ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கீதை-ஒரு அறிமுகம் – 25. சொரூப லக்ஷணம்

பரம்பொருள் மனம் மொழிக்கு எட்டாதது. அது பிரபஞ்ச மயமாக வடிவெடுக்குமிடத்து அதை ஸத் சித் ஆனந்தம் என்று சொல்லலாம். சொல்லற்கரிய பொருளை ஒரு சொல்லால் விளக்குமிடத்து ஸச்சிதானந்தம் என்பதற்கு நிகரான சொல் வேறு ஒன்றுமில்லை. ஸத் என்னும் சொல் உள்ளது எனப் பொருள்படுகிறது. ஸத்தியம் அல்லது உண்மை அதனிடத்திருந்து வருகிறது. காலத்தால், இடத்தால், செயலால் மாறுபடாதிருப்பது ஸத். காலதேச வர்த்தமானதைக் கடந்திருப்பது பரம்பொருள். அதே ஸத் பொருள் காலத்திலும், இடத்திலும், செயலிலும் தன்னை விளக்கிக் கொண்டிருக்கும்போது எண்ணிறந்த ஜீவகோடிகளாகக் காட்சி கொடுக்கிறது. ஜீவாத்மா தோற்றத்துக்கு வந்துள்ள நிலைமையில் கர்மமும் நிகழ்ந்துகொண்டே இருக்கும். சூரியனிடத்து வெப்பமும் வெளிச்சமும் இருப்பது போன்று ஜீவாத்மாவிடம் கர்மமுண்டு. ஆகவே, பகவத்கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களும் ஜீவதத்துவத்தையும் கர்மயோக தத்துவத்தையும் சேர்த்தே புகட்டிக்கொண்டு போகின்றன. ஆறாவது அத்தியாயத்தில் உள்ள தியானம் அல்லது எண்ணம் சூக்ஷ்மமான கர்மமாகிறது.
இனி, கர்மத்துக்கு அடிப்படையாயிருப்பது சங்கற்பம் அல்லது தீர்மானம். ஆங்கிலத்தில் அதை (வில்) என்று அழைக்கிறோம். கிரியா சக்தி என்பது பரிபாஷையில் அதற்கு அமைந்துள்ள பெயராகும். எல்லாக் கர்மங்களும் வில் அல்லது சங்கற்பத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நடமாட, உண்ண, உறங்க, எழுந்திருக்க மனிதன் முதலில் சங்கற்பிக்கிறான். பிறகு அங்ஙனம் கர்மம் செய்கிறான். சிருஷ்டி முழுதும் சங்கற்பத்திலிருந்து வந்தது. நேராகவோ மறைமுகமாகவோ எல்லா சங்கற்பங்களும் முடிவில் ஒரு சங்கற்பமாய் வடிவெடுக்கின்றது. (வில் டு லைவ்) வாழ விரும்புதல்தான் முடிந்த சங்கற்பம். ஜீவர்கள் எக்கர்மத்தைச் செய்தாலும் அதன் மூலம் வாழ்ந்து நிலைத்திருத்தல் என்பதை நிலைநாட்ட முயலுகின்றனர். அதாவது தங்களது யதார்த்த சொரூபமாகிய ஸத் சொரூபத்தை நிலைநாட்டவே ஜீவகோடிகள் கர்மம் புரிகின்றனர். (காட் இஸ் லைஃப்) என்பது கோட்பாடு ஆத்மாவானது உயிருக்கு உயிர் என்பது அதன் கருத்து. உயிர்களின் நடைமுறை அனைத்தையும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் இவ்வுண்மை விளங்கும். ஆக, கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களும் ஸத்சொரூபத்தை விளக்குதற்கான சாஸ்திரமாகும்.
யந்திரங்கள் கர்மம் செய்கின்றன; உயிர்கள் கர்மம் செய்கின்றன-இவ்விரண்டுக்கும் உள்ள வித்தியாசம் யாது? யந்திரங்களிடத்து உணர்ச்சியில்லை; உயிர்களிடத்து உணர்ச்சியுண்டு. உணர்ச்சியும் உயிர்வாழ்க்கையும் இணைபிரியாதவைகள். உணர்ச்சி விதவிதமான வடிவெடுக்கிறது. விருப்பு வெறுப்பு, நட்பு பகை, ஆசை சினம், பொறை பொறாமை, பாராட்டுதல் புறக்கணித்தல் ஆகிய இவையாவும் உணர்ச்சியின் வெவ்வேறு தோற்றங்களாம். விருப்பு, நட்பு, ஆசை, பொறை போன்றவை உடன்பாடான உணர்ச்சிகள். வெறுப்பு, பகை, சினம், பொறாமை போன்றவை எதிர்மறையான உணர்ச்சிகள். உடன்பாட்டு உணர்ச்சிகள் வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன. எதிர்மறை உணர்ச்சிகள் வளர்ச்சியைத் தடை செய்கின்றன. இவ்வுணர்ச்சிகள் ஆங்கிலத்தில் (எமோசன்) என்னும் பெயர் பெறுகின்றன. உணர்ச்சியைப் பயன்படுத்துமளவு மனிதன் மேலோன் ஆகிறான்.
பகவத்கீதையில் ஏழாவது அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் வரையில் கடவுள் சொரூபத்தை விளக்குவதோடு பக்தியையும் அப்பகுதி வளர்க்கிறது. தூய உணர்ச்சியின் திரள் பக்தி என்னும் பெயர் பெறுகிறது. கேடுடைய உணர்ச்சிகளெல்லாம் பக்தியில் நலம் வாய்ந்த உணர்ச்சிகளாக மாறுகின்றன. கடவுளுடைய மகிமை விளங்குமளவு அவனிடத்து அன்பு அல்லது பக்தி ஊற்றெடுக்கிறது. ஊசியானது காந்தத்தினிடம் கவரப்படுவது போன்று அன்புடைய உயிர் தெய்வத்தினிடம் கவரப்படுகிறது. (காட் இஸ் லவ்) என்பது கோட்பாடு. அன்பே கடவுள் என்பது அதன் கருத்து. அன்பு என்னும் கவர்ச்சி ஓங்குதற்கு ஏற்ப இனிமை மிளிர்கிறது. அது ஆனந்தமாகப் பரிணமிக்கிறது. ஆனந்தம் வளர வளர அது உலப்பில்லா ஆனந்தமாகிறது. ஆனந்தமே பிரம்மம். பரமாத்மாவின் சொரூபம் ஆனந்தம். இந்த ஆனந்தத்தை நாடியே உயிர்கள் வாழ்க்கையில் பற்றுவைக்கின்றன. ஆனந்தம் இல்லாவிட்டால் உயிர்கள் கணப்பொழுதும் வாழ்ந்திருக்கமாட்டா. ஆக, ஆனந்தம் என்னும் ஆத்மசொரூபத்தை வளர்ப்பது கீதையின் இரண்டாவது ஷட்கத்தின் நோக்கமாகும்.
ஜடப்பொருள் ஒன்று இருக்கிறது. சேதனப்பொருள் ஒன்று இருக்கிறது. இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்னவென்று அறியவேண்டும். இருக்கிறேன் என்ற அறிவு சேதனப்பொருளுக்கு உண்டு; அந்த அறிவு ஜடத்துக்கு இல்லை. உயிர்களிடத்து உணர்வு இருப்பது போன்று அறிவு இருக்கிறது. சூரியன் இருப்பதை சூரியப்பிரகாசம் காட்டுகிறது. வேறு வெளிச்சத்தின்துணை கொண்டு சூரியனை நாம் அறிவதில்லை. ஜீவன் உயிரோடிருக்கிறான் என்பதற்கு அவனுடைய அறிவே பிரமாணம். ஒவ்வொரு உயிரும் தன்னைத்தான் அறிந்து கொண்டிருக்கிறது. இங்ஙனம் அறியும் தன்மையை ஆங்கிலத்தில் (காக்னிஷன்) என்கிறோம். அறியும் தன்மையில் ஏற்றத் தாழ்வு உண்டு. பேருயிர்கள் நன்கு அறிகின்றன. சிற்றுயிர்கள் மங்கிய அறிவு படைத்திருக்கின்றன. ஆயினும் அறிவு இல்லாத உயிர் இல்லை. அறிவை வளர்ப்பது வாழ்வின் நோக்கம்.
உணர்வுக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்வு உண்டு. இரும்பை உருக்கினால் அது இளகுகிறது; அத்துடன் ஒளிர்கிறது. இளகும் தன்மை உணர்வுக்கு ஒப்பானது; ஒளிவிடும் தன்மை அறிவுக்கு ஒப்பானது. இந்தச் சான்று ஜடப்பொருளிடத்திருந்து வருகிறது. சேதனப் பொருளாகிய ஜீவாத்மனிடத்து அன்பும் அறிவும் ஒன்றுக்கொன்று துணைபுரிகின்றன. இருநண்பர் ஒருவரையொருவர் நேசிக்குமளவு ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொள்கின்றனர்; ஒருவரையொருவர் அறிந்து கொள்ளுமளவு நேசிக்கின்றனர். கடவுள்பால் அன்பு கொள்ளுமளவு பக்தன் கடவுளை அறிகிறான். அவரை அறியுமளவு அவனுக்குப் பக்தி அதிகரிக்கிறது. இக்கோட்பாட்டை வாழ்க்கையில் எல்லாப் படித்தரங்களிலும் காணலாம்.
அறிவு, ஞானம், சேதனம், பிரக்ஞை இவையாவும் ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள். ஞானத்தை வளர்ப்பதற்கான வழிகளை பகவத்கீதையில் பதின்மூன்றாவது அத்தியாயத்திலிருந்து பதினெட்டாவது அத்தியாயம் வரையில் காணலாம். எரியும் விளக்கு ஒன்று அதிகம் சுடர்விடுமானால் அது தன்னையும் தன்னைச் சுற்றிலுமுள்ள பொருள்களையும் நன்றாக விளக்கிக்காட்டும். அந்த விளக்கைக் காத்துவரும் கண்ணாடிக் கூண்டு ஒன்று இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அழுக்குப்படிந்த கண்ணாடியில் வெளிச்சம் அதிகமாக வெளியே வராது. கண்ணாடியைத் துடைத்துத் தூயதாக்குமளவு வெளிச்சம் தடைபடாது ஒளிரும். அந்தக்கரண சுத்தி பண்ணுவதற்கான வழிகள் ஞான வாழ்க்கையில் காட்டப்பட்டிருக்கின்றன. ஜடம்போன்று தென்படும் ஜீவனை ஞானநெறி சித்சொரூபமாகத் திருத்தியமைக்கிறது. (காட் ஈஸ் லைட்) என்பது கோட்பாடு. ஆத்மா ஜோதிர் மயம் என்பது அதன் பொருள். இங்ஙனம் ஸத் சித் ஆனந்தமாகிய பர சொரூபத்தின்கண் ஜீவனை எடுத்துச் செல்லுதல் பகவத்கீதையின் திட்டமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக