ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கீதை-ஒரு அறிமுகம் – 7. நர – நாராயணன்: கிருஷ்ணார்ஜுனன்

முன்பு ஒரு காலத்தில் நாராயணன் என்றும், நரன் என்றும் பெயர் தாங்கி வந்த இரண்டு ரிஷிகள் துவாபரயுகத்தின் இறுதியில் கிருஷ்ணனாகவும் அர்ஜுனனாகவும் அவதரித்தார்கள் என்னும் கோட்பாடு ஒன்று உண்டு. பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடையிலுள்ள தொடர்பை இக்கோட்பாடு விளக்குகிறது. இன்னும் வேறு பாங்குகளிலும் உபநிஷதங்களில் இக்கருத்து விளக்கப்பட்டிருக்கிறது. இரண்டு பறவைகள் ஒரு மரத்தில் அமர்ந்திருந்தன. ஒன்று தன் மஹிமையில் நிலைபெற்றதாயிருந்தது. மற்றொன்று இனியவையும் இன்னாதவையும் ஆகிய கனிகளை உண்டு இன்ப துன்பத்துக்கு ஆளானது. அது துன்பப்படும்பொழுதெல்லாம் மேலான நிலையிலிருந்த பறவையை நினைந்து அதனருகில் வர முயன்றது. அருகில் வரவர அதன் இன்னல் குறைந்தது. தான் மற்ற பறவையின் தோற்றம் என்று உணர்ந்தது. பிறகு செயலற்ற பறவையில் அது லயமாயிற்று. ஜீவாத்மா நிறைநிலையடைந்து பரமாத்மாவில் லயமாகும் பாங்கு இங்ஙனம் விளக்கப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் ஏற்பட்ட இணக்கம் இக்கோட்பாட்டை நன்கு தெளிவுபடுத்துகிறது. இருவரும் இணைபிரியாத தோழர்கள். அப்போதைக்கப்போது அர்ஜுனனுக்கு வந்த குறைகளைக் கிருஷ்ணன் அகற்றி வைத்தான். பள்ளியில் பயிற்சி பெற்றபொழுது துணை; விளையாடியபொழுது துணை; போட்டிகள் பல போட்டபொழுது துணை; வனவாசத்தில் வருந்திக்கொண்டிருந்தபொழுது துணை; மணம் புரிந்துகொள்ள விரும்பியபொழுது தன் தங்கையையே மணம் செய்வித்துத் துணை; போர்க்களத்தில் துணை; பிறகு கீதோபதேசம் என்ற ஞானோபதேசம்; இதுவே முடிவான துணை. பல பிறவிகளில் பகவான் மனத்தகத்து வீற்றிருந்து ஜீவர்களுக்கு அப்போதைக்கப்போது தேவையானவைகளைத் தந்தருள்கின்றார். இவையாவையும் வைத்தனுபவித்தான பிறகு வாழ்க்கையில் பெரியதொரு நெருக்கடி வருகிறது. பெற்ற செல்வமும், சுற்றமும், பதவியும், போகமும் அப்பொழுது ஒன்றுக்கும் உதவாதவைகளாகத் தென்படுகின்றன. மனத்தினுள்ளே இருள் சூழ்ந்து விடுகிறது. வாழ்வு வெறும் சூன்யமாய்த் தோன்றுகிறது. ஒவ்வோர் உயிரும் ஒரு காலமல்லாவிட்டால் ஒரு காலத்தில் அத்தகைய சோதனைக்கு ஆளாகவேண்டும். பரஞானம் ஒன்றே அவ்வேளைக்கு உற்ற துணையாகிறது. பரஞானத்தைப் பெற்ற பின்பே வாழ்வின் உட்பொருள் ஜீவனுக்கு உள்ளபடி விளங்குகிறது. கருமத்தின் கதி, ஜீவிதத்தின் பாங்கு, மரணத்தின் அவசியம் ஆகியவைகள் பரஞானம் வருவதற்கு முன்பு விளங்கமாட்டா. பிறவிப் பிணியையும் பிற பிணியையும் வேரறப் போக்கவல்லது பரஞானம். அதைப் பெறுதற்கேற்ற தருணம் வாய்த்தபொழுது பகவான் பரிவுடன் பார்த்தனுக்கு அதைப் பகர்ந்தருளினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக