சாஸ்திரம் ஒன்று எல்லார்க்கும் பொதுவாவதற்கு விதிகள் சில உள. அத்தகைய நூல் எந்த மொழியில் அமைந்திருக்கிறது அல்லது எத்தனை மொழிகளில் இயற்றப்பெற்றிருக்கிறது என்பது முக்கியமானதன்று. எத்தனை பிரதிகள் அச்சிடப்பெற்று எத்தனைபேர் கைவசம் அது சேர்ந்துள்ளது என்பதும் முக்கியமல்ல. எத்தனை ஆயிரம் பேர் அல்லது லக்ஷம் பேர் அதை நாள் தோறும் ஓதுகிறார்கள் என்பதும் அந்நூலுக்கு மகத்துவம் கொடுத்துவிடாது. மொழியை முன்னிட்டு மனிதன் மேலோன் ஆகான். பின்பு ஒழுக்கமே மேன்மைக்கு முதற்காரணம். பெரும்பான்மையோர் கையாளுதலைப் பொறுத்தும் ஒரு நூலுக்குச் சிறப்பு வந்துவிடாது. சமாசாரப் பத்திரிகையைப் பெரும்பாலோர் நாள்தோறும் பார்க்கிறார்கள். ஆனால் அதன் மதிப்பு அன்றன்று அகன்று போகிறது. முக்தி நெறியை ஆராய்பவர் சிலரே. அதன்படி ஒழுகுபவர் அதிலும் சிலர். இனி, முக்தியை அடைவது அரிதிலும் அரிது. ஆயினும் முக்தி மார்க்கத்துக்கு என்றைக்கும் எல்லார்க்கிடையிலும் மதிப்பு உண்டு. ஏனென்றால் ஒரு காலம் அல்லாவிட்டால் வேறு ஒரு காலத்தில் எல்லாரும் அவ்வழிக்கு வந்தாகவேண்டும்.
கீதாசாஸ்திரத்தை ஸர்வகத சாஸ்திரம் (யுனிவர்செல் ஸ்கிரிப்சர்) என்றும், பொதுநூல் என்றும் பகருதற்குத் தக்க காரணங்கள் உண்டு. முக்தி மார்க்கத்தைப் புகட்டும் சாஸ்திரங்களே யாவற்றிலும் மேலானவைகள். முக்தி அடைதற்கு நிகரான பேறு மனிதனுக்கு இல்லை. இக்கோட்பாடு யாவர்க்கும் ஒப்ப முடிந்தது. கீதா சாஸ்திரம் முக்தியைப் புகட்டுகிறது. வாழ்க்கையின் குறிக்கோள் முக்தி என்பதை அது நன்கு தெளிவுறுத்துகிறது.
வாழ்க்கையின் குறி முக்தி. அதற்கு உற்ற நெறி யோகம். கர்மம், பக்தி, ஞானம் ஆகிய மூன்று யோகங்களும் முறையே கீதையில் இடம் பெறுகின்றன. இரண்டு சிறகுகளும் ஒரு வாலும் இருந்தால் பறவை பறக்கும். ஜீவன் பரத்தை அடைதற்கு ஞானமும் பக்தியும் சிறகுகளாக அமைகின்றன. கர்மயோகம் சமப்படுத்தும் வால் ஆகிறது. எல்லாச் சாதனங்களும் இம்மூன்றினுள் அடங்கியிருக்கின்றன. பரத்தை எண்ணியெண்ணி இகத்தை மறந்துவிடும்படி புகட்டும் நூல்கள் உண்டு. இகத்தில் கருத்து அனைத்தையும் வைத்து மேலாம் நிலையாகிய பரத்தைப் புறக்கணிக்கும்படி போதிக்கும் புல்லிய நூல்களும் உண்டு. ஆனால் பகவத்கீதையோ இகம் பரம் இரண்டுக்கும் உரிய இடத்தை முறையாக வகுத்து வழங்குகிறது. அவைகளுள் ஒன்று மற்றொருன்றுக்கு முரண்பட்டதன்று என்பது கீதையின் கோட்பாடாகும். இக வாழ்க்கையை நன்கு நடாத்துபவன் பரத்துக்கு உரியவன் ஆகிறான். பரத்தைச் சார்ந்திருக்க வல்லவன் இகத்துக்கு நன்கு பயன்படுகிறான் என்பது கீதையின் போதனையாகிறது.
கர்மத்தை இரண்டு பாங்குடையவைகளாகப் பிரித்து வைப்பவர் உளர். ஒன்றைப் பாரமார்த்திகத்துக்கு உரியது என்றும் மற்றதை இகலோகத்துக்குரியதென்றும் அன்னவர் கருதுகின்றனர். அவ்விரண்டு பிரிவுகளுக்கும் உரிய பதங்களை முறையே வைதிக கர்மம், லௌகிக கர்மம்; (சேக்ரட் அண்டு செக்குலர் ஆக்டிவிடீஸ்) ஆத்ம சாதனம், உலக வியவகாரம்; அருள் நாட்டம், பொருள் இன்பநாட்டம் இப்படியெல்லாம் பகர்கின்றனர். ஆனால் பகவத் கீதையானது வாழ்க்கையை இரண்டாகப் பகுத்து வைக்கிறதில்லை. ஆகையால் மனிதன் புரியும் கர்மத்தை மேலானது என்றும் கீழானது என்றும் அது பாகுபடுத்துவதில்லை. நல்வாழ்க்கை வாழத் தெரிந்துகொண்டவன் ஒருவன் எல்லாக் கர்மங்களையும் ஆத்ம சாதனத்துக்குரியவைகளாக்கலாம். நல்வாழ்க்கை வாழத் தெரியாதவன் ஒருவன் கடவுள் வழிபாடு போன்ற மேலாம் கர்மத்தைக் கெடுத்து பந்தபாசத்துக்குரிய தாக்கிவிடலாம். வினைகளை யெல்லாம் மேலாம் வினைகளாக மாற்றக் கற்றுக்கொடுப்பது பகவத்கீதை. இக்கோட்பாடு இந்த நூலின் தனிச்சிறப்பு ஆகும்.
மன அமைப்பில் செயல், உணர்வு, அறிவு என்று மூன்று பகுதிகள் உண்டு. நவீன மனோதத்துவ ஆராய்ச்சியாளர் அவைகளை முறையே (வில், எமோசன், காக்னிஷன்) என்று பகர்வர். அன்னை பராசக்தியே மாந்தர் உள்ளத்தில் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி ஸ்வரூபிணியாக எழுந்தருளியுள்ளாள் என்பது கோட்பாடு. மனதில் இந்த மூன்றுவித மாண்புகளும் ஒருங்கே மிளிருதல் வேண்டும். அப்பொழுதுதான் பண்பாடு பூர்த்தியாகிறது. மனிதன் திண்ணியன் ஆவதற்கும் அதுவே உற்ற உபாயம். நல்ல உள்ளத்துக்குரிய மூன்று மாண்புகளையும் கீதா சாஸ்திரம் முறையே இயம்புவதால் அது எல்லார்க்கும் பொது நூலாகும்.
மனிதனை நிறைமனிதன் ஆக்குவது கீதையின் கோட்பாடாகும். உறுதியான உடலும் உயர்ந்த உள்ளமும் தெளிந்த அறிவும் நிறைநிலைக்கு இன்றியமையாத உறுப்புகளாகும். பேராற்றல் படைத்திருப்பது முதல் கோட்பாடு. ஒழுக்கம் ஆற்றலில் அடங்கி விடுகிறது. நலத்தைச் செய்யும் செய்விக்கவும் ஆற்றல் உடையவனுக்கே சாலும். அடுத்த கோட்பாடாவது அன்பு. உயிர்கள் அனைத்துக்கும் அது பொதுவானது. அன்பைத் தூய அன்பாக மாற்றியமைப்பது பக்தியோகத்தின் நோக்கமாகும். தூய அன்பினின்று இனிமை யாவும் தோன்றும். எல்லாவற்றையும் ஒன்றுபடுத்துவது தூய அன்பு. உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் தூய அன்பு படைத்திருப்பவனுக்குச் சொந்தமாய்விடுகின்றன. இனி, அறிவு மூன்றாவது கோட்பாடு ஆகும். பட்டப்பகலை உண்டு பண்ணும் ஞாயிறு போன்றது அறிவு; அனைத்தையும் அது விளக்குகிறது. மாண்புகளையெல்லாம் அது எடுத்துக்காட்டவல்லது. உயிர்களைச் செயலில் ஏவுவதும் அறிவு. தொடுத்த கர்மத்தைக் குற்றம் குறையின்றிச் செய்து முடிப்பதற்கு வழிகாட்டுவதும் அறிவு. அதைப் பாங்குடன் வளர்க்க மனிதன் கடமைப்பட்டிருக்கிறான். ஆக, ஆற்றலையும் அன்பையும் அறிவையும் ஒருங்கே அடையப்பெற்றிருப்பவனுக்கு மேலும் பெறவேண்டிய பேறு ஒன்றுமில்லை. அவன் நிறைமனிதன் ஆகிறான். அவனுக்கே நிறை நிலை சொந்தம். நிறைநிலையெய்தி நிறைமனிதன் ஆக விரும்புபவர் அனைவர்க்கும் ஸ்ரீமத் பகவத்கீதை பொது நூலாகும். சமயங்கள் அனைத்துக்கும் அதைப் பொது நூலாக வைத்துக்கொள்வதும் சாத்தியமாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக