ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கீதை-ஒரு அறிமுகம் – 19. மஹாவாக்கிய விளக்கம்

உலகில் உள்ள சமயங்கள் போற்றும் உயர்ந்த நூல்களெல்லாம் பொது இயல்பு ஒன்றைப் படைத்திருக்கின்றன. நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ அவை யாவும் மஹாவாக்கியத்துக்கு விளக்கமாக வந்து அமைந்திருக்கின்றன. மஹாவாக்கியம் என்பது பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தைச் சொல்லுகிறது. வேதங்களில் நான்கு மஹாவாக்கியங்கள் அமைந்திருக்கின்றன. அவைகளுள் மிகச் சிறப்புடையது தத் த்வம் அஸி என்னும் மூன்று சொற்களைக் கொண்டது. த்வம்-நீ, தத்-அதுவாக, அஸி-இருக்கிறாய் என்பது அதன்பொருள். ஜீவாத்மாவாகிய நீ பரமாத்மாவாகிய மெய்ப்பொருளுக்கு அன்னியமானவன் அல்லன் என அதற்கு விளக்கம் வருகிறது. இக் கோட்பாட்டை எல்லா சாஸ்திரங்களும் ஏதேனும் ஒரு விதத்தில் இயம்புகின்றன. இதை எடுத்து ஓதாத நூல் உயர்ந்த நூல் ஆகாது. தத் த்வம் அஸி என்னும் மகாவாக்கியத்துக்கு உற்ற உயர்ந்த விளக்கம் என்று பகவத்கீதையைச் சொல்லலாம்.
அது பதினெட்டு அத்தியாயங்களையுடையது. திரிஷட்கம் அல்லது மூவாறு (3*6) என்று அப்பதினெட்டு அத்தியாயங்களும் பகரப்பெறுகின்றன. அவைகளுள் முதல் ஆறு அத்தியாயங்கள் த்வம் (நீ) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற ஜீவதத்துவத்தை விஸ்தாரமாக விளக்கிக்கொண்டு போகின்றன. ஜீவனிடத்துள்ள குறைபாடு, அவன் அடையவேண்டியநிறை நிலை, அதற்காக அவன் எடுத்துக்கொள்ள வேண்டிய முயற்சி ஆகிய இத்தனையும் முதல் ஆறு அத்தியாயங்களில் அடங்கியிருக்கின்றன. இது முதல் ஷ்டகம். ஏழாவது அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் ஈறாக உள்ளவை இரண்டாவது ஷட்கம். மஹாவாக்கியத்தில் தத் (அது) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற பரதத்துவம் அல்லது, பரமாத்மாவை அந்த ஆறு அத்தியாயங்களும் விளக்குகின்றன. உலகனைத்தும் அவர் எப்படியாயிருக்கின்றார், உலகங்களில் அவர் எப்படி அந்தராத்மாவாக இருக்கிறார், பிறகு உலகத்தைக் கடந்தவராகவும் அவர் எப்படி யிருக்கிறார் ஆகிய இவையாவும் இந்த இரண்டாவது பகுதியில் வந்தமைகின்றன. பதின்மூன்றாவது அத்தியாயத்திலிருந்து பதினெட்டாம் அத்தியாயம் வரையில் உள்ள ஆறு அத்தியாயங்களுக்கு மூன்றாவது ஷட்கம் என்று பெயர். மஹாவாக்கியத்தில் அஸி (இருக்கிறாய்) என்னும் சொல்லுக்கு இலக்காயுள்ள பரமாத்ம-ஜீவாத்ம இணக்கத்தை இப்பகுதி தெளிவுபடுத்துகிறது. தத் த்வம் அஸி என்ற மூன்று பகுதிகளுக்கும் சமமான அந்தஸ்து கொடுத்திருப்பது பகவத்கீதை. அந்தந்தப் பகுதியை அது ஓர்மைப்படுத்தி விளக்கியிருப்பது போன்று தெளிவாகவும் முறையாகவும் வேறு ஒரு நூல் செய்யக்கிடையாது. ஆக, மஹாவாக்கியத்துக்கு முறையான வியாக்யானம் என்று இதை இயம்ப வேண்டும்.

கீதை-ஒரு அறிமுகம் – 18. சுருதியும் ஸ்மிருதியும்

பகவத்கீதைக்கு அமைந்துள்ள தனிச் சிறப்புக்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அது ஏககாலத்தில் சுருதியாகவும் ஸ்மிருதியாகவும் வழங்குகிறது. சுருதி எது, ஸ்மிருதி எது என்று முதலில் ஆராய்வோம். உபநிஷதங்களுக்குச் சுருதி என்று பெயர். கர்ண பரம்பரையாகக் காதால் கேட்டுப் காப்பாற்றி வைக்கப்பட்டது எதுவோ அது சுருதி. நெடுங்காலமாக ஒருவர் பின் ஒருவராகக்கேட்டு வந்தது எனினும் அதன் சொல் அமைப்பை யாரும் மாற்றிவிடவில்லை. ஆகையால் மூலப்பொருளமைப்பும் திரிவுபடாது இருந்து வந்திருக்கிறது. கணிதத்தில் எண்சுவடியையும் பெருக்கல் வாய்ப்பாட்டையும் எப்படி யாரும் மாற்றமுடியாதோ அப்படி சுருதிப்பொருளை யாரும் மாற்ற முடியாது. மெய்ப்பொருளை விளக்குகின்ற சுருதி மொழியும் என்றும் மாறாதிருக்கிறது. ஆக, சுருதி யாண்டும் சாசுவதமானது.
ஸ்மிருதி என்பது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டது என்று பொருள்படுகிறது. சமூகவாழ்க்கை சம்பந்தமான கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும் சேர்ந்து ஸ்மிருதி என்னும் பெயர் பெறுகிறது. நன்கு அமைக்கப்பெற்ற ஸ்மிருதிகள் எப்பொழுதும் பரதத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவைகள். பராசர ஸ்மிருதி, மனுஸ்மிருதி முதலியவைகள் பிரசித்திபெற்றவைகள். ஸ்மிருதிகள் சாசுவதமானவைகளன்று. காலத்துக்கும், இடத்துக்கும், சந்தர்ப்பத்துக்கும் ஏற்ப அவைகள் மாறியமையும். சமூக நடைமுறைகளை நன்கு அறிந்துள்ள மேலோன் ஒருவன், அல்லது மேலோர் கூட்டம் ஒன்று ஸ்மிருதிகளைக் காலத்துக்கு ஏற்றவாறு திருத்தியமைத்துக் கொள்வதுண்டு. சுதந்தர இந்தியாவுக்கு இப்பொழுது இந்திய அரசாங்கம் அமைத்துள்ள சட்டதிட்டங்களையும் ஸ்மிருதியெனலாம். ஆக, ஸ்மிருதி யென்பது அப்போதைக்கப்போது மாறியமையும் தன்மையுள்ள சமூகக்கோட்பாடுகளாம்.
ஸ்ரீமந் பகவத்கீதையானது ஏககாலத்தில் சுருதியாகவும் ஸ்மிருதியாகவும் அமைந்துள்ளது. பரதத்துவத்தை அது நன்கு விளக்குவதால் அது சுருதியாகிறது. பரதத்துவத்துக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வது சநாதன தர்மம். இந்நூலினின்று சநாதனதர்மத்தை உள்ளபடி கற்றுக்கொள்ளலாம். சமுதாய அமைப்பு எத்தகையது என்பதையும், அது எங்ஙனம் நடைபெற வேண்டும் என்பதையும் கீதை எடுத்து விளக்குகிறது. சநாதன தர்மம் யுகதர்மமாக வடிவெடுக்கும் விதத்தையும் அது காட்டிக் கொடுக்கிறது. இதை ஒரு உபமானத்தைக் கொண்டு அறிவது நன்று. பொன் என்றைக்கும் விலையுயர்ந்த பொருள் ஆகிறது. பொற்காசு பெறுகிற முத்திரை ஒவ்வொரு அரசாங்கத்திலும் மாறியமைகிறது. பொன் போன்றது சநாதன தர்மம். பொற்காசு போன்றது யுகதர்மம். இனி, ஸ்மிருதியும் பொற்காசுக்குச் சமானமானது. சாஸ்திரப் பிரமாணங்களைச் சொல்ல வருகிற மத ஸ்தாபகர்கள் ஸ்மிருதியும் அங்ஙனம் பகர்கிறது என்று சொல்லுவார்களானால் அவர்கள் குறிப்பிடுவது பகவத்கீதையாகும். ஆசாரியர்களுக்கிடையில் அது ஸ்மிருதி என்னும் சிறப்புப் பெயர் பெற்றுள்ளது. மற்ற ஸ்மிருதிகள் காலத்துக்கு ஏற்றவாறு மாறியமையும். ஆனால் பகவத்கீதையை மாற்றியமைக்க முடியாது. ஏனென்றால் சமூக நடைமுறையிலும் எக்காலத்துக்கும் பொதுவாயுள்ள கோட்பாடுகள் உண்டு. மாறுபாடு அடையும் உலகில் மாறுபாடு அடையாத கோட்பாடுகளையே கீதா சாஸ்திரம் விளக்குகிறது. ஆகவே இது எக்காலத்துக்கும் எல்லா சமூகங்களுக்கும் உதவுகிற ஸ்மிருதியாகும். கீதையைக் கற்றறிந்தவன் பாரமார்த்திகத் தத்துவங்களையும் வியாவகாரிக தத்துவங்களையும் கற்றறிந்தவன் ஆவான்.

கீதை-ஒரு அறிமுகம் – 17. போதனா முறை

அவதார புருஷர்கள் எல்லாரும் மக்களுக்குத் தாங்கள் புகட்டியவைகளை மிக எளிய முறையில் கொடுத்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கும், பாமரருக்கும் விளங்கும்வண்ணம் மேலாம் தத்துவங்களைச் சுலபமாக்கியிருக்கிறார்கள். அவர்களுடைய உபதேசங்களுக்கு வியாக்கியானம் செய்யவேண்டிய அவசியமில்லை. வியாக்கியானம் செய்ய முயன்றவர்கள் தங்களுடைய கொள்கை அவதார புருஷருடைய கூற்றில் அடங்கியிருக்கிறது என்பதைக் காட்டுதற்கே முன்வந்தனர். தர்க்கம் முதலிய உபகரணங்களைக் கையாண்டவர்களும், பாஷ்யக்காரர்களேயாம். ஆனால் அவதார புருஷர்கள் புகட்டியதிலோ தாய் தன் குழந்தைக்கு எடுத்துச் சொல்வது போன்று அவ்வளவு இனியதும், எளியதுமான முறையைக் கையாண்டிருக்கின்றனர். ஸ்ரீராமன், புத்தர், ஏசுநாதர் போன்றவர்களுடைய போதனைகளை நாம் உள்ளபடி அறிந்து கொள்ளுதற்கு யாருடைய வியாக்கியானமும் நமக்குத் தேவையில்லை.
ஸ்ரீமத் பகவத்கீதையும் போதனா முறையில் மிக எளியதே. மூலத்தை அவரவர்க்குத் தெரிந்த மொழியிலே பெயர்த்தெடுத்துப் படித்துப் பார்த்தால் படிக்கின்றவர்களுக்கு விளங்காத பகுதி மிகக் குறைவு; விளங்குகிற பகுதியே பெரும்பான்மை எனலாம். அது அவ்வளவு எளியதாக இருப்பது மட்டுமல்ல மிக ஆழ்ந்ததாகவும் இருக்கின்றது. பகவத்கீதைக்கு மூலமொழியாகிய சம்ஸ்கிருதத்தில் அமைந்ததே அது ஆழத்தில் செல்லுதற்கு இடங்கொடுத்தது. மொழி அழகானது, விதவிதமான பொருள் அழகாக வடிவெடுக்க வல்லதாக கீதையில் அமைந்திருக்கிறது. விதவிதமான பொருள்களையும் சம்பிரதாயங்களையும் அதில் காணலாம் என்றாலும், அத்தனைவித விளக்கங்கள் ஒன்றோடொன்று முரண்படுபவைகளல்ல. ஆகையால்தான் அது பிரஸ்தானத்திரயத்தில் ஒன்றாக இடம்பெற்றிருக்கிறது.
ஒரு கோட்பாட்டை பகவான் ஓரிடத்தில் பகர்ந்தால் அதன் பொருள் நன்கு விளங்குதற்பொருட்டு வேறு பல இடங்களிலும் வேறு விதங்களில் அதை விளக்குகிறார். சான்றுகள் சில எடுத்துக்கொள்வோம். உயிரோடிருப்பவனைக் குறித்தோ, உயிர் துறந்தவனைக் குறித்தோ பண்டிதன் விசனப்படுவதில்லை என்கிறார் ஓரிடத்தில், ஒரு விதத்தில் பண்டிதன் என்னும் சொல்லுக்கு அது விளக்கமாகிறது. மற்றோர் இடத்தில் சிற்றுயிர் பேருயிர் ஆகிய அனைத்திடத்தும் சமதிருஷ்டி உடையவன் பண்டிதன் என்கிறார். இங்ஙனம் பண்டிதன் என்னும் சொல்லை எங்கெங்கு கையாண்டிருக்கிறார் என்று பார்த்தால் அதற்கு முழு விளக்கம் கிடைக்கின்றது. யோகம் என்னும் சொல்லை அடிக்கடி உபயோகப்படுத்துகின்றார். செயலில் திறமை வாய்க்கப் பெற்றிருப்பது யோகம் என்ற விளக்கம் ஓரிடத்தில் அமைகிறது. மனம் நடுநிலை வகிப்பது யோகம் என்ற விளக்கம் இன்னோரிடத்தில் வருகிறது. வலிய எடுத்துக்கொண்ட வருத்தங்களினின்று விடுபடுவது யோகம் என்ற விளக்கம் இன்னும் ஓர் இடத்தில் வருகிறது. இவைகளையெல்லாம் திரட்டினால் யோகத்தைப்பற்றிய எல்லாக் கோட்பாடுகளும் நமக்கு விளங்குவனவாகின்றன.
புகட்டிய ஒரு கருத்தையே திரும்பவும் அவர் புகட்டுவது போன்று சில இடங்களில் தென்படும். ஆயினும் சொன்னதையே சொல்லுதல் என்னும் குற்றம் அவரைச் சாராது. யோகம் என்னும் சொல் முதல் ஆறு அத்தியாயங்களில் பெரும்பாலும் கரும யோகத்தையே குறிக்கும். இரண்டாவது ஆறு அத்தியாயங்களில் அது சிறப்பாக பக்தியோகத்தைக் குறிக்கும். கடைசி ஆறு அத்தியாயங்களில் அது ஞானயோகத்தைக் குறிக்கும். அஹங்காரம் என்னும் சொல்லும் அங்ஙனமே இடத்துக்கு ஏற்றாற் போன்று விதவிதமாகப் பொருள்படும். ஒரே கோட்பாட்டை கர்மம், பக்தி, ஞானம் ஆகிய மூன்று யோகங்களில் மூன்றுவிதமாகப் பொருள்படுத்தலாம். அப்படிப் பொருள்படுத்துவதும் முற்றிலும் அவசியமாகிறது. ஆத்மா என்னும் சொல் முதல் ஷட்கத்தில் சத் சொரூபமாக வடிவெடுக்கும். இரண்டாவது ஷட்கத்தில் அது ஆனந்த சொரூபமாக அல்லது பிரேமை சொரூபமாக வடிவெடுக்கும். கடைசி ஷட்கத்தில் ஆத்மா சித்சொரூபமாக வடிவெடுக்கும். இவை யாவற்றையும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் பகர்ந்த கோட்பாட்டையே திரும்பவும் பகர்ந்திருக்கின்றார் என்ற குற்றத்தை கீதாசாரியின் மீது நாம் சாட்டமாட்டோம். எதையும் அவர் மிகைபடவோ, குறைவுபடவோ பகரவில்லை. அனைத்தையும் அளந்தெடுத்தே அவர் விளக்கியுள்ளார்.

கீதை-ஒரு அறிமுகம் – 16. யோக சாஸ்திரம்

ஒவ்வொரு சாஸ்திரத்திலும் உபபத்தி என்றும் அனுஷ்டானம் என்றும் இரண்டு பகுதிகள் உண்டு. ஆங்கிலத்தில் இவைகளை (தியரி அண்டு பிராக்டீஸ்) என்பார்கள். யுக்தியால் முடிவு கட்டுவது உபபத்தி; நடைமுறையில் செய்துகாட்டுவது அனுஷ்டானம். சாதாரண மனிதன் ஒருவனுக்கு பிரம்மஞானம் வெறும் உபபத்தியாகப் போய்விடலாம். அப்பொழுது அவன் அதில் நன்மையொன்றும் அடையமாட்டான். வாய் வேதாந்தம் என்பது அதுவே. ஆனால் பிரம்மஞானம் வேறு, வாய்ப்பேச்சு வேறு. பிரம்மஞானம் முற்றிலும் வாழ்க்கைக்கு உரியது. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் அதை அனுஷ்டானத்துக்குக் கொண்டுவரலாம். ஆகையால் அது யோக சாஸ்திரம் என்னும் பெயர் பெறுகிறது. கூலி வேலை செய்பவனுக்குப் கீதா தத்துவம் தெரிந்திருந்தால் அவன் தன்வேலையைத் திறம்படச் செய்வான். பயிர்த்தொழில் செய்பவனுக்குக் கீதா தத்துவம் தெரிந்திருந்தால் அவன் நல்ல கிருஷிகன் ஆவான். வர்த்தகம் செய்பவனுக்கு இக்கோட்பாடுகள் தெரிந்திருந்தால் அவள் சிறந்த வியாபாரியாவான். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் கீதையை நன்கு கற்றறிருந்தால் அவர்களுடைய உத்தியோகம் சீராக நிகழும். பாடம் புகட்டும் ஆசிரியர்கள் கீதையின் கோட்பாடுகளை அறிந்து கொண்டால் அவர்கள் சீரிய ஆசிரியர்கள் ஆவார்கள். சுருக்கிச் சொல்லுமிடத்து கீதையைக் கற்று அனுஷ்டிக்கும் ஒவ்வொரு மனிதனும் மேலான மனிதன் ஆவான். திறமை வாய்க்கப்பெற்ற மனிதனுக்கே யோகி என்று பெயர்.
கீதையில் பதினெட்டு அத்தியாயங்களுள் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒவ்வொரு யோகம் என்ற பெயர் வந்து அமைகிறது. மனத்தின் பண்பாடு யோகமாகிறது. மனம் தளர் வுறுவார்க்கும் துயருறுவார்க்கும் யோமில்லை என்பது கோட்பாடு. அதாவது வியாகூலமுடையவன் யோகியாகான். பதஞ்சலி முனிவர் இயற்றிய யோக சாஸ்திரத்தில் அஷ்டாங்கங்களில் ஓர் அங்கமாகிய நியமம் என்னும் பகுதியில் சந்தோஷம் என்பது யோகத்துக்கு இன்றியமையாத கோட்பாடாகும். மனத்தகத்து அமையும் ஆனந்தமும் கொள்ளுதல் வேண்டும். அப்படியானால் கீதையின் முதல் அத்தியாயத்துக்கு யோகம் என்னும் தலைப்புப் பொருந்தாது. அர்ஜுன விஷாதயோகம் என்னும் பெயர் அதற்கு அமைந்துள்ளது. இருளை வெளிச்சம் என்று சொல்லுவது எப்படிப் பொருந்தாதோ அப்படித் துயரத்தை யோகம் என்று அழைப்பது சரியன்று. பின்பு அந்த அத்தியாயத்துக்கு ஏன் யோகம் என்ற பெயர் வந்தது?
துயரத்தில் இரண்டு விதம் உண்டு. ஒன்று உலக ஆசையைக் குறித்தது. தனக்கு வந்து அமைந்த போகமும் பொருளும் போதவில்லையென்று துயருறுபவன் உண்டு. அத்தகைய துயரத்தால் ஆண்மை அகன்று அழிகிறது; வீரம் விரயமாய்ப்போகிறது; அக்ஞான இருள் அதிகரிக்கிறது. ஆனால் அர்ஜுனனுக்கு அமர்க்களத்தில் வந்த துயரம் அத்தகையதன்று. அவனுக்கு உலக ஆசை அகன்று ஒழிகிறது. மூவுலகின் ராஜ்யமும் வேண்டாம் என்கிறான். போர் புரிவதா, பின்வாங்குவதா, எது தன் கடமையென்று தனக்குப் புலப்படவில்லையென்று பரிதவிக்கிறான். வாழ்க்கையின் மர்மம் அவனுக்கு விளங்கவில்லை. உயிர்வாழ்க்கை அவனுக்குத் தாங்கமுடியாத தலைச்சுமைபோன்று தென்பட்டது. அதைக் குறித்து அவன் வருந்தினான். அது வாழ்க்கையில் விரக்தி அல்லது பற்றின்மைக்குச் சமானம். அருள்தாகம் என்றும் அதை இயம்பலாம். அர்ஜுனன் அடைந்த துயரம் அவனை யோகத்துக்கு ஆயத்தப்படுத்துகிறது. நல்லறிவும் அறநெறியும் வேண்டுமென்று பரிதாபப்படுபவர் பாக்கியவான்கள்; ஏனென்றால் அன்னவர் அருள்நிலையில் ஆறுதல் அடைவர் என்பது கோட்பாடு. வல்வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே, என்றார் ஆத்ம சாதகர் ஒருவர். இப்பொழுது விஜயனுக்கு வந்துள்ள விசனம் இனி யோகத்தை வருவிப்பதற்கு ஏதுவாகிறது. ஆகவே அந்த விசனமும் ஒருவித யோகம் என்று சொல்லப்படுகிறது.
பதினெட்டு அத்தியாயங்களில் உள்ள பதினெட்டு யோகங்களையும் மேலும் தொகுத்து நான்கு யோகங்களில் அடக்கி வைக்கலாம். அந்த நான்கும் முறையே கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்று பெயர் பெறுகின்றன. இந்த நான்கினுள் ஆரம்பதசையில் இருப்பது கர்மயோகமென்றும், பிறகு அது ராஜயோகமாகப் பரிணமிக்கிறதென்றும், அதினின்று பக்தியோகம் ஓங்கிறதென்றும், இறுதியில் அது ஞானமாக முற்றுப்பெறுகிறது என்றும் பொருள்படுத்துவது ஐதிகமாக வந்துள்ளது. கீதையில் பதினெட்டு அத்தியாயங்களின் அமைப்பே அதற்குத் தக்க சான்றாகிறது. நான்கு யோகங்களையும் அரும்பு, பிஞ்சு, காய், கனி என்று பொருள்படுத்துவாரும் உளர். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணபகவான் இந்த நான்கினுள் வேற்றுமையோ தார தம்மியமோ பாராட்டுகிற அறிகுறிகளைக் காணமுடியாது. கர்மத்தோடு உயர்ந்த ஞானத்தை அவர் இணைக்கிறார். பிறகு பக்தியையும் ஞானத்தையும் ஒரே பாங்கில் பொருள்படுத்துகிறார். யோகத்தையும் பக்தியையும் மற்றோர் இடத்தில் ஒன்றுபடுத்துகிறார். இங்ஙனம் ஒரு யோகம் மற்றோன்றுக்கு முந்தியதுமல்ல பிந்தியதுமல்ல, மேலானதுமல்ல கீழானதுமல்ல என்று எடுத்துக்காட்டுவது அவரது சிறப்பியல்பு ஆகும். வாழ்க்கை என்னும் ரதத்துக்கு அவர் நான்கு யோகங்கள் என்னும் நான்கு குதிரைகளைப் பூட்டுகிறார். அவைகள் வெண்குதிரைகளாயிருப்பது அவைகளின் சாத்துவிக இயல்பையும் தூய்மையையும் விளக்குகிறது. ரதத்தை விரைந்து ஓட்டுதற்கு நான்கு குதிரைகளும் சேர்ந்து உழைக்க வேண்டும். அங்ஙனம் நான்கு யோகங்களும் ஏக காலத்தில் சேர்ந்து அனுஷ்டிக்கப்படும்பொழுது வாழ்க்கையின் லட்சியம் இனிது நிறைவேறுகிறது. நான்கு யோகங்களையும் சமரசமாக வழங்குகின்ற அப்பரம புருஷனுக்கு யோகேசுவரன் என்னும் பெயர் வந்துள்ளது.

கீதை-ஒரு அறிமுகம் – 15. பிரம்ம வித்தை

வித்தைகள் எண்ணிக்கையில் அடங்காதவைகள். புதிய புதிய பௌதிக ஞானங்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. மனிதனுடைய அறிவு எல்லாத்துறைகளிலும் அதிவேகம் விரி வடைந்து கொண்டே வருகிறது. அதற்கிடையில் மற்றொரு பேருண்மையை மனிதன் உணர்கிறான். புதியதாகப் பெறுகிற இயற்கையின் ஞானம் ஒன்றோ மனிதன் இன்னும் பெறவேண்டிய பகுதி பன்மடங்கு அதிகமாக இருக்கிறது என்பதை ஞாபகமூட்டுகிறத. கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பது எல்லார்க்கும் உண்மை. பரந்த அறிவு வரவர, மேலும் அறிய வேண்டியது அகண்டாகாரத்தில் விரிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதை உணர்ந்த சான்றோர் கேள்வியொன்று கேட்டனர். எதை அறிந்தால் அறிவு பூர்த்தியாகிறது? எதை அறிந்து கொண்டால் இயற்கையின் மர்மம் முழுதும் விளங்கி விடுகிறது? இந்த ஆழ்ந்த ஆராய்ச்சியில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். அனைத்துக்கும் முதற்காரணம் எது என்பதை அன்னவர் அனுபூதியில் உணர்ந்தனர். மூல தத்துவத்தை அறிந்தபின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடை கிடைக்கிறது. மூலப் பொருளைப் பற்றிய வித்தை பிரம்மவித்தை என்ற பெயர் பெற்றிருக்கிறது. வேறு பல பெயர்களைக் கொண்டும் அதை அழைப்பதுண்டு அவைகளுள் பரவித்தை அல்லது பரஞானம் என்பது சர்வ சாதாரணமானது. சமயங்கள் தெய்வத்துக்குக் கொடுத்திருக்கிற பெயரை இந்த ஞானத்துக்கும் கொடுத்துக் கூறுவது இயல்பு. உதாரணம் ஒன்று எடுத்துக் கொள்வோம். சிவஞானம் என்பதும் பரஞானம் என்பதும் வெவ்வேறு ஆகமாட்டா. மெய்ப்பொருளுக்கு விளக்கம் சொல்லுமிடத்து இவையிரண்டும் ஒன்றையே குறிக்கின்றன என்பது வெளியாகும். இந்த பிரம்ம வித்தையைப் புகட்டுவது கீதையின் நோக்கமாகும். அர்ஜுனன் கேட்டது போர் புரிவதா, பின் வாங்குவதா என்பதாகும். அதற்கு இரண்டில் ஒன்றை இயம்புதற்குப் பதிலாக, பிரம்ம வித்தையை ஏன் பகவான் எடுத்துக்கொண்டார் என்ற கேள்வி பிறக்கக்கூடும். அப்போதைக்கப்போது உண்டாகும் சந்தேகங்களை அகற்றி வைப்பது ஒருவித உதவியாகும். புதிய சந்தேகம் பிறப்பதற்கு இடமில்லாது ஐயங்கள் அனைத்தையும் அறவே அகற்றிவைப்பது உயர்ந்த உபகாரமாகிறது. ஒரு ஜீவனுக்குக் கொடுக்கும் கொடைகளுள் முடிவானது பிரம்ம ஞானம். ஜீவாத்மா அதை ஏற்க வல்லவனாகும்போது பரமாத்மா அதை எடுத்து உவந்து அளிக்கிறார்.

கீதை-ஒரு அறிமுகம் – 14. பகவத்கீதா உபநிஷதம்

உபநிஷதங்கள் எல்லாம் நான்கு வேதங்களினின்று வந்தவை. பகவத்கீதையோ மஹாபாரதத்தினின்று வந்தது. ஆயினும் இது உபநிஷதம் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் எல்லா உபநிஷதங்களின் சாரம் இதில் இருக்கிறது. உபநிஷதங்களையெல்லாம் பசு என்று வைத்துக்கொண்டால் பகவத்கீதையை அவை தரும் பால் என்று பகரலாம். பசுக்கள் விதவிதமான நிறமுடையவைகளாக இருக்கின்றன. ஆனால் அவைகளினின்று வரும் பால் வெண்மையானது. பசுவை எல்லோராலும் வளர்க்க முடியாது. அதனின்று பால் கறப்பதும் கஷ்டமானது. பாலை அருந்துவது எல்லார்க்கும் இயலும். பாலினின்று தயிர், வெண்ணெய், நெய் முதலியன செய்துகொள்ளலாம். அங்ஙனம் கீதா சாஸ்திரத்தை இகபரமிரண்டுக்கும் ஏற்ற நல்ல வழிகாட்டியாக வைத்துக்கொள்ளலாம். போகுமிடத்துக்கெல்லாம் பசுவைக் கொண்டுபோக முடியாது. பாலை எங்கு வேண்டுமானாலும் பாதுகாத்து எடுத்துச் செல்லலாம். அதாவது கீதையை நன்றாக அறிந்துகொண்டவர்கள் பிறகு உபநிஷதங்களில் அடங்கியிருக்கும் கோட்பாடு யாதோ என்று கவலைப்பட வேண்டியதில்லை. எல்லார்க்கும் எளிதில் விளங்காத உபநிஷதங்களை விளங்கும்படி செய்து வைத்தவன் கிருஷ்ணன். அதற்கு முகாமையாக அமைந்தவன் அர்ஜுனன். கன்றுக்காகப் பசு பால் சுரக்கிறது. பின்பு அது உலகுக்கும் உணவாகப் பயன்படுகிறது. கீதையும் அங்ஙனம் உலகுக்குப் பயன்பட்டு வருகிறது. ஜீரணசக்திக்கு ஏற்ற அளவு பாலை அருந்தலாம். நோயாளிக்கும் ஆரோக்கியவானுக்கும் அது நல்லுணவு ஆகிறது. கீதையை அவரவர் பரிபக்குவத்துக்கு ஏற்ற அளவு பயன்படுத்தலாம். நல்வாழ்வை இன்று புதியதாகத் துவக்குகிற மனிதனுக்கும் அது பயன்படும்; சாதனத்தில் மேலான நிலைக்கு வந்திருப்பவனுக்கும் பயன்படும். கீதையில் அடங்கியில்லாத இகபர தத்துவம் ஒன்றுமில்லை.

கீதை-ஒரு அறிமுகம் – 13. கீதா சாஸ்திரம் புகட்டுவது யாது?

அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் என்றென்றும் தோழன்; அதற்கு மேல் உறவினனும் ஆகிறான். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள இணக்கத்தின் புறத்தோற்றம் அது. அர்ஜுனனுடைய மனபரிபாகத்துக்கு ஏற்ற உதவியை அப்போதைக்கப்போது கிருஷ்ணன் செய்து வந்தான். நல்ல கல்வி பெறுதல் பயிற்சி பெறுதல், ராஜ்யம் நிறுவுதல், ஆபத்தினின்று தப்பித்துக் கொள்ளுதல், எதிரியினின்று மீளுதல், திரவியம் தேடுதல் இவை போன்ற உலகக் காரியங்கள் அனைத்துக்கும் அவன் சகாயம் செய்துவந்தான். தன் தங்கையையே அர்ஜுனனுக்கு மணம் முடித்துக்கொடுத்தான். இம்மையில் இன்பமூட்டும் இவையாவையும் பிரேயஸ் என்பர் பெரியோர். பல பிறவிகள் எடுத்துப் பிரியமானவைகளைப் பெற்று மகிழ்வுற்றிருக்கின்றனர் ஜீவர்கள். இவையாவையும் உயிர்களுக்கு நல்குபவர் கடவுள். வாழ்க்கையில் பிறகு நெருக்கடி ஒன்று வருகிறது. அர்ஜுனனுக்கு யுத்தம் என்னும் நெருக்கடி வந்தது. யுத்தத்துக்கு அவன் அஞ்சியவன் அல்லன். மகாதேவனையே முன்பு எதிர்த்துப் போர் புரிந்தவன். ஆனால் இந்த நெருக்கடியில் அவனுக்கு மனக்குழப்பம் உண்டாயிற்று. போர்புரிவது சிறந்ததா? எதிர்ப்பவர்க்கு எல்லாம் விட்டுக்கொடுத்து விடுவது சிறந்ததா? செய்வது இன்னதென்று தெரியாது திகைத்தான். அவன் பெற்ற பேறும், புகழும், போகமும் இந்த நெருக்கடியில் பயன்படவில்லை. சுருங்கச் சொன்னால் அவன் பெற்றிருந்த பிரேயஸ் பயன்படாது போய்விட்டது. ஆகவே அச்யுதனிடம் அவன் அடைக்கலம் புகுந்தான். சிஷ்யன் ஆனான்; சிரேயஸைப் புகட்ட வேண்டுமென்று விண்ணப்பித்தான்.
அர்ஜுனனுக்கு அத்தகைய மனநிலை வரும்வரை கிருஷ்ணன் காத்திருந்தான். ஏனென்றால் தோழமையில் பிரேயசை வழங்கலாம்; சிரேயஸை நல்கலாகாது. சிஷ்யபாவனை வரும் முன்பு சிரேயஸைப் புகட்டினால் அது பயன்தராது. பூமி விதைப்புக்குப் பண்படுவது போன்று அர்ஜுனனுடைய மனது சிரேயஸைப் பெறுதற்கு நன்கு பண்பட்டுள்ளது. அதைக் குறித்து கிருஷ்ணன் பெருமகிழ்வடைகிறான். உள்ளன்போடு சிரேயஸை எடுத்துப் புகட்டுகிறான். யோகமும், பக்தியும், ஞானமும் அடங்கப்பெற்றது சிரேயஸ். அது முக்தி மார்க்கம்.
பண்பட்ட பூமிக்குள் நல்ல விதையை விதைப்பது போன்று சிறந்த சாஸ்திரம் ஒன்று எப்பொழுதும் எடுத்த எடுப்பிலேயே சிரேயஸின் உட்கருத்தைத் தெளிவுபட உள்ளத்தினுள் புகட்டி வைக்கிறது. பிறகு அதற்கு விளக்கமாக மற்ற பகுதிகள் பின் தொடருகின்றன. சான்று ஒன்று எடுத்துக் கொள்வோம். தோற்றத்துக்கு அப்பால் இருப்பது பூரணம். தோற்றத்துக்கு வந்திருப்பது பூரணம். பூரணமே யாண்டும் உள்ளது இந்த வாக்கு மூலத்தில் உபநிஷத்தின் உட்கருத்து அனைத்தும் வந்தமைகிறது. பிறகு இதற்கு விளக்கமாக மற்ற பகுதிகள் தொடர்ந்து வருகின்றன. பகவத்கீதையினுடைய போக்கும் இத்தகையதே. முதல் அத்தியாயத்தில், பகவானுடைய பேச்சு ஒன்றும் இல்லை. இரண்டாவது அத்தியாயத்தில், இரண்டாவது, மூன்றாவது சுலோகங்களில் அவர் திருவாய் மலர்ந்தருளுகிறார்.
அதாவது: அர்ஜுனா, ஆரியனுக்கு அடாததும், சுவர்க்கத்தைத் தடுப்பதும், புகழைப் போக்குவதுமான இவ்வுள்ளச் சோர்வு இந்நெருக்கடியில் எங்கிருந்து உன்னை வந்தடைந்தது?
பார்த்தா, அலியின் இயல்பை அடையாதே. அது உனக்குப் பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே, இழிவான உள்ளத் தளர்வைத் துறந்துவிட்டு எழுந்திராய்.
வாழ்க்கைக்குத் திறவுகோலைக் கிருஷ்ணன் இக்கோட்பாட்டில் கொடுத்து அருளுகிறான். கீதையின் மூலக் கருத்து இதுவேயாம். தொடர்ந்து வருகிற ஒவ்வொரு அத்தியாயமும் இதற்கு ஒவ்வொரு விளக்கமாகிறது.
வலிவு படைத்தவனே வாழ்வுக்குரியவன் என்பதை கீதையின் கோட்பாடு. இம்மைக்கும் மறுமைக்கும் உறுதுணையாவது வலிவு. வலிவு உயிரை வளர்க்கிறது; மெலிவு உயிரைத் தேய்க்கிறது. வலிவு நோயை நீக்குகிறது; மெலிவு நோயை வளர்க்கிறது. வலிவு நல்லறத்தையும் நேர்மையையும் நல்குகிறது. மெலிவு மனக்கோணலையும் ஒழுக்கமின்மையையும் யாண்டும் உண்டுபண்ணுகிறது. ஆத்ம போதத்தைப் பெருக்குவது வலிவு; பிரபஞ்ச உணர்ச்சியை ஊட்டுவது மெலிவு. பந்தத்தை மிகைப்படுத்துவது மெலிவு; மோக்ஷத்தை வழங்குவது வலிவு.