ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கீதை-ஒரு அறிமுகம் – 13. கீதா சாஸ்திரம் புகட்டுவது யாது?

அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் என்றென்றும் தோழன்; அதற்கு மேல் உறவினனும் ஆகிறான். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள இணக்கத்தின் புறத்தோற்றம் அது. அர்ஜுனனுடைய மனபரிபாகத்துக்கு ஏற்ற உதவியை அப்போதைக்கப்போது கிருஷ்ணன் செய்து வந்தான். நல்ல கல்வி பெறுதல் பயிற்சி பெறுதல், ராஜ்யம் நிறுவுதல், ஆபத்தினின்று தப்பித்துக் கொள்ளுதல், எதிரியினின்று மீளுதல், திரவியம் தேடுதல் இவை போன்ற உலகக் காரியங்கள் அனைத்துக்கும் அவன் சகாயம் செய்துவந்தான். தன் தங்கையையே அர்ஜுனனுக்கு மணம் முடித்துக்கொடுத்தான். இம்மையில் இன்பமூட்டும் இவையாவையும் பிரேயஸ் என்பர் பெரியோர். பல பிறவிகள் எடுத்துப் பிரியமானவைகளைப் பெற்று மகிழ்வுற்றிருக்கின்றனர் ஜீவர்கள். இவையாவையும் உயிர்களுக்கு நல்குபவர் கடவுள். வாழ்க்கையில் பிறகு நெருக்கடி ஒன்று வருகிறது. அர்ஜுனனுக்கு யுத்தம் என்னும் நெருக்கடி வந்தது. யுத்தத்துக்கு அவன் அஞ்சியவன் அல்லன். மகாதேவனையே முன்பு எதிர்த்துப் போர் புரிந்தவன். ஆனால் இந்த நெருக்கடியில் அவனுக்கு மனக்குழப்பம் உண்டாயிற்று. போர்புரிவது சிறந்ததா? எதிர்ப்பவர்க்கு எல்லாம் விட்டுக்கொடுத்து விடுவது சிறந்ததா? செய்வது இன்னதென்று தெரியாது திகைத்தான். அவன் பெற்ற பேறும், புகழும், போகமும் இந்த நெருக்கடியில் பயன்படவில்லை. சுருங்கச் சொன்னால் அவன் பெற்றிருந்த பிரேயஸ் பயன்படாது போய்விட்டது. ஆகவே அச்யுதனிடம் அவன் அடைக்கலம் புகுந்தான். சிஷ்யன் ஆனான்; சிரேயஸைப் புகட்ட வேண்டுமென்று விண்ணப்பித்தான்.
அர்ஜுனனுக்கு அத்தகைய மனநிலை வரும்வரை கிருஷ்ணன் காத்திருந்தான். ஏனென்றால் தோழமையில் பிரேயசை வழங்கலாம்; சிரேயஸை நல்கலாகாது. சிஷ்யபாவனை வரும் முன்பு சிரேயஸைப் புகட்டினால் அது பயன்தராது. பூமி விதைப்புக்குப் பண்படுவது போன்று அர்ஜுனனுடைய மனது சிரேயஸைப் பெறுதற்கு நன்கு பண்பட்டுள்ளது. அதைக் குறித்து கிருஷ்ணன் பெருமகிழ்வடைகிறான். உள்ளன்போடு சிரேயஸை எடுத்துப் புகட்டுகிறான். யோகமும், பக்தியும், ஞானமும் அடங்கப்பெற்றது சிரேயஸ். அது முக்தி மார்க்கம்.
பண்பட்ட பூமிக்குள் நல்ல விதையை விதைப்பது போன்று சிறந்த சாஸ்திரம் ஒன்று எப்பொழுதும் எடுத்த எடுப்பிலேயே சிரேயஸின் உட்கருத்தைத் தெளிவுபட உள்ளத்தினுள் புகட்டி வைக்கிறது. பிறகு அதற்கு விளக்கமாக மற்ற பகுதிகள் பின் தொடருகின்றன. சான்று ஒன்று எடுத்துக் கொள்வோம். தோற்றத்துக்கு அப்பால் இருப்பது பூரணம். தோற்றத்துக்கு வந்திருப்பது பூரணம். பூரணமே யாண்டும் உள்ளது இந்த வாக்கு மூலத்தில் உபநிஷத்தின் உட்கருத்து அனைத்தும் வந்தமைகிறது. பிறகு இதற்கு விளக்கமாக மற்ற பகுதிகள் தொடர்ந்து வருகின்றன. பகவத்கீதையினுடைய போக்கும் இத்தகையதே. முதல் அத்தியாயத்தில், பகவானுடைய பேச்சு ஒன்றும் இல்லை. இரண்டாவது அத்தியாயத்தில், இரண்டாவது, மூன்றாவது சுலோகங்களில் அவர் திருவாய் மலர்ந்தருளுகிறார்.
அதாவது: அர்ஜுனா, ஆரியனுக்கு அடாததும், சுவர்க்கத்தைத் தடுப்பதும், புகழைப் போக்குவதுமான இவ்வுள்ளச் சோர்வு இந்நெருக்கடியில் எங்கிருந்து உன்னை வந்தடைந்தது?
பார்த்தா, அலியின் இயல்பை அடையாதே. அது உனக்குப் பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே, இழிவான உள்ளத் தளர்வைத் துறந்துவிட்டு எழுந்திராய்.
வாழ்க்கைக்குத் திறவுகோலைக் கிருஷ்ணன் இக்கோட்பாட்டில் கொடுத்து அருளுகிறான். கீதையின் மூலக் கருத்து இதுவேயாம். தொடர்ந்து வருகிற ஒவ்வொரு அத்தியாயமும் இதற்கு ஒவ்வொரு விளக்கமாகிறது.
வலிவு படைத்தவனே வாழ்வுக்குரியவன் என்பதை கீதையின் கோட்பாடு. இம்மைக்கும் மறுமைக்கும் உறுதுணையாவது வலிவு. வலிவு உயிரை வளர்க்கிறது; மெலிவு உயிரைத் தேய்க்கிறது. வலிவு நோயை நீக்குகிறது; மெலிவு நோயை வளர்க்கிறது. வலிவு நல்லறத்தையும் நேர்மையையும் நல்குகிறது. மெலிவு மனக்கோணலையும் ஒழுக்கமின்மையையும் யாண்டும் உண்டுபண்ணுகிறது. ஆத்ம போதத்தைப் பெருக்குவது வலிவு; பிரபஞ்ச உணர்ச்சியை ஊட்டுவது மெலிவு. பந்தத்தை மிகைப்படுத்துவது மெலிவு; மோக்ஷத்தை வழங்குவது வலிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக