திங்கள், 22 மே, 2017

பகவத்கீதை

பரம புருஷரைப் பற்றிக் கேட்கக் கேட்க பக்தன் மேன்மேலும் அறிவொளி பெறுகிறான். கேட்டல் என்னும் இவ்வழிமுறை ஸ்ரீமத் பாகவதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது: "பரம புருஷ பகவானைப் பற்றிய செய்திகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அந்த சக்திகளை உணர்ந்தறிய பக்தர்களின் மத்தியில் முழுமுதற் கடவுளைப் பற்றிய விஷயங்களை விவாதிக்க வேண்டும். இஃது ஓர் அனுபவ ஞானம் என்பதால், ஏட்டுக் கல்வியாளரது சங்கத்தினாலோ, மனக் கற்பனையாளர்களது சங்கத்தினாலோ இதனை அடைய முடியாது."

பக்தர்கள் பரம புருஷரின் தொண்டில் இடையறாது ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு கிருஷ்ண உணர்வில் ஈடுபட்டுள்ள ஒரு குறிப்பிட்ட பக்தனின் மனநிலையையும் நேர்மையையும் நன்றாக அறிந்த பகவான், பக்தர்களின் சங்கத்தில் கிருஷ்ண விஞ்ஞானத்தினைப் புரிந்துகொள்வதற்கான அறிவை அவனுக்கு வழங்குகிறார். கிருஷ்ணரைப் பற்றிய உரையாடல்கள் மிகவும் சக்தி வாய்ந்த்வை. அதிர்ஷ்டமுடைய ஒருவன், பக்தர்களின் சகவாசத்தைப் பெற்று ஞானத்தை கிரகித்துக் கொள்ள முயன்றால், ஆன்மீக அனுபவித்தை நோக்கி அவன் நிச்சயமாக முன்னேற்றமடைவான். தனது திறன்மிக்க தொண்டில் மேன்மேலும் உயர்வடைய அர்ஜுனனை உற்சாகப்படுத்துவதற்காக, இதுவரை தான் கூறியவற்றையெல்லாம்விட, அதிக இரகசியமான விஷயங்களை இந்த ஒன்பதாம் அத்தியாயத்தில் விவரிக்கின்றார் பகவான்.

பகவத் கீதையின் தொடக்கமான முதல் அத்தியாயம், இந்நூலின் மற்ற பகுதிகளுக்கு ஏறக்குறைய ஒரு முன்னுரையைப் போன்றது; இரண்டாம் அத்தியாயத்திலும் மூன்றாம் அத்தியாயத்திலும் விவரிக்கப்பட்ட ஆன்மீக ஞானம் "இரகசியமானது" எனப்படுகிறது. ஏழாம் அத்தியாயத்திலும் எட்டாம் அத்தியாயத்திலும் விவாதிக்கப்பட்ட பக்தித் தொண்டைப் பற்றிய விஷயங்கள், கிருஷ்ண உணர்வின் ஞானத்தை நல்குவதால், "மிக இரகசியமானது" எனப்படுகிறது. ஆனால் ஒன்பதாம் அதத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ள விஷயங்கள், களங்கமற்ற தூய பக்தியைப் பற்றியவை. எனவே இது "மிக மிக இரகசியமானது, இரகசியங்களின் உத்தமம்" என்று அழைக்கப்டுகிறது. கிருஷ்ணரைப் பற்றிய உத்தம இரகசிய ஞானத்தில் நிலைபெற்றுள்ளவன் இயற்கையாகவே திவ்யமானவன்; எனவே, அவன் ஜடவுலகில் இருந்தாலும் ஜடத் துயரங்கள் எதுவும் அவனுக்கு இல்லை. பக்தி ரஸாம்ருத சிந்துவில், முழுமுதற் கடவுளுக்கு அன்புத் தொண்டு புரிவதற்கான நேர்மையான விருப்பமுடையவன் பௌதிக வாழ்வின் கட்டுண்ட நிலையில் இருந்தாலும் முக்தியடைந்தவனாகவே கருதப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுபோலவே, பகவத் கீதையின் பத்தாம் அத்தியாயத்திலும், பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள அனைவருமே முக்தி அடைந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.

இந்த முதல் பதம் விசேஷ முக்கியத்துவம் கொண்டது. இதம் க்ஞானம் (இந்த ஞானம்) என்னும் வார்த்தைகள், கேட்டல், கூறுதல், நினைவு கொள்ளுதல், பாதசேவை செய்தல், வழிபடுதல், வந்தனை செய்தல், சேவகனாகத் தொண்டு செய்தல், நட்புறவு கொள்ளுதல், எல்லாவற்றையும் அர்ப்பணித்தல் எனும் ஒன்பது வித செயல்கள் அடங்கிய தூய பக்தித் தொண்டினைக் குறிக்கின்றது. பக்தித் தொண்டின் இந்த ஒன்பது முறைகளைப் பயிற்சி செய்பவன், கிருஷ்ண உணர்வில் (ஆன்மீக உணர்வில்) ஏற்றமடைகிறான். இதன் மூலம் அவனது இதயம் பௌதிகக் களங்கங்களிலிருந்து தூய்மையடைந்து, அவனால் கிருஷ்ணரைப் பற்றிய விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஜீவாத்மா ஜடமல்ல என்பதை மட்டும் புரிந்துகொள்வது போதாது. இதனை ஆன்மீகத் தன்னுணர்வின் ஆரம்பமாக ஏற்றுக்கொள்ளலாம், ஆனால், உடலின் செயல்களுக்கும், தான் இந்த உடலல்ல என்பதை உணர்ந்தவனின் ஆன்மீகச் செயல்களுக்கும் உள்ள வேறுபாட்டை கண்டறிதல் அவசியம்.

பரம புருஷ பகவானின் ஐஸ்வர்யங்கள், அவரது பல்வேறு சக்திகள், உயர்ந்த, தாழ்ந்த இயற்கைகள், மற்றும் இந்த ஜடத் தோற்றத்தினைப் பற்றி நாம் ஏழாம் அத்தியாயத்தில் ஏற்கனவே விவாதித்தோம். இனி ஒன்பதாம் அத்தியாயத்தில் பகவானின் பெருமைகள் விளக்கப்படும்.

இப்பதத்தில் உள்ள அனஸூயவே எனும் சமஸ்கிருதச் சொல்லும் மிக முக்கியமானதாகும். கீதையின் உரையாசிரியர்கள், மிகச்சிறந்த கல்விமான்களாக உள்ளபோதிலும், பொதுவாக புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணரின் மீது பொறாமையுடையவர்களாக உள்ளனர். மிகவும் தேர்ந்த பேராசிரியர்களும் பகவத் கீதைக்கு தவறான கருத்துரைகளை எழுதுகின்றனர். அவர்கள் கிருஷ்ணரின் மீது பொறாமை கொண்டிருப்பதால், அவர்களது கருத்துரைகள் பயனற்றவை. பகவானின் பக்தர்களால் வழங்கப்படும் கருத்துரைகள் அங்கீகாரம் பெற்றவை. பொறாமையுடையவன் எவனும் பகவத் கீதையை விளக்கவோ, கிருஷ்ணரைப் பற்றிய தெளிவான அறிவை வழங்கவோ இயலாது. கிருஷ்ணரை அறியாமலேயே அவரது நடத்தையை விமர்சனம் செய்பவன் முட்டாள். எனவே, அத்தகு கருத்துரைகளை மிகுந்த கவனத்துடன் தவிர்த்து விட வேண்டும். கிருஷ்ணர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் தூய்மையான திவ்ய புருஷர் என்பதைப் புரிந்து கொள்ளபவருக்கு இவ்வத்தியாயங்கள் மிகுந்த நன்மை பயக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக