மனிதன் உலகில் எப்படி வாழவேண்டுமென்று முன்மாதிரியாயிருந்து தங்கள்
வாழ்க்கையின் மூலம் புகட்டுதலே அவதார புருஷர்களின் முதற் கடமை.
இக்கோட்பாட்டுக்கு மாறுதலாக ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றிப் பகர்வார் உளர். ஸ்ரீ
ராமன் வாழ்ந்தது போன்று நாம் வாழவேண்டுமென்பதும் ஸ்ரீ கிருஷ்ணன் புகட்டியது
போன்று நாம் நடந்துகொள்ள வேண்டுமென்பதும் அவர்களது கொள்கை. ஆனால் இதற்கு
ஆதாரமொன்றுமில்லை. ஆயிரக்கணக்கான அரக்கர்களைக் கொன்றது சில அவதார
புருஷர்களின் அசாதாரணச் செயல். மக்களுள் சிலர் தீ மீது நடக்கின்றனர். தன்
உடல்மீது யானை ஏறி நிற்பதைத் தாங்கும் மனிதன் ஒருவன் இருக்கலாம். இவை
மக்களுள் நாம் காணும் அசாதாரணச் செயல்களாம். எல்லாரும் இப்படிச் செய்ய
வேண்டிய அவசியமில்லை. பிறகு கிருஷ்ணன் போன்று நாம் ஒழுகலாகாது என்று எதைக்
குறித்து இவர்கள் இயம்புகிறார்கள்? கோபியர்கள் பலருக்கு அவன்
வல்லபனாயிருந்தது நமக்கு ஒவ்வாது என்பது இவர்கள் கருத்து. தனக்கு வயது
பத்து ஆவதற்குள் அவனது பிருந்தாவன விளையாட்டுகள் முடிந்துவிடுகின்றன. பத்து
வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுவன் ஒருவன் எண்ணிக்கையில் அடங்காத பேர்களுடன்
தூர்த்தனாய் நடந்துகொள்வது சாத்தியமா? இயற்கை இதற்கு இடந்தருமா?
ஆராய்ச்சிக்குரிய இக்கேள்விகளை நன்றாய் அலசிப் பார்க்கவேண்டும். ஸ்ரீ
கிருஷ்ணனுக்கு ஹ்ருஷீகேசன் என்பது ஒரு பெயர். இந்திரியங்களுக்கெல்லாம் ஈசன்
என்று அது பொருள்படுகிறது. நாம் இந்திரியங்களுக்கு அடிமை. அவன்
இந்திரியங்களுக்கு அதிபதி. உடல் பற்று இருக்கும் வரையில், உடலைத் தான்
என்று எண்ணும் வரையில், உடல் ஞாபகம் இருக்கும் வரையில் பராபக்தி வருவதில்லை
என்பதே ஸ்ரீ கிருஷ்ணன் கோபியர்களுக்குப் புகட்டிய பாடமாகும். உடல்
ஞாபகத்தைக் கடந்து மேலே செல்லுதலே மானுட வாழ்க்கையின் மேலாம் லட்சியமாகும்.
ஆதரிப்பாரற்ற ஆயிரக்கணக்கான பெண்களுக்குக் கிருஷ்ணன் நாயகனாகிறான்.
அவர்களை ஆதரிப்பவன் என்றே அது பொருள்படுகிறது. அவர்களுக்கு அவன் மணாளன்
என்று உடல் தொடர்வு வைத்துக் கருதுபவர்கள் உண்மையை அறியாதவர்கள். இன்றைக்கு
அகதிகளை அரசாங்கம் காப்பது போன்று அன்றைக்கு அவன் அவர்களைக் காத்து
வந்தான். அதற்கேற்ற நெருக்கடி அக்காலத்திலும் சமூகத்தில் உண்டாயிற்று.
கோபிநாதன் என்பதும் ஜகந்நாதன் என்பதும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு உண்டான மற்ற பெயர்கள். ஜீவர்கள் எல்லாரும் கோபிகளாவர். ஏனென்றால் அவர்கள் பிரகிருதியின் வசப்பட்டுப் பிரகிருதி சொரூபமாயிருக்கிறார்கள். அத்தனை உயிர்களுக்கும் அவன் உயிராயிருக்கிறான். பரம புருஷனை நாயகனாக அறிந்து கொண்டவர்களே உண்மையை அறிந்துகொண்டவர்களாவர். உயிர்களுக்கெல்லாம் சாரதியாக மனத்தகத்து எழுந்தருளியிருக்கும் அதே பரமாத்மா அவர்களுக்கெல்லாம் மணாளனாகவும் மனத்தகத்து வீற்றிருக்கிறான். இக்கோட்பாட்டின் பிரகாரம் ஸ்ரீகிருஷ்ணனுடைய மனைவியர்கள் (ஜீவர்கள்) எண்ணிக்கையில் அடங்கமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக