ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கீதை-ஒரு அறிமுகம் – 19. மஹாவாக்கிய விளக்கம்

உலகில் உள்ள சமயங்கள் போற்றும் உயர்ந்த நூல்களெல்லாம் பொது இயல்பு ஒன்றைப் படைத்திருக்கின்றன. நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ அவை யாவும் மஹாவாக்கியத்துக்கு விளக்கமாக வந்து அமைந்திருக்கின்றன. மஹாவாக்கியம் என்பது பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தைச் சொல்லுகிறது. வேதங்களில் நான்கு மஹாவாக்கியங்கள் அமைந்திருக்கின்றன. அவைகளுள் மிகச் சிறப்புடையது தத் த்வம் அஸி என்னும் மூன்று சொற்களைக் கொண்டது. த்வம்-நீ, தத்-அதுவாக, அஸி-இருக்கிறாய் என்பது அதன்பொருள். ஜீவாத்மாவாகிய நீ பரமாத்மாவாகிய மெய்ப்பொருளுக்கு அன்னியமானவன் அல்லன் என அதற்கு விளக்கம் வருகிறது. இக் கோட்பாட்டை எல்லா சாஸ்திரங்களும் ஏதேனும் ஒரு விதத்தில் இயம்புகின்றன. இதை எடுத்து ஓதாத நூல் உயர்ந்த நூல் ஆகாது. தத் த்வம் அஸி என்னும் மகாவாக்கியத்துக்கு உற்ற உயர்ந்த விளக்கம் என்று பகவத்கீதையைச் சொல்லலாம்.
அது பதினெட்டு அத்தியாயங்களையுடையது. திரிஷட்கம் அல்லது மூவாறு (3*6) என்று அப்பதினெட்டு அத்தியாயங்களும் பகரப்பெறுகின்றன. அவைகளுள் முதல் ஆறு அத்தியாயங்கள் த்வம் (நீ) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற ஜீவதத்துவத்தை விஸ்தாரமாக விளக்கிக்கொண்டு போகின்றன. ஜீவனிடத்துள்ள குறைபாடு, அவன் அடையவேண்டியநிறை நிலை, அதற்காக அவன் எடுத்துக்கொள்ள வேண்டிய முயற்சி ஆகிய இத்தனையும் முதல் ஆறு அத்தியாயங்களில் அடங்கியிருக்கின்றன. இது முதல் ஷ்டகம். ஏழாவது அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் ஈறாக உள்ளவை இரண்டாவது ஷட்கம். மஹாவாக்கியத்தில் தத் (அது) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற பரதத்துவம் அல்லது, பரமாத்மாவை அந்த ஆறு அத்தியாயங்களும் விளக்குகின்றன. உலகனைத்தும் அவர் எப்படியாயிருக்கின்றார், உலகங்களில் அவர் எப்படி அந்தராத்மாவாக இருக்கிறார், பிறகு உலகத்தைக் கடந்தவராகவும் அவர் எப்படி யிருக்கிறார் ஆகிய இவையாவும் இந்த இரண்டாவது பகுதியில் வந்தமைகின்றன. பதின்மூன்றாவது அத்தியாயத்திலிருந்து பதினெட்டாம் அத்தியாயம் வரையில் உள்ள ஆறு அத்தியாயங்களுக்கு மூன்றாவது ஷட்கம் என்று பெயர். மஹாவாக்கியத்தில் அஸி (இருக்கிறாய்) என்னும் சொல்லுக்கு இலக்காயுள்ள பரமாத்ம-ஜீவாத்ம இணக்கத்தை இப்பகுதி தெளிவுபடுத்துகிறது. தத் த்வம் அஸி என்ற மூன்று பகுதிகளுக்கும் சமமான அந்தஸ்து கொடுத்திருப்பது பகவத்கீதை. அந்தந்தப் பகுதியை அது ஓர்மைப்படுத்தி விளக்கியிருப்பது போன்று தெளிவாகவும் முறையாகவும் வேறு ஒரு நூல் செய்யக்கிடையாது. ஆக, மஹாவாக்கியத்துக்கு முறையான வியாக்யானம் என்று இதை இயம்ப வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக