ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கீதை-ஒரு அறிமுகம் – 12. புரட்சி நூல்

பகவத் கீதையில் இரண்டு பெரிய குறைபாடுகளை எடுத்துக் காட்டி, அதை சாஸ்திரம் என்று பகர்வது பொருந்தாது என்று அதைத் தாக்குபவர் ஒரு சிலர் இருக்கின்றனர். இவ்வுலகத்தோடு சம்பந்தப்படாத பல கோட்பாடுகள் அதில் இருக்கின்றன. பாஷியக்காரர்களுக்கிடையில் ஓயாத போராட்டத்தை அது உண்டுபண்ணியிருக்கிறது. ஒவ்வொரு மதவாதியும் தன் கொள்கையே பெரியதென்றும், மற்றவர் கொள்கைகள் குறைபட்டவைகளென்றும் சொற்போர் நிகழ்த்துதற்கு பகவத்கீதை காலமெல்லாம் இடம்கொடுத்து வருகிறது. அந்த அளவில்கருத்து உலகில் அது ஓயாது புரட்சியை வளர்த்துக்கொண்டு வருகிறது.
கெட்டவர்கள் தோன்றி சமூகத்தில் பெரிய குழப்பத்தைக் கிளப்புதற்குக் கீதை ஆதரவு தருகிறது. வெடிகுண்டு போட முயலுபவர்க்கு அது வெடிமருந்து போன்றது. போற்றுதற்கு உரிய பெரியோர்களைக் கொல்லும்படி அது தூண்டுகிறது. கொல்லுபவன் கொலை பாதகன் அல்லன் என்று அது புகட்டுகிறது. கருமம் மனிதனைப் பந்தப்படுத்தாது என்றும் அது போதிக்கிறது. சூது ஆடுபவரிடத்துக் கிருஷ்ணன் தானே சூதாட்டமாக இருப்பதாகவும் சொல்லுகிறான். இதையெல்லாம் படித்துவிட்டுப் பாமரர் தாறுமாறாக ஒழுக ஆரம்பித்து விட்டால் சமூகத்தின்கதி என்னாவது என்பது கேள்வி. இங்ஙனம் கீதையின்மீது ஆ÷க்ஷபம் கொண்டு வருவார் உளர்.
பகவத்கீதையில் இத்தகைய குற்றங்கள் இருக்கின்றனவாவென்று வாசகர்கள் கொஞ்சம் அறிந்து கொள்ளுதல் அவசியம். மத ஆசாரியர் ஒவ்வொருவரும் சமூகத்துக்குப் பெருநன்மை செய்தவர் ஆவார். ஒரு மரத்தின் பெருமையை அது தரும் கனியினின்று தெரிந்து கொள்ளலாம். சமய ஆசாரியர்களின் பெருமையை அவர்கள் சமூகத்துக்கு வழங்கியிருக்கும் நல்வாழ்வினின்று ஓரளவு தெரிந்துகொள்ளலாம். மக்களிடத்து அவர்கள் எல்லாரும் பேரன்பு பூண்டவர்கள். சுயநலத்துக்கும் அவர்களுக்கும் வெகுதூரம்; கல்விக்கு அவர்கள் களஞ்சியம்; ஒழுக்கத்துக்கு எடுத்துக்காட்டு. அத்தகையவர்கள் கீதா சாஸ்திரத்தைப் பின்பற்றினார்கள் என்றால் அது கீழ்த்தரமான போதனையுடையதாய் இருக்கமுடியாது. மேலான சம்பிரதாயம் அனைத்துக்கும் அது பிரமாணமாகிறது.
இனி, அறிவிலிகள் ஒரு நூலை முறையாக அறிந்து கொள்ள வில்லையானால், அது அந்த நூலின் குற்றமாகாது. அமிர்தத்தை விஷமாக்குவார் உளர். அப்படி அவர்கள் செய்வது அமிர்தத்தின் குற்றமாகாது. தங்கள் கீழான இயல்புக்கு ஏற்றபடி யோக சாஸ்திரத்தைக் கீழ்மக்கள் பொருள்படுத்துவார்களானால் அது அந்த சாஸ்திரத்தின் குற்றமாகாது. பல்லாயிரம் மேன்மக்களுக்குப் பாரமார்த்திகவாழ்க்கைக்கு அது வழிகாட்டியிருக்கிறது. காலமெல்லாம் அச்செயலையே கீதா சாஸ்திரம் செய்ய வல்லது. புலனடக்கமும், பக்தியும், தன்னலத் தியாகமும், தபசும், தொண்டு புரிதலும் இல்லாத கீழ்மக்களுக்கு கீதாசாஸ்திரம் உதவாது என்பது கோட்பாடு.

கீதை-ஒரு அறிமுகம் – 11. கொலை நூல்

பகவத்கீதையைப் படிக்கலாகாது என்று அதைத் தள்ளி வைப்பர் ஒரு சிலர் உண்டு. எப்படியாவது அர்ஜுனனைப் போரில் புகுத்திவிடவேண்டும். அந்த நெருக்கடிக்கு ஏற்றவாறு ஏதாவது பேசவேண்டிய நிர்ப்பந்தம் வந்திருந்தது. அதையெல்லாம் பகர்ந்து கிருஷ்ணன் காரியத்தை நிறைவேற்றிவிட்டான். முடிவாக நிகழ்ந்தது படுகொலை. பாட்டனாரையும் ஆசாரியரையும் அர்ஜுனன் ஒழித்து விட்டான். கொலைபுரிவது பாதகர்களது பொல்லாத செயல். கொலை மறுத்தல் சமயக்கோட்பாடு. எங்ஙனம் இருளும் வெளிச்சமும் ஒன்று சேரவோ, அங்ஙனம் கொலை செய்தலும் கொலை மறுத்தலும் ஒவ்வா. சமயநெறியைப் பின் பற்றுபவர் கொலை நூலைக் கையால் தொடலாகாது என்பது அவர்களது கோட்பாடு.
இனி, கீதா சாஸ்திரம் இக்கோட்பாட்டின் மூலத்தையே துருவி ஆராய்கிறது. இயற்கை முழுதும் ஒரு முடிவில்லாத கொலைக்களம் என்கிறது கீதா சாஸ்திரம். அணுமுதல் அண்டம் வரையில் எங்கும் உயிர் நிறைந்திருக்கிறது. ஒரு துளி ஜலத்தில் எண்ணிறந்த சிற்றுயிர்கள் இருக்கின்றன. நம் அறிவுக்கு அவைகள் சிற்றுயிர். தம் அளவையில் அவைகளும் பேருயிர்களேயாம். நமது மூடிய கைக்குள் அடங்கியிருக்கும் காற்றில் அதே பாங்கில் கணக்கற்ற உயிர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மண்ணினுள் நிறைந்திருப்பதும் உயிர்த் தத்துவம். இவையாவும் ஒன்றையொன்று விழுங்கி வாழவும் வளரவும் செய்கின்றன. வளரும் செடி யொன்றுக்குக் கோடானுகோடி பேக்டீரியா என்னும் உயிர்த் தத்துவங்கள் மண்ணிலிருந்து ஓயாது பலியாகின்றன. உயிர்த் தத்துவம் அடங்கப்பெற்றிருப்பதே உணவு. ஓர் உயிர் மற்றோர் உயிரை வாங்காது வாழமுடியாது. இதுவே இயற்கையின் அமைப்பு. இயற்கையில் எங்குக் கொலைச் செயல் நிகழா திருக்கிறது? பார்க்குமிடமெங்கும் கொலைக்களமே. கண் மூடித்தனத்தை அகற்றிவிட்டுக் கொலைக்களமாக இவ்வுலகைக் காண்பவரே உண்மையின் முதற்படியைக் காண்கின்றனர்.
சிருஷ்டியில் முத்தொழிலும் அடங்கியிருக்கின்றன. ஓர் இடத்தில் சூரியோதயம் என்றால் மற்றோர் இடத்தில் சூரிய அஸ்தமனம். ஓர் இடத்தில் உயிர் பிறக்கிறதென்றால் மற்றோர் இடத்தில் உயிர் இருக்கிறது. உடலை உண்ணுபண்ணுதல் என்றால் உணவை அழித்தல் என்று பொருள்படுகிறது. ஓயாது புதிய உயிர்களாகப் பிறந்துகொண்டிருக்கிற உலகில் அவையாவும் பழைய உயிர்களாக மாறி மடிந்து கொண்டும் இருக்கின்றன. சிருஷ்டிக்கும் சம்ஹாரத்துக்கும் இடைநிலை ஸ்திதி என்று இயம்பப்படுகிறது. ஆக படைத்தல், காத்தல், மறைத்தல் என்ற முச் செயலும் முக்கோணம் போன்று ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. மரணத்தை அறிந்துகொண்டால் மற்ற இரண்டும் எளிதில் விளங்கும்.
இயற்கையைக் கொலைக்களம் என்று ஒப்புக்கொள்பவர் பிறகு கீதா சாஸ்திரத்தைக் கற்றே ஆகவேண்டும். கொலை மறுக்க விரும்பும் நீ கொலைக்களத்துக்குள் வரலாகாது. அதற்குள் வந்தான பிறகு நீ கொலை செய்யா திருக்கமுடியாது. கோழை போன்று போர்க்களத்தில் தயங்கி நில்லாதே. கோழைக்கு மண்ணுலகும் இல்லை; விண்ணுலகும் இல்லை; எவ்வுலகும் இல்லை. ஆண்மையுடன் எழுந்திரு. வாழ்வு என்னும் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்து. ஆயினும் அதனிடத்துப் பற்றுவைக்காதே. போர் நிலத்தில் நீ பாங்குடன் போர் புரிந்தால், போர் கடந்த பெரு நிலத்தைப் பண்புடன் பெற்றிடுவாய் என்பது கீதையின் கோட்பாடு. ஆக, பகவத்கீதை கொலை நூலே. இயற்கை என்னும் கொலைக்களத்தில் வாழ்வு என்னும் கொலைத் தொழிலை நன்கு இயற்றுதற்கு பகவத்கீதை என்னும் கொலை நூலை ஒவ்வொருவனும் கற்றாகவேண்டும்.

கீதை-ஒரு அறிமுகம் – 10. குறித்து வைத்தது யார்?

ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் அமர்க்களத்தில் நடந்த பேச்சு இது. ஒரு சபைநடுவில் கற்றவர்களுக்கிடையில் இது நிகழ்ந்ததன்று. இந்த சம்வாதம் நிகழ்ந்தபடியே மற்றவர்களுக்கு எப்படிக் கிட்டியது என்ற கேள்வி எழலாம். அவதார புருஷர் ஒருவர் மண்ணுலகில் வரும்பொழுதெல்லாம் அவரது அற்புதச் சரிதத்தை உள்ளபடி எழுதிவைக்க வல்ல தீர்க்கதரிசி ஒருவர் அவருடன் வருவதுண்டு. ஸ்ரீராம சரிதத்தைக் குறிக்க வால்மீகி வந்தார். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் செயல்களை விளக்க வியாசர் வந்தார். அவர் ஞானக்கண் படைத்தவர். ஸ்ரீ கிருஷ்ணன் அருகில் இருந்தாலும் எட்ட இருந்தாலும் அவன் கருத்துக்களை உள்ளபடி தெரிந்துகொள்ளும் ஞானம் வியாசருக்கிருந்தது. வியாசர் அருளால் ஸஞ்ஜயரும் தற்காலிகமாக ஞானக்கண்ணைப் பெற்றிருந்தார். ஆதலால் நிகழ்ந்தவைகளை உள்ளபடி திருதராஷ்டிரருக்கு எடுத்துச் சொல்ல ஸஞ்ஜயருக்கு இயன்றது. ஆக, பகவத்கீதை என்னும் அமிர்தத்தை அர்ஜுனன் நேரில் அருந்திக்கொண்டிருந்த அதே வேளையில் வியாசரும் ஸஞ்ஜயரும் எட்ட இருந்து அருந்தினார்கள். வியாசர் அதை எழுதிவைத்தார்; ஸஞ்சயர் அதை இயம்பிக்கொண்டே போனார். போர் முடிந்த பிறகு ஸஞ்ஜயருக்கு ஓசையை மட்டும் பரப்ப வல்லது; உணர்வு அதனிடத்து இல்லை. ஞானக் கண்ணோ உணர்வை அப்படியே வாங்கவல்லது. மொழியின் துணையிருந்தாலும் இல்லாவிட்டாலும் கருத்தையேற்க ஞானிக்கு முடியும்.

கீதை-ஒரு அறிமுகம் – 9. ஏன் போர்க்களத்தில் புகட்டப்பட்டது?

உயர்ந்த வேதாந்த தத்துவங்களைப் புகட்டுபவை பிரஸ்தானத்திரயம். வேதாந்த ஆராய்ச்சி எப்பொழுதும் விச்ராந்தி அல்லது மன நிம்மதியினின்று வருவதாகும். ஆரண்யங்களில் அமைதியாக இருந்துகொண்டு ஆன்றோர் அத்தகைய பரதத்துவங்களை ஆராய்ந்தனர். உபநிஷதங்கள் எல்லாம் தபோவனங்களினின்று தோன்றியவைகளாம். பின்பு, பிரஸ்தானத்திரயத்தில் ஒன்றாகிய பகவத்கீதை பிறந்தது ஆரண்யத்திலன்று. அல்லல் நிறைந்த அமர்க்களத்தில் அது உபதேசிக்கப் பெற்றது. அதற்கும் தக்கதொரு காரணமுண்டு. வேதாந்தத்துக்கு சாந்தி பாடம் என்ற ஒரு பெயர் உளது. சாந்தியைப் பெறுதற்கு உற்ற இடம் எது? ஜன சஞ்சாரமில்லாத ஏகாந்தமான இடத்திலும் அதைப் பெறலாம்; பயங்கரமான போர்க்களத்திலும் அதைப் பெறலாம். எல்லாப் படித்தரங்களிலும் வாழ்க்கைக்கு வழிகாட்டியாவது வேதாந்தக் கோட்பாடுகளாம். விதவிதமான வினைகளில் ஈடுபட்டிருக்கும் மக்கள் அனைவர்க்கும் அது பயன்படும்.
வாழ்க்கையை எங்ஙனம் பொருள்படுத்த வேண்டுமென்று கிருஷ்ணன் தனது ஜீவிதத்தின் மூலம் விளக்குகிறான். அவன் பத்து வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுவனாயிருந்தபோது பிருந்தாவனத்தில் லீலைகள் பல விளையாடினான். உலகம் ஒரு விளையாட்டு மேடை; வாழ்வு ஒரு பெரியவிளையாட்டு. அதை நன்கு விளையாடத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவனுடைய வரலாற்றின் முற்பகுதி விளக்குகிறது. விளையாடுவது போன்று வாழ்வை எளிதாக்குபவர்க்கு அது கொண்டாட்டம்; மற்றவர்க்கு அது திண்டாட்டம். இது பிருந்தாவனக் கிருஷ்ணனது செய்தி.
வயது வந்த பிறகு அவன் குரு÷க்ஷத்திர கிருஷ்ணன் ஆகிறான். அப்பொழுது வாழ்வை மற்றொரு பாங்கில் அவன் படம் பிடித்துக் காட்டுகிறான். பிரபஞ்ச வாழ்க்கை ஒரு முடிவில்லாத போராட்டம். எதைப் பெற விரும்பினாலும் உயிர்கள் அதன் பொருட்டுப் போராடியாக வேண்டும். போர் புரியத் தெரியாதவர்களுக்கு இவ்வுலகிலும், வேறு எவ்வுலகிலும் ஒன்றும் அகப்படாது. பொருள் ஒன்று வேண்டுமென்று பிள்ளை தாயிடம் அழுகிறது. அது ஒருவிதப் போராட்டம். ஒரு வேலையில் அமரதற் பொருட்டுத் தொழிலாளி தன் வல்லமையைக் காட்டுகிறான். அதுவும் போராட்டமே. சாம்ராஜ்யங்கள் நிறுவுவதும் நடைபெறுவதும் போராட்டத்தின் பயனேயாம். எத்துறையிலாவது மனிதன் சிறிது முன்னேற்றம் அடைந்திருக்கிறான் என்றால், அவன் வெற்றிகரமாகப் போராடிடயருக்கிறான் என்னும் பொருள் அதில் அடங்கியிருக்கிறது. சண்டைகள் பலவற்றைக் கிருஷ்ணன் தானே திறம்படச் செய்து முடித்திருக்கிறான். அவனுடைய ஜீவிதமே போராட்டத்துக்கு எடுத்துக்காட்டு ஆகிறது. யுத்தமயமாயுள்ள வாழ்க்கையில் மனிதன் எத்தகைய பாங்குடன் பிரவேசிக்க வேண்டுமென்று பகவத்கீதை புகட்டுகிறது. வாழ்வு என்னும் போராட்டத்துக்கு மனிதன் தகுதியுடையவன் ஆகவேண்டும்.

கீதை-ஒரு அறிமுகம் – 8. அர்ஜுனன் மக்களின் பிரதிநிதி

பாண்டவர் ஐவருள் பகவான் கீதையைப் பார்த்தனுக்கு உபதேசித்தருளியதின் கருத்து யாது? போர் புரிதல் அப்போதைக்கேற்பட்ட அவசரச் செயல் என்றால் அர்ஜுனனைவிட பீமன் அதற்கென்றே துடித்துக்கொண்டிருந்தான், கொஞ்சம் தூண்டியிருந்தால் அவனைக்கொண்டு அக்காரியம் எளிதில் நிறைவேறியிருக்கும். மற்று அமர் புரிதல் அல்ல, அறன் வலியுறுத்தலே அண்ணலின் நோக்கமென்றால் அதற்கேற்றவன் அறக்கடவுளின் வடிவாகிய அண்ணன் யுதிஷ்டிரன். போர் புரிதற்குப் பொருந்தியவன் பீமன், தர்மத்தை உணரத் தகுந்தவன் தர்மராஜா. இவ்விருவரையும் விட்டுவிட்டு, வில்லாளி அர்ஜீனனைப் பொறுக்கி யெடுத்ததில் பொருளொன்றுண்டு. பீமனிடத்திருந்தது முரட்டுத்தனம்; கிட்டத்தட்ட அது விலங்கின் பாங்கு. கீழ்மையே வடிவெடுத்திருப்பவனுக்கு யோக சாஸ்திரம் உதவாது. கீழ்மகன் அதைக் கேட்கவும் மாட்டான், அனுஷ்டிக்கவும் மாட்டான். மூத்தவன் தர்மராஜன் போன்று தெய்வத் தன்மையில் நிலை பெற்றிருப்பவனுக்கு யோக சாஸ்திரம் முற்றிலும் தேவையானதன்று. நூலின் துணையின்றியே அவன் நன்மை கடைப்பிடிக்க வல்லவன். இனி, அர்ஜுனனுடைய பாங்கு இவ்விருவருடைய பாங்குகளுக்கு நடுவில் இருக்கிறது. அவன் விலங்குத் தன்மையைக் கடந்து மேலே வந்துள்ளான். ஆனால் தெய்வத் தன்மையில் இன்னும் அவன் நிலைபெறவில்லை. விலங்குத் தன்மைக்கும் தெய்வத் தன்மைக்கும் இடைநிலையாகிய மனுஷத் தன்மை அர்ஜுனனுக்குச் சொந்தம். நலம், கேடு ஆகிய இரண்டும் மனிதன்பால் கலக்கப் பெற்றிருக்கின்றன. கேட்டைக் களைந்து நலத்தில் நிலை பெற்றிருப்பது மானுட வாழ்க்கையின் குறிக்கோள். கீதா சாஸ்திரம் அதற்கு உற்ற துணையாகிறது. அர்ஜுனன் சாதாரண மனிதரின் பிரதிநிதியாகிறான். அவன் போன்ற மக்கள் எல்லார்க்கும் அது சிறந்த வழிகாட்டியாகிறது. மக்கள் நிலையில் இருப்பார் எல்லாரும் கீதையைக் கற்கவும் அதன்படி நடக்கவும் அதிகாரிகளாகின்றார்கள்.

கீதை-ஒரு அறிமுகம் – 7. நர – நாராயணன்: கிருஷ்ணார்ஜுனன்

முன்பு ஒரு காலத்தில் நாராயணன் என்றும், நரன் என்றும் பெயர் தாங்கி வந்த இரண்டு ரிஷிகள் துவாபரயுகத்தின் இறுதியில் கிருஷ்ணனாகவும் அர்ஜுனனாகவும் அவதரித்தார்கள் என்னும் கோட்பாடு ஒன்று உண்டு. பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடையிலுள்ள தொடர்பை இக்கோட்பாடு விளக்குகிறது. இன்னும் வேறு பாங்குகளிலும் உபநிஷதங்களில் இக்கருத்து விளக்கப்பட்டிருக்கிறது. இரண்டு பறவைகள் ஒரு மரத்தில் அமர்ந்திருந்தன. ஒன்று தன் மஹிமையில் நிலைபெற்றதாயிருந்தது. மற்றொன்று இனியவையும் இன்னாதவையும் ஆகிய கனிகளை உண்டு இன்ப துன்பத்துக்கு ஆளானது. அது துன்பப்படும்பொழுதெல்லாம் மேலான நிலையிலிருந்த பறவையை நினைந்து அதனருகில் வர முயன்றது. அருகில் வரவர அதன் இன்னல் குறைந்தது. தான் மற்ற பறவையின் தோற்றம் என்று உணர்ந்தது. பிறகு செயலற்ற பறவையில் அது லயமாயிற்று. ஜீவாத்மா நிறைநிலையடைந்து பரமாத்மாவில் லயமாகும் பாங்கு இங்ஙனம் விளக்கப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் ஏற்பட்ட இணக்கம் இக்கோட்பாட்டை நன்கு தெளிவுபடுத்துகிறது. இருவரும் இணைபிரியாத தோழர்கள். அப்போதைக்கப்போது அர்ஜுனனுக்கு வந்த குறைகளைக் கிருஷ்ணன் அகற்றி வைத்தான். பள்ளியில் பயிற்சி பெற்றபொழுது துணை; விளையாடியபொழுது துணை; போட்டிகள் பல போட்டபொழுது துணை; வனவாசத்தில் வருந்திக்கொண்டிருந்தபொழுது துணை; மணம் புரிந்துகொள்ள விரும்பியபொழுது தன் தங்கையையே மணம் செய்வித்துத் துணை; போர்க்களத்தில் துணை; பிறகு கீதோபதேசம் என்ற ஞானோபதேசம்; இதுவே முடிவான துணை. பல பிறவிகளில் பகவான் மனத்தகத்து வீற்றிருந்து ஜீவர்களுக்கு அப்போதைக்கப்போது தேவையானவைகளைத் தந்தருள்கின்றார். இவையாவையும் வைத்தனுபவித்தான பிறகு வாழ்க்கையில் பெரியதொரு நெருக்கடி வருகிறது. பெற்ற செல்வமும், சுற்றமும், பதவியும், போகமும் அப்பொழுது ஒன்றுக்கும் உதவாதவைகளாகத் தென்படுகின்றன. மனத்தினுள்ளே இருள் சூழ்ந்து விடுகிறது. வாழ்வு வெறும் சூன்யமாய்த் தோன்றுகிறது. ஒவ்வோர் உயிரும் ஒரு காலமல்லாவிட்டால் ஒரு காலத்தில் அத்தகைய சோதனைக்கு ஆளாகவேண்டும். பரஞானம் ஒன்றே அவ்வேளைக்கு உற்ற துணையாகிறது. பரஞானத்தைப் பெற்ற பின்பே வாழ்வின் உட்பொருள் ஜீவனுக்கு உள்ளபடி விளங்குகிறது. கருமத்தின் கதி, ஜீவிதத்தின் பாங்கு, மரணத்தின் அவசியம் ஆகியவைகள் பரஞானம் வருவதற்கு முன்பு விளங்கமாட்டா. பிறவிப் பிணியையும் பிற பிணியையும் வேரறப் போக்கவல்லது பரஞானம். அதைப் பெறுதற்கேற்ற தருணம் வாய்த்தபொழுது பகவான் பரிவுடன் பார்த்தனுக்கு அதைப் பகர்ந்தருளினார்.

கீதை-ஒரு அறிமுகம் – 6. கிருஷ்ணனது வாழ்க்கை நமக்கு எடுத்துக்காட்டு

மனிதன் உலகில் எப்படி வாழவேண்டுமென்று முன்மாதிரியாயிருந்து தங்கள் வாழ்க்கையின் மூலம் புகட்டுதலே அவதார புருஷர்களின் முதற் கடமை. இக்கோட்பாட்டுக்கு மாறுதலாக ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றிப் பகர்வார் உளர். ஸ்ரீ ராமன் வாழ்ந்தது போன்று நாம் வாழவேண்டுமென்பதும் ஸ்ரீ கிருஷ்ணன் புகட்டியது போன்று நாம் நடந்துகொள்ள வேண்டுமென்பதும் அவர்களது கொள்கை. ஆனால் இதற்கு ஆதாரமொன்றுமில்லை. ஆயிரக்கணக்கான அரக்கர்களைக் கொன்றது சில அவதார புருஷர்களின் அசாதாரணச் செயல். மக்களுள் சிலர் தீ மீது நடக்கின்றனர். தன் உடல்மீது யானை ஏறி நிற்பதைத் தாங்கும் மனிதன் ஒருவன் இருக்கலாம். இவை மக்களுள் நாம் காணும் அசாதாரணச் செயல்களாம். எல்லாரும் இப்படிச் செய்ய வேண்டிய அவசியமில்லை. பிறகு கிருஷ்ணன் போன்று நாம் ஒழுகலாகாது என்று எதைக் குறித்து இவர்கள் இயம்புகிறார்கள்? கோபியர்கள் பலருக்கு அவன் வல்லபனாயிருந்தது நமக்கு ஒவ்வாது என்பது இவர்கள் கருத்து. தனக்கு வயது பத்து ஆவதற்குள் அவனது பிருந்தாவன விளையாட்டுகள் முடிந்துவிடுகின்றன. பத்து வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுவன் ஒருவன் எண்ணிக்கையில் அடங்காத பேர்களுடன் தூர்த்தனாய் நடந்துகொள்வது சாத்தியமா? இயற்கை இதற்கு இடந்தருமா? ஆராய்ச்சிக்குரிய இக்கேள்விகளை நன்றாய் அலசிப் பார்க்கவேண்டும். ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஹ்ருஷீகேசன் என்பது ஒரு பெயர். இந்திரியங்களுக்கெல்லாம் ஈசன் என்று அது பொருள்படுகிறது. நாம் இந்திரியங்களுக்கு அடிமை. அவன் இந்திரியங்களுக்கு அதிபதி. உடல் பற்று இருக்கும் வரையில், உடலைத் தான் என்று எண்ணும் வரையில், உடல் ஞாபகம் இருக்கும் வரையில் பராபக்தி வருவதில்லை என்பதே ஸ்ரீ கிருஷ்ணன் கோபியர்களுக்குப் புகட்டிய பாடமாகும். உடல் ஞாபகத்தைக் கடந்து மேலே செல்லுதலே மானுட வாழ்க்கையின் மேலாம் லட்சியமாகும். ஆதரிப்பாரற்ற ஆயிரக்கணக்கான பெண்களுக்குக் கிருஷ்ணன் நாயகனாகிறான். அவர்களை ஆதரிப்பவன் என்றே அது பொருள்படுகிறது. அவர்களுக்கு அவன் மணாளன் என்று உடல் தொடர்வு வைத்துக் கருதுபவர்கள் உண்மையை அறியாதவர்கள். இன்றைக்கு அகதிகளை அரசாங்கம் காப்பது போன்று அன்றைக்கு அவன் அவர்களைக் காத்து வந்தான். அதற்கேற்ற நெருக்கடி அக்காலத்திலும் சமூகத்தில் உண்டாயிற்று.
கோபிநாதன் என்பதும் ஜகந்நாதன் என்பதும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு உண்டான மற்ற பெயர்கள். ஜீவர்கள் எல்லாரும் கோபிகளாவர். ஏனென்றால் அவர்கள் பிரகிருதியின் வசப்பட்டுப் பிரகிருதி சொரூபமாயிருக்கிறார்கள். அத்தனை உயிர்களுக்கும் அவன் உயிராயிருக்கிறான். பரம புருஷனை நாயகனாக அறிந்து கொண்டவர்களே உண்மையை அறிந்துகொண்டவர்களாவர். உயிர்களுக்கெல்லாம் சாரதியாக மனத்தகத்து எழுந்தருளியிருக்கும் அதே பரமாத்மா அவர்களுக்கெல்லாம் மணாளனாகவும் மனத்தகத்து வீற்றிருக்கிறான். இக்கோட்பாட்டின் பிரகாரம் ஸ்ரீகிருஷ்ணனுடைய மனைவியர்கள் (ஜீவர்கள்) எண்ணிக்கையில் அடங்கமாட்டார்கள்.