ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கீதை-ஒரு அறிமுகம் – 22. பாஷ்யங்களின் பாகுபாடுகள்

பாஷ்யங்கள் பல இருப்பதால் அவைகளுள் முரண்பாடு உண்டாவது இயல்பு. மாறுபடுகின்ற கருத்துக்களையெல்லாம் மேலானவைகளாக அங்கீகரிப்பது எங்ஙனம் என்ற கேள்வி எழலாம். மாறுபாடுகளுக்கிடையில் ஒற்றுமை பல அமைந்தாகவேண்டும். பகவத்கீதையை ஒரு நிலைக்கண்ணாடி என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு பாஷியமும் அதில் தோன்றும் பிம்பம் போன்றதாகும். அவரவர் முகம் எப்படியோ அப்படியே பிம்பமும் தென்படுகிறது. கண்ணாடியில் தோன்றுவது என்பது அனைத்துக்கும் பொதுவானது. அங்ஙனம் ஒவ்வொரு கொள்கைக்கும் மூலக்கருத்து கீதையில் இருக்கவேண்டும். மூலக்கருத்து கீதையில் இல்லாவிட்டால் வியாக்யானம் வைதிகத்துக்கு ஒவ்வாததாய்விடும். வைதிகத்துக்கு ஒத்ததாய் இருந்துகொண்டே விரிவுரைகள் பலவாக வடிவெடுப்பதுதான் முறை. ஒருவர் கீதையை முற்றும் பக்திநூல் என்று பகரலாம். இன்னொருவர் அதை ஞானமார்க்கம் என்று நவிலலாம். மற்றொருவர் அதை யோசாஸ்திரம் என்றே எடுத்துக்காட்டலாம். இகலோகத்தைப் பற்றிய பேச்செல்லாம் வெறும் பெயரளவில் என்று ஒருவர் நிரூபிக்கலாம். பரத்தைப்பற்றிப் பேசவேண்டியது அவசியமில்லை; சொற்பதங் கடந்த பொருளைப் பற்றிப் பேச்சு எதற்காக? கீதை பகர்வதெல்லாம் பாரமார்த்திகத்தை அடிப்படையாகக்கொண்ட சீரிய சமுதாய வாழ்க்கையே என்று ஒருவர் எடுத்தோதலாம். அரசியல் தத்துவம் அதில் ஏராளமாய் இருக்கிறது என்று ஒருவர் பொருள்படுத்தலாம். அங்ஙனமே ராணுவ தத்துவம் அதில் பொதிந்து கிடக்கிறது என்று இன்னொருவர் இயம்பலாம். இப்படியெல்லாம் வியாக்யானம் செய்தவர்கள் சிறுபான்மையோர்.
பாஷ்யக்காரர்களில் பெரும்பான்மையோர் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய மூன்று மதங்களில் ஏதேனும் ஒன்றைச் சார்ந்தவர்களாயிருந்து வருகின்றனர். அவர்களுடைய மனப்பான்மையும் அதற்கேற்றவாறு மாறியமைகிறது. கீதா தத்துவத்துக்கு அவர்கள் பொருள் தருவதும் அவரவர் மனப்பான்மைக்கு ஏற்றபடி மாறியமைந்து வருகிறது. இனி, அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்கள் எல்லார்க்கும் அதில் ஒரே விதமான நம்பிக்கையிருக்கிறது என்று சொல்ல முடியாது. அவர்களது கொள்கையில் உட்பிரிவுகள் ஏராளமாயிருக்கின்றன. எது அத்வைதம் என்பதை அத்வைதிகளே விதவிதமாக விளக்குவார்கள். அதேபாங்கில்தான் விசிஷ்டாத்வைதமும் அமைந்துள்ளது. விசிஷ்டாத்வைதம் என்னும் எல்லைக்குள் இருப்பவர்களுள் கருத்துவேற்றுகளைக் காணலாம். மற்று துவைத மதத்திலும் உட்பிரிவுகளை ஏராளமாகக் காணலாம். அவரவர் கோட்பாட்டைப் பரப்புதற்கென்றே ஒவ்வொருவரும் பாஷ்யம் எழுத முன்வந்தார். அத்வைத சம்பிரதாயத்துக்குச் சிறந்த முன்மாதிரியாயிருப்பவர் ஸ்ரீசங்கராச்சாரியர் ஆவார். விசிஷ்டாத்வைதிகள் அனைவர்க்கும் பிரதிநிதியாயிருப்பவர் ஸ்ரீ ராமானுஜாச்சாரியர். துவைத மதவாதிகள் எல்லார்க்கும் முன்னணியில் இருப்பவர் ஸ்ரீ மத்வாச் சாரியர். பகவத்கீதைக்கு இம்மூவரும் பாஷ்யங்கள் இயற்றியிருக்கின்றனர். இம்மூவரும் தென்னிந்தியாவில் தோன்றியவர்கள் என்பதும் கருத்தில் வைக்கவேண்டிய விஷயமாகும். ஒரு மதத்தைச் சேர்ந்தவர் மற்ற மதத்தை அல்லது மதங்களைத்தாக்குவதையும் பாஷ்யங்களில் காணலாம். தத்துவ ஆராய்ச்சி என்ற முறையில் ஒரு கோட்பாட்டைத் தகர்த்தல் நியாயமே. ஆனால் அதில் வரம்பு கடந்து போவது யாருக்குமே பொருந்தாது. அச் செயலில் சில பாஷ்யக்காரர் வரம்பு கடந்தும் போயிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக