ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கீதை-ஒரு அறிமுகம் – 15. பிரம்ம வித்தை

வித்தைகள் எண்ணிக்கையில் அடங்காதவைகள். புதிய புதிய பௌதிக ஞானங்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. மனிதனுடைய அறிவு எல்லாத்துறைகளிலும் அதிவேகம் விரி வடைந்து கொண்டே வருகிறது. அதற்கிடையில் மற்றொரு பேருண்மையை மனிதன் உணர்கிறான். புதியதாகப் பெறுகிற இயற்கையின் ஞானம் ஒன்றோ மனிதன் இன்னும் பெறவேண்டிய பகுதி பன்மடங்கு அதிகமாக இருக்கிறது என்பதை ஞாபகமூட்டுகிறத. கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பது எல்லார்க்கும் உண்மை. பரந்த அறிவு வரவர, மேலும் அறிய வேண்டியது அகண்டாகாரத்தில் விரிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதை உணர்ந்த சான்றோர் கேள்வியொன்று கேட்டனர். எதை அறிந்தால் அறிவு பூர்த்தியாகிறது? எதை அறிந்து கொண்டால் இயற்கையின் மர்மம் முழுதும் விளங்கி விடுகிறது? இந்த ஆழ்ந்த ஆராய்ச்சியில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். அனைத்துக்கும் முதற்காரணம் எது என்பதை அன்னவர் அனுபூதியில் உணர்ந்தனர். மூல தத்துவத்தை அறிந்தபின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடை கிடைக்கிறது. மூலப் பொருளைப் பற்றிய வித்தை பிரம்மவித்தை என்ற பெயர் பெற்றிருக்கிறது. வேறு பல பெயர்களைக் கொண்டும் அதை அழைப்பதுண்டு அவைகளுள் பரவித்தை அல்லது பரஞானம் என்பது சர்வ சாதாரணமானது. சமயங்கள் தெய்வத்துக்குக் கொடுத்திருக்கிற பெயரை இந்த ஞானத்துக்கும் கொடுத்துக் கூறுவது இயல்பு. உதாரணம் ஒன்று எடுத்துக் கொள்வோம். சிவஞானம் என்பதும் பரஞானம் என்பதும் வெவ்வேறு ஆகமாட்டா. மெய்ப்பொருளுக்கு விளக்கம் சொல்லுமிடத்து இவையிரண்டும் ஒன்றையே குறிக்கின்றன என்பது வெளியாகும். இந்த பிரம்ம வித்தையைப் புகட்டுவது கீதையின் நோக்கமாகும். அர்ஜுனன் கேட்டது போர் புரிவதா, பின் வாங்குவதா என்பதாகும். அதற்கு இரண்டில் ஒன்றை இயம்புதற்குப் பதிலாக, பிரம்ம வித்தையை ஏன் பகவான் எடுத்துக்கொண்டார் என்ற கேள்வி பிறக்கக்கூடும். அப்போதைக்கப்போது உண்டாகும் சந்தேகங்களை அகற்றி வைப்பது ஒருவித உதவியாகும். புதிய சந்தேகம் பிறப்பதற்கு இடமில்லாது ஐயங்கள் அனைத்தையும் அறவே அகற்றிவைப்பது உயர்ந்த உபகாரமாகிறது. ஒரு ஜீவனுக்குக் கொடுக்கும் கொடைகளுள் முடிவானது பிரம்ம ஞானம். ஜீவாத்மா அதை ஏற்க வல்லவனாகும்போது பரமாத்மா அதை எடுத்து உவந்து அளிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக