ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கீதை-ஒரு அறிமுகம் – 17. போதனா முறை

அவதார புருஷர்கள் எல்லாரும் மக்களுக்குத் தாங்கள் புகட்டியவைகளை மிக எளிய முறையில் கொடுத்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கும், பாமரருக்கும் விளங்கும்வண்ணம் மேலாம் தத்துவங்களைச் சுலபமாக்கியிருக்கிறார்கள். அவர்களுடைய உபதேசங்களுக்கு வியாக்கியானம் செய்யவேண்டிய அவசியமில்லை. வியாக்கியானம் செய்ய முயன்றவர்கள் தங்களுடைய கொள்கை அவதார புருஷருடைய கூற்றில் அடங்கியிருக்கிறது என்பதைக் காட்டுதற்கே முன்வந்தனர். தர்க்கம் முதலிய உபகரணங்களைக் கையாண்டவர்களும், பாஷ்யக்காரர்களேயாம். ஆனால் அவதார புருஷர்கள் புகட்டியதிலோ தாய் தன் குழந்தைக்கு எடுத்துச் சொல்வது போன்று அவ்வளவு இனியதும், எளியதுமான முறையைக் கையாண்டிருக்கின்றனர். ஸ்ரீராமன், புத்தர், ஏசுநாதர் போன்றவர்களுடைய போதனைகளை நாம் உள்ளபடி அறிந்து கொள்ளுதற்கு யாருடைய வியாக்கியானமும் நமக்குத் தேவையில்லை.
ஸ்ரீமத் பகவத்கீதையும் போதனா முறையில் மிக எளியதே. மூலத்தை அவரவர்க்குத் தெரிந்த மொழியிலே பெயர்த்தெடுத்துப் படித்துப் பார்த்தால் படிக்கின்றவர்களுக்கு விளங்காத பகுதி மிகக் குறைவு; விளங்குகிற பகுதியே பெரும்பான்மை எனலாம். அது அவ்வளவு எளியதாக இருப்பது மட்டுமல்ல மிக ஆழ்ந்ததாகவும் இருக்கின்றது. பகவத்கீதைக்கு மூலமொழியாகிய சம்ஸ்கிருதத்தில் அமைந்ததே அது ஆழத்தில் செல்லுதற்கு இடங்கொடுத்தது. மொழி அழகானது, விதவிதமான பொருள் அழகாக வடிவெடுக்க வல்லதாக கீதையில் அமைந்திருக்கிறது. விதவிதமான பொருள்களையும் சம்பிரதாயங்களையும் அதில் காணலாம் என்றாலும், அத்தனைவித விளக்கங்கள் ஒன்றோடொன்று முரண்படுபவைகளல்ல. ஆகையால்தான் அது பிரஸ்தானத்திரயத்தில் ஒன்றாக இடம்பெற்றிருக்கிறது.
ஒரு கோட்பாட்டை பகவான் ஓரிடத்தில் பகர்ந்தால் அதன் பொருள் நன்கு விளங்குதற்பொருட்டு வேறு பல இடங்களிலும் வேறு விதங்களில் அதை விளக்குகிறார். சான்றுகள் சில எடுத்துக்கொள்வோம். உயிரோடிருப்பவனைக் குறித்தோ, உயிர் துறந்தவனைக் குறித்தோ பண்டிதன் விசனப்படுவதில்லை என்கிறார் ஓரிடத்தில், ஒரு விதத்தில் பண்டிதன் என்னும் சொல்லுக்கு அது விளக்கமாகிறது. மற்றோர் இடத்தில் சிற்றுயிர் பேருயிர் ஆகிய அனைத்திடத்தும் சமதிருஷ்டி உடையவன் பண்டிதன் என்கிறார். இங்ஙனம் பண்டிதன் என்னும் சொல்லை எங்கெங்கு கையாண்டிருக்கிறார் என்று பார்த்தால் அதற்கு முழு விளக்கம் கிடைக்கின்றது. யோகம் என்னும் சொல்லை அடிக்கடி உபயோகப்படுத்துகின்றார். செயலில் திறமை வாய்க்கப் பெற்றிருப்பது யோகம் என்ற விளக்கம் ஓரிடத்தில் அமைகிறது. மனம் நடுநிலை வகிப்பது யோகம் என்ற விளக்கம் இன்னோரிடத்தில் வருகிறது. வலிய எடுத்துக்கொண்ட வருத்தங்களினின்று விடுபடுவது யோகம் என்ற விளக்கம் இன்னும் ஓர் இடத்தில் வருகிறது. இவைகளையெல்லாம் திரட்டினால் யோகத்தைப்பற்றிய எல்லாக் கோட்பாடுகளும் நமக்கு விளங்குவனவாகின்றன.
புகட்டிய ஒரு கருத்தையே திரும்பவும் அவர் புகட்டுவது போன்று சில இடங்களில் தென்படும். ஆயினும் சொன்னதையே சொல்லுதல் என்னும் குற்றம் அவரைச் சாராது. யோகம் என்னும் சொல் முதல் ஆறு அத்தியாயங்களில் பெரும்பாலும் கரும யோகத்தையே குறிக்கும். இரண்டாவது ஆறு அத்தியாயங்களில் அது சிறப்பாக பக்தியோகத்தைக் குறிக்கும். கடைசி ஆறு அத்தியாயங்களில் அது ஞானயோகத்தைக் குறிக்கும். அஹங்காரம் என்னும் சொல்லும் அங்ஙனமே இடத்துக்கு ஏற்றாற் போன்று விதவிதமாகப் பொருள்படும். ஒரே கோட்பாட்டை கர்மம், பக்தி, ஞானம் ஆகிய மூன்று யோகங்களில் மூன்றுவிதமாகப் பொருள்படுத்தலாம். அப்படிப் பொருள்படுத்துவதும் முற்றிலும் அவசியமாகிறது. ஆத்மா என்னும் சொல் முதல் ஷட்கத்தில் சத் சொரூபமாக வடிவெடுக்கும். இரண்டாவது ஷட்கத்தில் அது ஆனந்த சொரூபமாக அல்லது பிரேமை சொரூபமாக வடிவெடுக்கும். கடைசி ஷட்கத்தில் ஆத்மா சித்சொரூபமாக வடிவெடுக்கும். இவை யாவற்றையும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் பகர்ந்த கோட்பாட்டையே திரும்பவும் பகர்ந்திருக்கின்றார் என்ற குற்றத்தை கீதாசாரியின் மீது நாம் சாட்டமாட்டோம். எதையும் அவர் மிகைபடவோ, குறைவுபடவோ பகரவில்லை. அனைத்தையும் அளந்தெடுத்தே அவர் விளக்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக