ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கீதை-ஒரு அறிமுகம் – 11. கொலை நூல்

பகவத்கீதையைப் படிக்கலாகாது என்று அதைத் தள்ளி வைப்பர் ஒரு சிலர் உண்டு. எப்படியாவது அர்ஜுனனைப் போரில் புகுத்திவிடவேண்டும். அந்த நெருக்கடிக்கு ஏற்றவாறு ஏதாவது பேசவேண்டிய நிர்ப்பந்தம் வந்திருந்தது. அதையெல்லாம் பகர்ந்து கிருஷ்ணன் காரியத்தை நிறைவேற்றிவிட்டான். முடிவாக நிகழ்ந்தது படுகொலை. பாட்டனாரையும் ஆசாரியரையும் அர்ஜுனன் ஒழித்து விட்டான். கொலைபுரிவது பாதகர்களது பொல்லாத செயல். கொலை மறுத்தல் சமயக்கோட்பாடு. எங்ஙனம் இருளும் வெளிச்சமும் ஒன்று சேரவோ, அங்ஙனம் கொலை செய்தலும் கொலை மறுத்தலும் ஒவ்வா. சமயநெறியைப் பின் பற்றுபவர் கொலை நூலைக் கையால் தொடலாகாது என்பது அவர்களது கோட்பாடு.
இனி, கீதா சாஸ்திரம் இக்கோட்பாட்டின் மூலத்தையே துருவி ஆராய்கிறது. இயற்கை முழுதும் ஒரு முடிவில்லாத கொலைக்களம் என்கிறது கீதா சாஸ்திரம். அணுமுதல் அண்டம் வரையில் எங்கும் உயிர் நிறைந்திருக்கிறது. ஒரு துளி ஜலத்தில் எண்ணிறந்த சிற்றுயிர்கள் இருக்கின்றன. நம் அறிவுக்கு அவைகள் சிற்றுயிர். தம் அளவையில் அவைகளும் பேருயிர்களேயாம். நமது மூடிய கைக்குள் அடங்கியிருக்கும் காற்றில் அதே பாங்கில் கணக்கற்ற உயிர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மண்ணினுள் நிறைந்திருப்பதும் உயிர்த் தத்துவம். இவையாவும் ஒன்றையொன்று விழுங்கி வாழவும் வளரவும் செய்கின்றன. வளரும் செடி யொன்றுக்குக் கோடானுகோடி பேக்டீரியா என்னும் உயிர்த் தத்துவங்கள் மண்ணிலிருந்து ஓயாது பலியாகின்றன. உயிர்த் தத்துவம் அடங்கப்பெற்றிருப்பதே உணவு. ஓர் உயிர் மற்றோர் உயிரை வாங்காது வாழமுடியாது. இதுவே இயற்கையின் அமைப்பு. இயற்கையில் எங்குக் கொலைச் செயல் நிகழா திருக்கிறது? பார்க்குமிடமெங்கும் கொலைக்களமே. கண் மூடித்தனத்தை அகற்றிவிட்டுக் கொலைக்களமாக இவ்வுலகைக் காண்பவரே உண்மையின் முதற்படியைக் காண்கின்றனர்.
சிருஷ்டியில் முத்தொழிலும் அடங்கியிருக்கின்றன. ஓர் இடத்தில் சூரியோதயம் என்றால் மற்றோர் இடத்தில் சூரிய அஸ்தமனம். ஓர் இடத்தில் உயிர் பிறக்கிறதென்றால் மற்றோர் இடத்தில் உயிர் இருக்கிறது. உடலை உண்ணுபண்ணுதல் என்றால் உணவை அழித்தல் என்று பொருள்படுகிறது. ஓயாது புதிய உயிர்களாகப் பிறந்துகொண்டிருக்கிற உலகில் அவையாவும் பழைய உயிர்களாக மாறி மடிந்து கொண்டும் இருக்கின்றன. சிருஷ்டிக்கும் சம்ஹாரத்துக்கும் இடைநிலை ஸ்திதி என்று இயம்பப்படுகிறது. ஆக படைத்தல், காத்தல், மறைத்தல் என்ற முச் செயலும் முக்கோணம் போன்று ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. மரணத்தை அறிந்துகொண்டால் மற்ற இரண்டும் எளிதில் விளங்கும்.
இயற்கையைக் கொலைக்களம் என்று ஒப்புக்கொள்பவர் பிறகு கீதா சாஸ்திரத்தைக் கற்றே ஆகவேண்டும். கொலை மறுக்க விரும்பும் நீ கொலைக்களத்துக்குள் வரலாகாது. அதற்குள் வந்தான பிறகு நீ கொலை செய்யா திருக்கமுடியாது. கோழை போன்று போர்க்களத்தில் தயங்கி நில்லாதே. கோழைக்கு மண்ணுலகும் இல்லை; விண்ணுலகும் இல்லை; எவ்வுலகும் இல்லை. ஆண்மையுடன் எழுந்திரு. வாழ்வு என்னும் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்து. ஆயினும் அதனிடத்துப் பற்றுவைக்காதே. போர் நிலத்தில் நீ பாங்குடன் போர் புரிந்தால், போர் கடந்த பெரு நிலத்தைப் பண்புடன் பெற்றிடுவாய் என்பது கீதையின் கோட்பாடு. ஆக, பகவத்கீதை கொலை நூலே. இயற்கை என்னும் கொலைக்களத்தில் வாழ்வு என்னும் கொலைத் தொழிலை நன்கு இயற்றுதற்கு பகவத்கீதை என்னும் கொலை நூலை ஒவ்வொருவனும் கற்றாகவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக