ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கீதை-ஒரு அறிமுகம் – 24. கிருஷ்ணனது பான்மை

சுருதி என்று சொல்லப்படும் வேதாந்த சாஸ்திரம் கிருஷ்ணனை விளக்க முயலுகிறது. கிருஷ்ணன் என்பதும் பரமாத்மா என்பதும் ஒன்றே. ஒரு தேகத்துக்குள் கட்டுப்பட்டவன்போன்று அவன் தென்படுகிறான். உடைக்குள் கட்டுப்பட்டதுபோன்று நமது உடல் தென்படலாம். ஆனால் உடையிருப்பதாலும் போவதாலும் உடலுக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. கண்ணன் காயத்தோடு அங்ஙனம் சம்பந்தப்பட்டவன் போன்று இருந்தான். லோக ஹிதத்தின் பொருட்டு உடல் என்னும் அங்கியை அவன் விளையாட்டுக்காக அணிந்தவன் ஆகிறான். அவன் துவைதியுமல்லன், விசிஷ்டாத்வைதியுமல்லன், அத்வைதியுமல்லன். இம் மூன்று சம்பிரதாயங்களும் அவனுக்குச் சேவை புரிகின்றன. அவனைக் காணவும், உணரவும், இணக்கம் கொள்ளவும் அம் மூன்று மதங்களும் தம்தம் போக்கில் முயலுகின்றன. மூன்று மதங்களையும் அவன் தன்னகத்து அடக்கியிருக்கின்றான்; பிறகு அவைகளுக்கு அப்பாலுமிருக்கிறான்.
நீ அத்வைதியாயிரு, விசிஷ்டாத்வைதியாயிரு, துவைதியாயிரு என்றெல்லாம் கீதை புகட்டுவதில்லை. ஆத்மபோதம் அடையப்பெற்றவன் ஆவாயாக. உனது பேரியல்பில் நிலைபெற்றிரு. பேராற்றல் படைத்துள்ள நீ கரவாது உன் கடமையைச் செய். வெறும் புன்மையனாகப் பிழைத்திருக்க நீ இந்தப் பூலோகத்துக்கு வந்துள்ளவனல்லன். உலகுக்கும் உனக்கும் தொடர்வுண்டு. அதை நிலைநாட்டுவது யோகம். தூக்கி வினைசெய்து அத்தொடர்வை நிரூபிப்பாயாக. ஆத்ம சொரூபத்தில் அனைத்தையும் அடக்கிக்கொள்வாயாக. மலரானது மணம் வீசுவது போன்று உன் அன்புக்கு அனைத்தும் இலக்காகட்டும். ஒளிவீடும் ஞாயிறு போன்று உன் அறிவு ஓங்கியிருப்பதாகுக. பிறகு அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய மதங்கள் தங்களுக்குரிய ஸ்தானங்களை உன் ஆத்ம சொரூபத்தில் பெறுகின்றன. இங்ஙனம் யோகேசுவரன் உயிர்களை யோகிகள் ஆகும்படி தூண்டுகிறான்.
ஓரளவில் கண்ணன் காட்டிய வழியையே ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பின்பற்றுகிறார். அவர் சமயங்களின் உயர்வு தாழ்வைப் பற்றிக் கவலைப்படவில்லை. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய சம்பிர தாயங்களைப் பற்றியும் அவர் நினைக்கவில்லை. வாழ்வு எவ்வளவு சீரிய வாழ்வாகவேண்டும் என்பதிலேயே அவர் கருத்தைச் செலுத்தினார். அருள் தாகம் பிடித்து அவர் அலைந்து திரிந்தார். உடலைக்கொண்டு அவர் உழைத்ததெல்லாம் தெய்வ வழிபாட்டிற்கென்றே; உள்ளத்தில் அவருக்கு எழுந்த உணர்ச்சி யெல்லாம் இறைவனைப்பற்றியதே. அவருடைய தூய தெய்வீக அன்புக்கு இலக்காகாதது ஒன்றுமில்லை. தெய்வத்தைத் தவிர வேறு எந்த உறவையோ, இணக்கத்தையோ அவர் அறிந்திலார். தெய்வ அருள் ஒன்றே அவர் பெற்ற பேறு. இங்ஙனம் கீதையின் கோட்பாடே வடிவெடுத்தவராய் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸர் வாழ்ந்துவந்தார். ஆனால் அவர் கீதையையோ வேறு எந்த சாஸ்திரத்தையோ கற்றது கிடையாது. புத்தகப் படிப்புக்கும் அவருக்கும் வெகுதூரம். பெருவாழ்வினின்று அவர் பெற்ற அனுபவங்களையே அவர் மற்றவர்களுக்குப் பகர்ந்தருளினார். அவருடைய உபதேசங்கள் எங்கெல்லாம் கீதைக்கு ஒத்திருக்கின்றனவோ ஆங்கெல்லாம் அவைகளை நமக்கு எட்டியவளவு கீதையுடன் இணைத்து அமைத்துள்ளோம். அத் துறையில் நாம் செய்துள்ள முயற்சி மிகக் குறைந்தது. அதை இன்னும் விரித்தும் திருத்தியும் அமைக்கலாம் என்பதை வினய பூர்வமான மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆக, எந்த சமயத்தையோ சம்பிரதாயத்தையோ நிலைநாட்டுதற்கு என்று அல்லாது, யோக சாஸ்திரம் என்கிற முறையில் ஸ்ரீமத் பகவத் கீதையை விளக்க ஈண்டு முயன்றுள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக