ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கீதை-ஒரு அறிமுகம் – 21. சிறந்த பாஷ்யம் எது?

நூற்றுக்கணக்கான விரிவுரைகள் கீதைக்கு வந்திருக்கின்றன வென்றால் அவைகளில் எதை ஏற்பது, எதை விலக்குவது, எதைக் கற்பது, எதைத் தள்ளுவது என்ற கேள்விகள் எழலாம். சூரியோதயத்தின் அழகை ஒவ்வொரு கலைஞானியும் தன் தன் துறையில் வைத்து சிலாகித்துப் பேசலாம். வானநூல் துறை, மருத்துவ நூல் துறை, இயற்கையழகுத் துறை, கணித நூல் துறை, ஜோதிட நூல் துறை, பருவ விளக்கத்துறை, உயிர் தத்துவத் துறை இன்னும் என்னென்னவோ துறைகளினின்று உதய சூரியனை வர்ணிக்கலாம். அத்தனைவித வர்ணனைகளுக்கும் ஞாயிறு இடங்கொடுக்கும். கீதாசாஸ்திரமும் எண்ணிறந்த சம்பிரதாயங்களை விளக்குதற்கு ஆதரவாகும். அத்தனை விதமான விளக்கங்களையும் அது தன்னகத்து அடக்கிக்கொண்டிருக்கிறது. அவைகளுக்கெல்லாம் மேலாக கீதைக்கென்றே அமைந்துள்ள வியாக்கியானம் ஒன்று உளது. ஒருவிதத்தில் கீதையைவிட அது சிறந்தது. ஸ்ரீ கிருஷ்ணபகவான் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையே அவருடைய கூற்றுக்கு ஒப்பற்ற விளக்கமாகிறது. அவதார புருஷர் ஒருவர் தமது ஜீவிதத்தின் மூலம் புகட்டுவது தான் முதன்மை பெறுகிறது. அவர் பகர்ந்தருள்வது அதற்கு அடுத்தபடியாக வருகிறது. அவதார புருஷருடைய பேச்சுக்கே அருளையும் பொருளையும் தருவது அந்த அவதார புருஷருடைய ஜீவிதம். இக்கோட்பாடு வாசுதேவரது வாழ்க்கையில் உச்ச நிலையைப் பெற்று விளங்குகிறது. மனத்தகத்திருந்து கச்மலத்தைக் களைந்து விடு என்று அவர் புகட்டினார். சூரியனிடத்து எப்படி இருள் இருக்க இடமில்லையோ அப்படி அச்யுதனிடத்துக் கீழ்மை குடிகொள்ள இடமில்லை. ஆற்றல் படைத்தவனாய் எழுந்திராய் என்று இயம்பினார் அவர். பின்பு, ஆற்றல்கள் அனைத்துக்கும் அவரே இருப்பிடமாய் இலங்கினார். உயிர்களிடத்து அன்பு பூண்டு ஒழுகுக என்று அவர் உபதேசித்தார். தாமே அன்பின் வடிவினராய் நன்கு மிளிர்ந்திருந்தார். நலத்தை நிலைநாட்டும் வீரன் ஒருவனுக்கு உற்றார் என்றும் வேற்றார் என்றும் வேற்றுமையில்லையென்று அவர் எடுத்தோதினார். கோவிந்தனது பாங்கும் அங்ஙனமே இருந்தது. இயற்கை கர்மமே வடிவெடுத்தது. அதற்கு ஆதாரமாயிருக்கும் ஆத்மாவின்கண் கர்மமில்லை என்பது கண்ணன் போதனை. கண்ணனாக வடிவெடுத்திருந்த சரீரம் கர்மவீரனாக வினையாற்றியது. மஹாபாரதத்தில் கூடியிருந்த பாத்திரங்கள் எல்லாரும் ஒன்றுகூடிக் கண்ணன் செய்த கர்மத்தில் கால்பங்கு செய்யவில்லை. சரீரம் அவ்வளவு வேலை செய்துகொண்டிருந்ததற்கு இடையில் கிருஷ்ண பரமாத்மா என்றைக்கும் பரமாத்ம சொரூபமாகவே இருந்தார். மற்ற உயிர்கள் போன்று அவர் அழக்கிடையாது; ஏமாற்றம் அடையக்கிடையாது; வியப்படையக்கிடையாது; கவலைப்படக் கிடையாது; துயருறக் கிடையாது. யாண்டும் நிறைநிலையிலேயே இருந்தார். கண்ணனை அறிபவர் கீதையை அறிவார்கள். கண்ணனே கீதைக்குச் சிறந்த பாஷ்யம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக