ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கீதை-ஒரு அறிமுகம் – 23. வேதாந்தம்

பிரஸ்தானத்திரயம் புகட்டுகின்ற கோட்பாடுகளையெல்லாம் தொகுத்து வேதாந்தம் என்று சொல்லுவது முறை. வேதத்தினுடைய அந்தம் அல்லது முடிவு வேதாந்தம் என்பதாகிறது. இம்மை என்று சொல்லப்படும் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றியும், மறுமை என்று சொல்லப்படும் சுவர்க்கம் முதலிய மறு உலக வாழ்க்கையைப் பற்றியும் பகர்வது வேதம். வேறு ஒரு விதத்தில் அதே கோட்பாட்டைப் பகர்வோமானால் இந்திரியங்கள் மூலம் நுகரப்பரடுகின்ற பிரபஞ்ச வாழ்க்கையைப்பற்றி பேசுவது வேதம். இந்திரியங்களுக்கும் மனதுக்கும் அப்பால் உள்ள பரத்தைப் பற்றிப் புகட்டுவது வேதாந்தம். இந்திரிய வாழ்க்கையைத் தியாகம் செய்தாலொழிய பரம் என்னும் பெருநிலை சித்திக்காது.
இந்தியாவிலும் புற நாடுகளிலும் தோன்றியுள்ள எல்லா மதங்களின் அடிப்படைத் தத்துவங்களை வேதாந்தத்தில் காணலாம். வேதாந்தத்தில் இல்லாத கோட்பாடு உலகில் எந்த மதத்திலுமே இல்லையென்று உறுதி கூறலாம். ஆக, மதங்களுக்கெல்லாம் தாய். மதமாயிருப்பது வேதாந்தம். மெய்ப்பொருளுக்குப் பல பெயர் இட்டு அழைப்பதை வேதாந்தம் ஆமோதிக்கிறது. பெயரையும் விளக்கத்தையும் முன்னிட்டுச் சமயங்கள் பெரிதும் சண்டையிட்டுக்கொள்கின்றன. அடிப்படையாயுள்ள கோட்பாட்டைக் காணுமாறு தூண்டுவது வேதாந்தம். தாகத்தைத் தணிப்பது ஜலமா, தண்ணீரா, பானியா, வெள்ளமா என்று வாதாடாதே. ஜலம், தண்ணீர், பானி, வெள்ளம் என்ற சொற்கள் குறிக்கும் பொருள் யாது என்று ஆராய்ந்து பார். பின்பு வேற்றுமையும் வீண் விவாதமும் ஒடுங்கும். மனிதன் அடையும் மேலாம் நிலையை ஐயம் திரிபு இன்றி விளக்குவது வேதாந்தம்.
இனி துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று மதங்களின் உட்கருத்தைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளவேண்டும். நமக்குப் புலப்படுவது இவ்வுலகம் அல்லது ஜகத் என்பதாம். இதில வாழ்ந்திருக்கும் உயிர்களுக்கு ஜீவர்கள் என்று பெயர். ஜகத்தையும், ஜீவர்களையும் தாங்கியிருக்கும் பெரிய பொருளுக்குப் பரம் என்று பெயர். அது பேரறிவும் பேராற்றலும் படைத்துள்ளது. உலகனைத்தையும், உயிர்கள் யாவையும் அது யாண்டும் ஆண்டுவருகிறது. ஜகத்தில் கட்டுண்டு கிடக்கும் ஜீவர்கள் எண்ணிறந்த பிறவிகளை எடுக்கின்றனர். பிறவிகள் வாயிலாக அவைகள் மேலான நிலைக்குப் போவதும் உண்டு; கீழான நிலைக்கு இறங்குவதும் உண்டு. புண்ணியம் மேல்நிலைக்கு எடுத்துச் செல்லுகிறது; பாபம் கீழ்மையில் ஆழ்த்துகிறது. பரம் அல்லது ஈசுவரனைச் சார்ந்திருந்து ஜகத்தினின்று ஜீவன் விடுதலையடைவது முக்தி. எல்லா உயிர்களும் முக்தி யடையவேண்டும். இக்கோட்பாடு துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று மதங்களுக்கும் சம்மதம். இனி, மூன்று மதங்களின் தனியியல்புகளை ஆராய்வோம்.
துவைத மதத்தின்படி ஜகத், ஜீவன், பரம் ஆகிய மூன்றும் அனுதியானவைகள். அவைகளுக்கு முடிவும் இல்லை, துவக்கமும் இல்லை, பரம்பொருள் ஜகத்தையும் ஜீவர்களையும் ஆளுகின்றார். ஆனால் ஜகத்தும் ஜீவனும் யாண்டும் பரத்துக்கு வேறு ஆனவைகள். ஜீவனானது அவருடைய கருணையால் ஜகத்திலிருந்து விடுதலையடைந்து அவருக்குத் தொண்டனாய் ஆட்படுவது முக்தி. முக்தியிலும் பரம் வேறு, ஜீவன் வேறு.
விசிஷ்டாத்வைதம் என்பது ஒரு விசேஷத்தோடு கூடிய அத்வைதம். கடவுள் ஒருவர்தான் இருக்கிறார். அவருக்கு உடலாயிருப்பது ஜகத். அந்த உடலில் கணக்கற்ற உயிர்த் தத்துவங்களாயிருப்பது ஜீவன். சூரியனிடத்திருந்து கிரணங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை தோன்றி வருவதுபோன்று ஜீவர்கள் பரமாத்மாவின் கிரணங்கள் ஆகின்றனர். பரமாத்மாவைப் பூரணனென்றும் அதில் தன்னை ஓர் அம்சம் என்றும் ஜீவன் சுவானு பவத்தில் அறிந்துகொள்ளுதல் முக்தி. அதற்கு ஜீவன் தன்னைப் பரமாத்மாவிடத்துப் பிரபத்தி பண்ணவேண்டும். பிரபத்தி என்பதும், சரணாகதி என்பதும், அடைக்கலம் என்பதும் ஒரே கருத்தைக் குறிக்கும் பல சொற்களாம். அவர் அருளால் ஜீவன் தன்னை அவருடைய ஓர் அவயவம் என்று அறிந்திருப்பது முக்தி.
அத்வைதம் என்பது இரண்டற்றது எனப் பொருள்படுகிறது. ஜகத் ஜீவன் என்று சொல்லப்படுபவை வேறு, பரம் வேறு அல்ல; உள்ளது ஒரே பொருள். அது அகண்ட சத் சித் ஆனந்தம். தன்னை ஜகத் ஆகவும் ஜீவனாகவும் காட்டிக்கொள்ளுகிற வல்லமை அதனிடத்து உண்டு. அந்த வல்லமைக்கு அதனுடைய மாயா சக்தி என்று பெயர். பிரம்மமும் பிரமத்தினுடைய சக்தியும் இரண்டல்ல. அத்வைதம் என்பதற்கு இரண்டல்ல என்பது பொருள். ஜீவனிடத்துள்ள அக்ஞானத்தால் ஜகத் என்றும் ஜீவன் என்றும் பேதம் அவனுக்குத் தோன்றுகிறது. பிரம்ம ஞானத்தில் பிரம்மம் ஒன்றே யாண்டும் உளது. நதி கடலில் லயமாவது போன்று ஞானமடைந்த ஜீவன் பரத்தில் கலக்கிறான். இது அத்வைதம் புகட்டும் முக்தி. அதை இன்னும் நன்றாகத் தெளிவுபடுத்துமிடத்து, கடலில் தோன்றி, கடலில் நிலைபெற்றிருக்கும் அலையானது, தனது நாம ரூபத்தை அழித்துவிடும்பொழுது பழையபடி கடலாகிவிடுகிறது. அப்படி முக்தி நிலையில் ஜீவன் பரத்தில் ஒன்றுபடுகிறான்.
சாஸ்திரங்களில் துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று நிலைகளுக்கும் இடம் உண்டு. மனிதனுடைய வாழ்க்கையிலேயே இம் மூன்று நிலைகளும் பொருந்திய ஸ்நானங்களைப் பெறுகின்றன. மனிதன் விழித்திருந்து வியவகாரம் பண்ணுகிறான். அது துவைத நிலை. ஆங்குத் தான் வேறு; மற்ற உயிர்கள் வேறு; உலகம் வேறு. பிறகு சொப்பனம் காண்கிறான். சொப்பனத்தில் தென்படும் மனிதர்களும் உலகமும் அவனுடைய மனத்துக்கு அன்னியமானவைகளல்ல. பேதம் போன்று தென்பட்டுக்கொண்டிருக்கும் அபேதநிலை அது. விசிஷ்டாத்வைத நிலையை இது நன்கு விளக்குகிறது. பிறகு சொப்பனமில்லாத அயர்ந்த உறக்கம் வருகிறது. அதில் பிரக்ஞை ஒன்றைத் தவிர பாக்கியெல்லாம் போய்விடுகின்றன. எல்லா அவஸ்தைகளுக்கும் பொதுவாகிய பிரக்ஞை யொன்றே அங்கு மிச்சம். அது அத்வைத நிலையாகும். இந்த மூன்று நிலைகளும் அக்ஞானத்தில் இருப்பது போன்று ஞானத்திலும் வந்து அமைக்கூடியவைகள். இவைகளில் எது பெரியது, எது சிறியது, எது சாதனம், எது சாத்தியம் என்று மதவாதிகள் விரிவாகவும் விதவிதமாகவும் பேசி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக