ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கீதை-ஒரு அறிமுகம் – 14. பகவத்கீதா உபநிஷதம்

உபநிஷதங்கள் எல்லாம் நான்கு வேதங்களினின்று வந்தவை. பகவத்கீதையோ மஹாபாரதத்தினின்று வந்தது. ஆயினும் இது உபநிஷதம் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் எல்லா உபநிஷதங்களின் சாரம் இதில் இருக்கிறது. உபநிஷதங்களையெல்லாம் பசு என்று வைத்துக்கொண்டால் பகவத்கீதையை அவை தரும் பால் என்று பகரலாம். பசுக்கள் விதவிதமான நிறமுடையவைகளாக இருக்கின்றன. ஆனால் அவைகளினின்று வரும் பால் வெண்மையானது. பசுவை எல்லோராலும் வளர்க்க முடியாது. அதனின்று பால் கறப்பதும் கஷ்டமானது. பாலை அருந்துவது எல்லார்க்கும் இயலும். பாலினின்று தயிர், வெண்ணெய், நெய் முதலியன செய்துகொள்ளலாம். அங்ஙனம் கீதா சாஸ்திரத்தை இகபரமிரண்டுக்கும் ஏற்ற நல்ல வழிகாட்டியாக வைத்துக்கொள்ளலாம். போகுமிடத்துக்கெல்லாம் பசுவைக் கொண்டுபோக முடியாது. பாலை எங்கு வேண்டுமானாலும் பாதுகாத்து எடுத்துச் செல்லலாம். அதாவது கீதையை நன்றாக அறிந்துகொண்டவர்கள் பிறகு உபநிஷதங்களில் அடங்கியிருக்கும் கோட்பாடு யாதோ என்று கவலைப்பட வேண்டியதில்லை. எல்லார்க்கும் எளிதில் விளங்காத உபநிஷதங்களை விளங்கும்படி செய்து வைத்தவன் கிருஷ்ணன். அதற்கு முகாமையாக அமைந்தவன் அர்ஜுனன். கன்றுக்காகப் பசு பால் சுரக்கிறது. பின்பு அது உலகுக்கும் உணவாகப் பயன்படுகிறது. கீதையும் அங்ஙனம் உலகுக்குப் பயன்பட்டு வருகிறது. ஜீரணசக்திக்கு ஏற்ற அளவு பாலை அருந்தலாம். நோயாளிக்கும் ஆரோக்கியவானுக்கும் அது நல்லுணவு ஆகிறது. கீதையை அவரவர் பரிபக்குவத்துக்கு ஏற்ற அளவு பயன்படுத்தலாம். நல்வாழ்வை இன்று புதியதாகத் துவக்குகிற மனிதனுக்கும் அது பயன்படும்; சாதனத்தில் மேலான நிலைக்கு வந்திருப்பவனுக்கும் பயன்படும். கீதையில் அடங்கியில்லாத இகபர தத்துவம் ஒன்றுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக