இருக்கிறது. அவன் விலங்குத் தன்மையைக் கடந்து மேலே வந்துள்ளான். ஆனால் தெய்வத் தன்மையில் இன்னும் அவன் நிலைபெறவில்லை. விலங்குத் தன்மைக்கும் தெய்வத் தன்மைக்கும் இடைநிலையாகிய மனுஷத் தன்மை அர்ஜுனனுக்குச் சொந்தம். நலம், கேடு ஆகிய இரண்டும் மனிதன்பால் கலக்கப் பெற்றிருக்கின்றன. கேட்டைக் களைந்து நலத்தில் நிலை பெற்றிருப்பது மானுட வாழ்க்கையின் குறிக்கோள். கீதா சாஸ்திரம் அதற்கு உற்ற துணையாகிறது. அர்ஜுனன் சாதாரண மனிதரின் பிரதிநிதியாகிறான். அவன் போன்ற மக்கள் எல்லார்க்கும் அது சிறந்த வழிகாட்டியாகிறது. மக்கள் நிலையில் இருப்பார் எல்லாரும் கீதையைக் கற்கவும் அதன்படி நடக்கவும் அதிகாரிகளாகின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக