ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கீதை-ஒரு அறிமுகம் – 1. பிரஸ்தானத்திரயத்தில் ஒன்று

ஒவ்வொரு மதத்துக்கும் சாஸ்திரம் இன்றியமையாதது. மதம் மாறிப் போகாதிருப்பதற்கும், மறைந்து போகாதிருப்பதற்கும் சாஸ்திரம் துணைபுரிகிறது. எந்த சமயத்துக்கு சாஸ்திரம் இல்லையோ அது விரைவில் உரு மாறியமைகிறது. பின்பு நிலையற்றதாய் அது அழிந்துபட்டுப் போகிறது. ஆனால் ஒரு நூலை உறுதியான பற்றுக்கோடாகக் கொண்டுள்ள மதம் என்றைக்கும் அசைவற்றிருக்கிறது. எதிர்ப்புகளையும், தாக்குதல்களையும் அது தாங்கி நின்று மீளுகிறது. உலகத்தில் நீடுழி நிலைத்துள்ள மதங்களுக்கெல்லாம் அதனதன் சாஸ்திரங்கள் உள. இந்து மதத்தில் கணக்கற்ற சாஸ்திரங்கள் இருக்கின்றன. பொதுவாக அவையனைத்துக்கும் வேதங்களே முதற் காரணமானவைகளென்று பகர்வார்கள். வேதங்களில் பல பகுதிகள் மறைந்து போய்விட்டன. ஆனால் வேதங்களினின்று தெள்ளி யெடுத்த உபநிஷதங்கள் நன்கு காப்பாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. மெய்ப்பொருள் ஆராய்ச்சியில் உபநிஷதங்களின் போக்கு எத்தகையது என்று இயம்புவது பிரம்ம சூத்திரம். இதற்கு வேதாந்த சூத்திரம் என்பது மற்றொரு பெயர். உபநிஷதங்களில் அடங்கியுள்ள கருத்துக்களையெல்லாம் தெளிவுபட விளக்குவது பகவத்கீதை. உபநிஷதங்களைப் பசுக்கள் என்று வைத்துக் கொண்டால் பகவத்கீதையைப் பால் என்று பகரலாம். நேரே பாலைப் பெற்றுக்கொள்ளும் வசதி வாய்க்கப்பெற்றவர்களுக்குப் பசுவை வளர்க்கும் சிரமம் வேண்டியதில்லை.
உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய இம் மூன்று நூல்களும் பிரஸ்தானத்திரயம் என்னும் பெயர்பெறுகின்றன. முடிவான பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது அதன் பொருள். இம்மூன்றனுள் கருத்து வேற்றுமை கிடையாது. தத்துவ விளக்கம் அல்லது மெய்ப்பொருள் விளக்கம் இவைகளுள் முறையாக அமைந்திருக்கிறது. ஹிந்து மதத்துக்கு சாஸ்திரம் எது என்னும் கேள்வி எழுமிடத்துப் பிரஸ்தானத்திரயம் என்றே பதில் அளிக்கவேண்டும். இவைகளில் அடங்காத தத்துவ விளக்கம் வேறு எந்த நூலிலும் இல்லையென்று உறுதி கூறலாம். மற்ற சாஸ்திரங்களில் சொல்லியுள்ள கோட்பாடுகள் பிரஸ்தானத்திரயத்தில் அடங்கியுள்ள கோட்பாடுகளுக்கு விளக்கமாக வந்து அமையலாம். அப்படியல்லாது முரண்படுபவைகளாக வந்தமையுமானால் முரண்படுகிற மற்ற சாஸ்திரங்களைப் புறக்கணிப்பது இந்தியாவில் தொன்றுதொட்டு நடைமுறையில் வந்துள்ள ஐதிகமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக