சனி, 11 ஜூன், 2016

விஸ்வாமித்திரமுனிவர் அயோத்தியை அடைதல்
இரு முனிவர்களின் சபதங்களையும் கேட்ட தேவேந்திரன் அவ்வாறே ஆகட்டும் என்று சொன்னார். விஸ்வாமித்திரமுனிவர் தனக்குத்துணையாக எமதர்மராசனையும் சுக்கிரபகவானையும் அழைத்துக்கொண்டு பூலோகம் சென்று அயோத்திமாநகரை அடைந்தார். சத்தியக்கீர்த்தியை பிரதம அமைச்சராகக்கொண்டு தன் மனையாளான சந்திரமதியுடனும் தன் மகன் லோகிதாசனுடனும் இன்பமாக சத்தியம் தவறாது ஆட்சி செய்துகொண்டு வாழ்ந்துவரும் அரிச்சந்திரன் அவையை விஸ்வாமித்திரமுனிவர் அடைந்தார். விஸ்வாமித்திரரைக்கண்டு மகிழ்ச்சியடைந்த அரிச்சந்திரமன்னன் தன் மந்திரியாகிய சத்தியகீர்த்தியோடும்; தன் மனைவியாகிய சந்திரமதியோடும்; தன்மகன் லோகிதாசனோடும் சென்று விஸ்வாமித்திரமுனிவரை வணங்கி வரவேற்று ஆசனத்தில் அமரவைத்தார். அரிச்சந்திர மன்னன் விஸ்வாமித்திரமுனிவரை வணங்கி அய்யா! தாங்கள் என்ன நலன்கருதி எம் அவைக்கு வருகைபுறிந்திருக்கிறீர்கள் என்பதை அறிய ஆவலாக இருப்பதாக தெரிவித்தார்.
விஸ்வாமித்திர முனிவரின் முதல் கட்ட சோதனை
அரிச்சந்திரனின் சத்தியத்தை சோதனை செய்ய திட்டமிட்ட விஸ்வாமித்திரர் அதற்கான முதல் நடவடிக்கையில் இறங்க ஆயத்தமானார். அரிச்சந்திரனைப்பார்த்து தருமநெறி தவராமல் வாழும் அரிச்சந்திர மன்னனே! நான் இவ்வுலக நலன் கருதி பெரியதொரு யாகத்தை செய்ய எண்ணியிருக்கின்றேன் ஆகபடியினாலே அதற்குண்டான பொருளுதவியை நாடி உங்களிடம் வந்திருக்கின்றேன் என்று சொன்னார் விஸ்வாமித்திரமுனிவர். விஸ்வாமித்திரரின் வார்த்தையைக்கேட்ட அரிச்சந்திரன் உலக நலன் கருதி நடத்த இருக்கின்ற உயர்ந்த யாகத்திற்கு பொருளுதவி செய்வது பெரும்புண்ணியமாயிற்றே ஆகபடியினால் அதற்குண்டான முழு பொருளுதவியும் நான் தருகின்றேன் என்று விஸ்வாமித்திரரிடத்திலே வாக்களித்து யாகத்திற்கு எவ்வளவு பொருள் தேவை உடனடியாகச்சொல்லுங்கள் உடனடியாகக்கொடுத்து விடுகிறேன் என்று விஸ்வாமித்திரரை நோக்கி வினவினார்.
அரிச்சந்திரனின் தர்ம வார்த்தைகளைக்கேட்டுக்கொண்ட விஸ்வாமித்திரமுனிவர் தனக்குத் தேவையான பொருளின் அளவைக்கூற ஆரம்பித்தார். ஒருவட்டப்பாறையின் மீது ஒரு யானையை ஏற்றி அந்த யானையின் மீது ஒரு இளம் வாலிபரை அமர்த்தி ஒரு வில்லைக்கொண்டு ஒரு அம்பை மேல் நோக்கி எரியச்செய்தால் அந்த அம்பு எவ்வளவு உயரத்திற்குச்செல்லுமோ அந்த அளவு பொன் வேண்டுமென்று அரிச்சந்திரனிடத்திலே சொன்னார். தர்மத்தின் தலைவனான அரிச்சந்திரன் இல்லையென்று சொல்லாமல் அவ்வாறே அவ்வளவு பொன்னையும் விஸ்வாமித்திரரின் பாதத்திலே சமர்ப்பித்தார். பொன்பொருளை ஏற்றுக்கொண்ட விஸ்வாமித்திரர் அரிச்சந்திரனை நோக்கி அய்யா! சத்தியத்தின் தலைவனே! நான் இப்பொழுது அவசரமாக வேறொரு இடத்திற்குச்செல்கிறேன் ஆகபடியினாலே இவ்வளவு பொன்பொருளையும் இப்பொழுது என்னால் எடுத்துச்செல்லமுடியாது ஆகையினாலே நான் யாகம் செய்வதற்குண்டான நாள் குறித்த பிறகு தேவைப்படும் பொழுது உங்களிடம் வந்து நான் பெற்றுக்கொள்கிறேன். ஆகபடியினாலே நான் திரும்பிவந்து கேட்கும் வரை இவ்வளவு பொன்னையும் உங்கள் அரசாங்கக்கருவூலத்தில் தனிப்பேழையில் விஸ்வாமித்திரர் பொருள் என்று எழுதி பாதுகாத்து வையுங்கள் நான் சென்று வருகிறேன் என்று சொல்லி விட்டு அரிச்சந்திரனிடம் விடைபெற்றுச்சென்றார் விஸ்வாமித்திரர்.
விஸ்வாமித்திரமுனிவரின் இரண்டாம் கட்ட சோதனை
அரிச்சந்திரனின் சத்தியத்தை சோதனை செய்ய பல்வேறு திட்டங்களைத்தீட்டிய விஸ்வாமித்திரர் இரண்டாம் கட்ட நடவடிக்கைக்குத்தயாரானார். தன்னுடைய தவவலிமையால் இரண்டு அழகானப் பெண்களைப் படைத்தார். தன்னால் படைக்கப்பட்ட இரண்டு பெண்களிடத்திலே அரிச்சந்திரன் அவைக்குச்சென்று ஆடல் பாடல்களைப்பாடி அரிச்சந்திரனை மகிழ்வித்து காம இச்சையை அரிச்சந்திரனுக்கு உருவாக்கி அவனது சத்தியத்தை கெடுத்து அவனைப்புணர்ந்து வரவேண்டும் என்று பணித்தார். விஸ்வாமித்திரர் மீண்டும் தன் அருமைப்பெண்களைப்பார்த்து உங்களால் ஒருவேளை அரிச்சந்திரனோடு புணர்ச்சி செய்து அவனது கற்பைக்கெடுக்க முடியவில்லையென்றால் அவனது சிம்மாசனத்தின் மேல் சுழன்று கொண்டிருக்கும் சத்திய வேந்தனின் இலச்சனையாக விளங்கும் ”பூச்சக்கரக்குடையை” பரிசாகப்பெற்று வாருங்கள் என்று பணித்தார். விஸ்வாமித்திரர் மீண்டும் தன் பெண்களைப்பார்த்து எனதருமைப்பெண்களே ஒருவேளை பூச்சக்கரக்குடையை உங்களால் பெறமுடியாமல் போனால் ஒரேயொரு பொய்யையாவது அரிச்சந்திரனிடமிருந்து வாங்கிக்கொண்டு வெற்றியோடு திரும்புங்கள் என்று தான் படைத்த இரண்டு பெண்களுக்கும் ஆணையிட்டார்.
தன்னுடைய தந்தையின் ஆணையின்படி அந்த இரண்டு பெண்களும் அயோத்திமாநகரின் அரண்மனையை அடைந்தார்கள். தாங்கள் வடதிசையிலிருந்து வருவதாகவும்; தாங்கள் ஆடல்பாடல் கலையில் வல்லவர்களென்றும்; ஆகையினால் அரசனுக்கு முன்பாகக்கலையினுயர்வை நிரூபித்து பரிசு பெற வந்திருப்பதாகவும் அண்மனையில் கூறினர். அரிச்சந்திரனின் பிரதம அமைச்சராகிய சத்தியக்கீர்த்தியானவர் அரிச்சந்திரனிடத்திலே இந்த விவரத்தைச்சொல்ல அரிச்சந்திரரும் அதற்கு செவிசாய்த்து ஆடல் பாடல்களை நிகழ்த்துமாறு அரண்மனைக்கு வந்த இரு பெண்களையும் கேட்டுக்கொண்டார். ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நன்றாக முடித்த பிறகு அதற்குண்டான பரிசைப்பெறுவதற்காக அரிச்சந்திரனின் பாதங்களை இரு பெண்களும் பணிந்தார்கள். அரிச்சந்திரன் தன்னைப்பணிந்த இரண்டு பெண்களையும் பார்த்து தங்களுக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்டார். அதற்கு அந்த இருபெண்களும் அரிச்சந்திரரைப்பார்த்து அய்யா, நாங்கள் எது கேட்டாலும் தருவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அரிச்சந்திரன் அந்த இருபெண்களையும் பார்த்து அன்புப்பெண்களே! சத்தியத்திற்குட்பட்டு, என் சக்திக்குட்பட்டு எனக்கு உரிமையான நீங்கள் கேட்கும் நியாயமான பரிசை மட்டும் நிச்சயமாக என்னால் கொடுக்க முடியும் ஆகையினால் தாராளமாகக்கேளுங்கள் என்று சொன்னார்.
அந்த இரு பெண்களும் அரிச்சந்திரரைப்பார்த்து அய்யா! எங்களுக்கு நீங்கள் தான் வேண்டும் ஆகையினாலே எங்களுடன் உடலுறவு கொண்டு எங்களின் காமப்பசியைத்தீர்த்து வையுங்கள் என்று கூறினர். அரிச்சந்திரன் அந்த இரு பெண்களையும் பார்த்து அன்புப்பெண்களே! நான் ஏகபத்தினி விரதன், என்னுடைய மனைவி சந்திரமதியைத்தவிர எந்த ஒரு பெண்ணையும் நான் மனதாலும் தொடமாட்டேன்; எனவே, என் மனைவிக்குச்சொந்தமான என்னை நீங்கள் கேட்பது தவறு எனவே, வேறொரு பரிசைக்கேளுங்கள் நான் தாராளமாகத்தருகிறேன் என்று சொன்னார். அந்த இரண்டு பெண்களும் அரிச்சந்திரரை நோக்கி அய்யா! உங்களின் சிம்மாசனத்தின் மேல் சத்தியத்தின் இலச்சனையாக எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கின்றதே அந்த பூச்சக்கரக்குடையை எங்களுக்குப்பரிசாகக்கொடுங்கள் என்று கேட்டனர். அரிச்சந்திரர் அந்த இரண்டு பெண்களையும் பார்த்து அன்புப்பெண்களே சத்தியத்தின் இலச்சனையாகத்திகழும் பூச்சக்கரக்குடை எனக்குச்சொந்தமானதல்ல; ஆகபடியினாலே என் நாட்டு மக்களுக்குச்சொந்தமான பூச்சக்கரக்குடையை உங்களுக்கு பரிசாகக்கொடுக்க எனக்கு அதிகாரமில்லை அதுமட்டுமல்லாமல் இந்த நாட்டில் சத்தியம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு அடையாளமாகத்தான் என் சிம்மாசனத்தின் மேல் பூச்சக்கரக்குடை சுழன்று கொண்டிருக்கிறது; எனவே அதை அரசவையிலிருந்து எடுத்து விட்டால் என் நாட்டில் “சத்தியம்” என்னும் நெறி நின்று விடும்; பிறகு அதர்மம் பிறக்க ஆரம்பித்து விடும்; ஆகையினாலே வேறு ஏதாவதொரு பரிசைக்கேளுங்கள் கட்டாயம் கொடுத்து விடுகிறேன் ஏனென்றால் அரிச்சந்திரன் சொன்ன சொல்லை எந்த சூழ்நிலையிலும் காப்பாற்றத்தவறாதவன் என்று அந்தப்பெண்மணிகளிடம் திருவாய் மலர்ந்தருளினார் அரிச்சந்திரர்.
அந்த இரு பெண்களும் அரிச்சந்திரரை நோக்கி, அய்யா! நாங்கள் கேட்கும் பரிசை உங்களால் தர இயலாது என்கிற பொய்யை கூறிவிடுங்கள் நாங்கள் அதை பரிசாக எற்றுக்கொண்டு விடுகிறோம் என்று கூறினர். அதற்கு அரிச்சந்திரன் அந்த பெண்களைப்பார்த்து அன்புப்பெண்களே நான் எப்பொழுதும் சொன்ன சொல்லை இல்லையென்னு சொல்லமாட்டேன் ஆகபடியினாலே சத்தியத்திற்குட்பட்ட எனக்குச்சொந்தமான ஒரு பரிசை என்னிடத்தில் கேளுங்கள் கட்டாயம் தருகின்றேன் என்று சொன்னார். தமது முயற்சிகளில் தொடர்ந்து தோல்விகளைத் தழுவிய இரு பெண்களும் இதற்கு மேல் எங்களுக்கு எந்த பரிசும் வேண்டாம் என்று சொல்லி விட்டு அவையை விட்டு நீங்கி விஸ்வாமித்திரரிடத்திலே சென்று முறையிட்டனர்.
விஸ்வாமித்திரமுனிவரின் முன்றாம் கட்ட சோதனை
தன்னுடைய தொடர் முயற்சிகளெல்லாம் தோல்விகள் பெறுவதை அறிந்த விஸ்வாமித்திரர் மூன்றாவது கட்ட நடவடிக்கைக்குத்தயாரானார். தேவர்களைத்துணையாகக்கொண்டு மிகக்கொடிய மிருகங்களை உருவாக்கி அவைகளை அயோத்திமாநகருக்குச்சென்று விளைபயிர்களையெல்லாம் அழித்து வரும்படி கட்டளையிட்டார். எஜமானின் விருப்பப்படி கொடிய மிருகங்களெல்லாம் அயோத்தி மாநகருக்குள் சென்று அந்நாட்டிலிருந்த அனைத்து பயிர்களையும் அழித்துவிட்டுச்சென்றது.
நாட்டின் குடிமக்களெல்லாம் மன்னன் அரிச்சந்திரனிடத்திலே சென்று முறையிட்டனர். அரிச்சந்திரன் தன்னுடைய அரசு கருவூலத்திலிருந்து பொன்பொருள்களை குடிமக்களுக்கு வாரிவழங்கி குடிமக்களின் குறைகளைத்தீர்த்து வைத்தான். தன்னுடைய தொடர்முயற்சிகளெல்லாம் தோல்விகள் பெறுவதை அறிந்த விஸ்வாமித்திரர் நான்காவது கட்ட நடவடிக்கைக்குத்தயாரானார்.
விஸ்வாமித்திரமுனிவரின் நான்காம் கட்ட சோதனை
தேவசபையில் இருந்த வருணனை அழைத்து அயோத்தி மாநகரில் தொடர்ந்து மழைபெய்யாமல் இருக்கும்படி கட்டளையிட்டார். வரட்சியின் கொடுமை தாங்கமுடியாமல் குடிமக்களெல்லாம் அரிச்சந்திரனிடம் முறையிட்டனர். அரிச்சந்திரன் மீண்டும் தனது அரசு கருவூலத்திலிருந்து பொன்பொருள்களை குடிமக்களுக்கு வாரி வழங்கி குடிமக்களின் குறைகளைத்தீர்த்து வைத்தார்.
விஸ்வாமித்திரமுனிவரின் ஐந்தாம் கட்ட சோதனை
விஸ்வாமித்திரர் ஐந்தாம் கட்ட நடவடிக்கைக்குத்தயாரானார். அரிச்சந்திரன் அவையை அடைந்த விஸ்வாமித்திரர் தனக்கு ஒரு தானம் வேண்டுமென்று அரிச்சந்திரரைப்பார்த்துக்கேட்டார். அரிச்சந்திரர் விஸ்வாமித்திரரை வணங்கி தாங்கள் எதுவேணுமானாலும் கேளுங்கள் அதை நான் கட்டாயம் தருகிறேன் என்று வாக்களித்தார். விஸ்வாமித்திரர் அரிச்சந்திரரை நோக்கி அய்யா! நீங்கள் சத்தியம் தவறாது ஆட்சி செய்து வரும் இந்த அயோத்தி நாட்டை எனக்கு தானமாக அளியுங்கள் என்று கேட்டார்.
அரிச்சந்திரன் தனது நாட்டை விஸ்வாமித்திரருக்கு தானம் செய்தல்
சொன்ன சொல் தவறாத வாய்மை வேந்தன் அரிச்சந்திரன் மனமுவந்து எள்ளும் தண்ணீரும் கொண்டுவந்து தர்ப்பணம் செய்து தன் நாட்டை மகிழ்ச்சியுடன் விஸ்வாமித்திரமுனிவருக்கு தானம் செய்தார். பிறகு விஸ்வாமித்திரர் அரிச்சந்திரனைப்பார்த்து அய்யா அரிச்சந்திரனே! நீர்மட்டும் உமது நாட்டை தானம் செய்து கொடுத்தால் அதுபோதாது உமக்கு உரிமையான மனைவிக்கும் இந்த நாடு சொந்தாமானது அது மட்டுமல்லாமல் உன் தந்தைக்குப்பிறகு இந்த நாடு உமக்கு உரிமையானதால் பாட்டன் சொத்து பேரனுக்கு உரிமையாவதால் இந்த நாடு உமது மகனுக்கும் உரிமையானது ஆகபடியினாலே உங்களின் மனைவியையும் மகனையும் கூப்பிட்டு அவர்களையும் இந்த நாட்டை எனக்கு தானம் செய்யச்சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அரிச்சந்திரன் தன்னுடைய மனைவி மற்றும் மகனை அழைத்து அவர்களையும் தானம் செய்யவைத்தார். தானத்தை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட விஸ்வாமித்திரர் அரசவையைக்கூட்டி குடிமக்களின் முன்னிலையில் தம்மை முடிசூட்டி மன்னனாக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அரிச்சந்திரனும் அவ்வாறே இசைந்து அவையைக்கூட்டி குடிமக்கள் முன்னிலையில் விஸ்வாமித்திரருக்கு முடிசூட்டி அழகு பார்த்தார். அரிச்சந்திரன் சத்தியத்தைக்காக்க சொன்ன சொல் தவறாமல்; பொய்யுரைக்காமல், தனது நாட்டையே விஸ்வாமித்திரருக்கு தானமாக வழங்கியதை கண்ணுற்ற குடிமக்கள் மனம் கலங்கி அழுதனர்.
அரிச்சந்திரன் அவர்களுக்கெல்லாம் ஆறுதல் சொல்லி, என்னுடைய குடிமக்களாகிய நீங்களெல்லோரும் என் போன்று சத்தியம் தவறாது வாழ்பவர்களாதலால் உங்களின் தலைவனான என்னுடைய செயலைக்கண்டு நீங்கள் மனவருத்தம் அடையக்கூடாது; எனவே, மனமகிழ்வுடன் புதிய மன்னராகிய விஸ்வாமித்திரருக்கு ஆதரவு தந்து அவருக்குக்கீழ்பணிந்து வாழுங்கள் என்று உபதேசித்தார். சத்தியம் தவறாத குடிமக்களும் அவ்வாறே செய்வதாக அரிச்சந்திரரிடத்திலே வாக்களித்தனர்.
விஸ்வாமித்திரமுனிவரின் ஆறாம் கட்ட சோதனை
அயோத்தியின் அரசனாக பதவியேற்றுக்கொண்ட விஸ்வாமித்திரர் ஆறவாவது கட்ட நடவடிக்கைக்குத்தயாரானார். அரிச்சந்திரனை நோக்கி அய்யா! அரிச்சந்திரனே! உம்முடைய நாடு எமக்கு சொந்தமாகிவிட்ட படியினால் நீங்கள் என் நாட்டில் இருக்கக்கூடாது; எனவே, உடனடியாக குடும்பத்துடன் நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்று கட்டளையிட்டார். அரிச்சந்திரன் விஸ்வாமித்திரரை வணங்கி தன் மனைவி சந்திரமதியையும் தன்மகன் லோகிதாசனையும் அழைத்துக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேற ஆயத்தமானார். அப்பொழுது அயோத்தி நாட்டு குடிமக்களெல்லாம் அரிச்சந்திரரை தடுத்தனர். அரிச்சந்திரன் குடிமக்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக்கூறி மனுநீதியின் உயர்வுகளைக்கூறி அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறி நடக்க ஆரம்பித்தார்.
விஸ்வாமித்திரமுனிவரின் ஏழாம் கட்ட சோதனை
விஸ்வாமித்திரர் ஏழாவது கட்ட நடவடிக்கைக்குத்தயாரானார், நாட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கும் அரிச்சந்திரனை திடீரென்று தடுத்தார். அரிச்சந்திரன் விஸ்வாமித்திரரை நோக்கி தான் தடுக்கப்பட்டதற்கான காரணத்தைக்கேட்டார். விஸ்வாமித்திரர் அரிச்சந்திரனை நோக்கி அய்யா! அரிச்சந்திரனே! முன்னொரு சமயம் உலக நலன் கருதி யாகம் செய்வதற்காக பொருளுதவி வேண்டி நான் உங்களிடம் வந்தேன் அந்த நேரத்தில் தாங்களும் இசைந்து பல்லாயிரம் பொன்களை எனக்கு தானமாகக்கொடுத்தீர்கள்; அப்பொழுது அவ்வளவு பொருள்களையும் உடனடியாக எடுத்துச்செல்வதற்கு என்னால் இயலாத காரணத்தினால் அவ்வளவு பொன்பொருள்களையும் உம்மிடத்தில் அளித்து உமது அரசு கருவூலத்திலேயே என் பெயரிட்டு பாதுகாக்கும்படியும் நான் மீண்டும் வேண்டும்பொழுது தரவேண்டுமெனவும் உம்மிடத்திலே சொல்லிவிட்டுச்சென்றேன்; தற்பொழுது அப்பொன்பொருள் எனக்குத்தேவைப்படுகின்றது எனவே அப்பொருளை எமக்கு திருப்பித்தந்துவிட்டு நீங்கள் நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்று பணித்தார். விஸ்வாமித்திரரின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்ட அரிச்சந்திரன் விஸ்வாமித்திரரை நோக்கி! அய்யா விஸ்வாமித்திரமுனிவரே! தாங்கள் கொடுத்த பொன்பொருள் அனைத்தும் அரசுக்கருவூலத்திலேயே உங்கள் பெயரிட்டு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது ஆகையினால் உங்கள் பொருள் எங்கும் போய்விடவில்லை. தற்பொழுது தாங்கள் அயோத்தி மன்னரான படியினால் நீங்களே அந்தபொருளை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார். உடனே, விஸ்வாமித்திரர், அரிச்சந்திரனை நோக்கி அய்யா அரிச்சந்திரனே! உங்கள் நாட்டையே எனக்கு தானம் செய்த பிறகு உங்கள் நாட்டிலுள்ள அனைத்து பொருட்களும் எனக்கு சொந்தமாகிவிட்டபடியினால் நீங்கள் எனக்குக்கொடுத்தவாக்கின்படி எனக்குச்சேரவேண்டிய பொன்பொருள்களை கொடுத்துவிட்டு பிறகு இந்த நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்று சென்னார்.
அரிச்சந்திரன் அயோத்தியை விட்டு வெளியேற்றப்படுதல்
சத்தியம் தவறாத அரிச்சந்திரன் விஸ்வாமித்திரரை நோக்கி, அய்யாமுனிவரே! என்னிடத்திலே ஒரு காசு கூட இப்பொழுது இல்லாதபடியினால் நான் உழைத்து சம்பாதித்துத்தான் உமக்குச்சேரவேண்டிய பொன்பொருள்களை கொடுக்கவேண்டும் ஆகபடியினாலே எனக்கு ஒரு மண்டல காலமாகிய 48 நாட்கள் அவகாசம் தாருங்கள் நான் வெறொரு நாட்டிற்குச்சென்று உழைத்து சம்பாதித்து உங்களது கடனை அடைத்து விடுகிறேன் என்றுச்சொன்னார். இதைக்கேட்ட விஸ்வாமித்திரர் அப்படியானால் உங்களுடன் ஒரு தரகனை அனுப்பிவைக்கிறேன், அவனிடத்திலே எனக்குச்சேரவேண்டிய பொன்பொருள்களைக் கொடுத்தனுப்புங்கள் என்றுக்கூறினார். அரிச்சந்திரனும் அவ்வாறே இசைந்தார். பலநாட்கள் பசிபட்டினியுடன் அரசபோகத்தை இழந்து பிச்சைக்காரனைப்போல அரிச்சந்திரன் தன்மனைவி சந்திரமதியோடும் தன்மகன் லோகிதாசனோடும் காசிமாநகரை நோக்கிச்செல்லும் வழியில் சரயு நதிக்கரையோரம் தங்கினர். அப்பொழுது விஸ்வாமித்திரரால் அனுப்பப்பட்ட நட்சத்திரேயர் என்னும் தரகர் அரிச்சந்திரனை அணுகி விஸ்வாமித்திரரால் அனுப்பப்பட்டுள்ள தரகர் தாம் தான் என்றும் விஸ்வாமித்திரருக்குச்சேரவேண்டிய பொன்பொருள்களைத்தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அரிச்சந்திரன் மிகப்பணிவுடன் தரகராகிய நட்சத்திரேயரை நோக்கி அய்யா, சிறிது நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள், நான் எப்படியாவது உமது எஜமானனுக்குச்சேரவேண்டிய கடன்களைக்கொடுத்துவிடுகிறேன் அதுவரை தாங்கள் எங்களுடனேயே பயணம் செய்யுங்கள் என்று வேண்டிக்கொண்டார்.
விஸ்வாமித்திரரின் தரகர் அரிச்சந்திரனுக்கு பல தொல்லைகள் கொடுத்தல்
அவ்வாறே அரிச்சந்திரனை பின் தொடர்ந்த நட்சத்திரேயர் அரிச்சந்திரனுக்கு பல தொல்லைகள் கொடுத்தார். தன்னால் நடக்கமுடியாததாகையால் தன்னை சுமந்துகொண்டு செல்லும் படியும் பணித்தார். அரிச்சந்திரன் நட்சத்திரேயரை நோக்கி அய்யா தரகரே ! என் மகன் லோகிதாசன் சின்னக்குழந்தை காடுமேடுகளையெல்லாம் கடந்து பசிபட்டினியால் வாடிக்கொண்டு அழுது கொண்டு வருகிறான் ஆதலால் அவனை நான் என் தோளில் சுமந்து கொண்டு வருகின்றேன் அப்படி இருக்கும் பொழுது தங்களை நான் எப்படி சுமந்து கொண்டு வருவேன் என்று சொன்னார். அதைக்கேட்ட நட்சத்திரேயர் அதெல்லாம் முடியாது என்னை உமது தோளில் சுமந்து கொண்டு தான் போக வேண்டும் இல்லையேல் விஸ்வாமித்திரரின் கடனை அடைக்க முடியாது என்று பொய் சொல்லி விடுங்கள் நான் இனி உங்களை தொந்தரவு செய்யமாட்டேன் எனவே நான் திரும்பிச்சென்றுவிடுகிறேன் என்றுச்சொன்னார். உடனே, அரிச்சந்திரன் நட்சத்திரேயரைப்பார்த்து அய்யா பெரியவரே! நான் வாய்மை தவறமாட்டேன், ஆதலால் கட்டாயம் உமது எஜமானனுக்கு சேரவேண்டிய கடனைக்கொடுத்து விடுகிறேன், என் தோளில் அமர்ந்து கொள்ளுங்கள் என்று கூறி தன் தோளில் அமர்த்திக்கொண்டு பயணிக்கலானார். பயணகாலத்தில் நட்சத்திரேயர் அடிக்கடி பல்வேறு விதமாக அரிச்சந்திரனுக்குத்தொல்லைகள் கொடுத்துக்கொண்டு வந்தார். தனக்கு அடிக்கடி பசிக்கின்றதென்றும் ஆகையினால் உயர்ந்த உணவு வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அரிச்சந்திரன் காடுகளில் சுற்றித்திரிந்து பல பழவகைளை சிரமப்பட்டு பரித்துக்கொண்டு வந்து நட்சத்திரேயருக்குக்கொடுத்து அவரின் பசியை ஆற்றி தானும் தன் மனைவியும் தன் மகனும் உணவு உண்ணாமலேயே பலநாள் பட்டினியாய் வாடிக்கொண்டு காசி மாநகரை அடைந்தார்கள்.
அரிச்சந்திரன் காசிமாநகரை அடைதல்
காசிமாநகரை அடைந்தவுடன் நட்சத்திரேயர் அரிச்சந்திரனைப்பார்த்து அய்யா அரிச்சந்திரனே! தாங்கள் என் எஜமானனுக்குக்கொடுத்த காலகெடு முடிவடையும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது ஆகபடியினாலே உடனடியாக எமது கடனை அடைக்கும் மார்க்கத்தைத்தேடுங்கள் என்று சொன்னார். அரிச்சந்திரனின் மனைவியாகிய கற்புக்கரசி சந்திரமதி அரிச்சந்திரனைப்பார்த்து, சுவாமி! கடனை அடைப்பதற்கு நான் ஒரு உபாயம் சொல்கிறேன் தயவுசெய்து அதைக்கேட்டு அதன்படி நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். அரிச்சந்திரனும் அவ்வாறே செய்வதாக தன் மனைவியினிடத்திலே வாக்களித்தார். சுவாமி! இந்த காசி மாநகர் வீதியிலே செல்வம் படைத்த அந்தணர்கள் பலர் இருப்பார்கள் அவர்களுக்கு அடிமை வேலை செய்ய <ஆட்கள் தேவைப்படும் ஆகையினாலே அவர்களிடம் என்னை விற்று அவர்களுக்கு ஆயுள்காலம் முழுவதும் அடிமையாக்கி அதன்மூலம் வரும் செல்வத்தைக்கொண்டு நட்சத்திரேயரின் கடனை அடைத்து விடுங்கள் என்றுச்சொன்னாள். இதைக்கேட்ட அரிச்சந்திரன் மனம் கலங்கினார். விதியின் சோதனையைக்கண்டு மனம் நெகிழ்ந்து தற்போது தமக்கு வேறு வழில்லாத படியினால் அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொண்டார்.
அரிச்சந்திரன் தன்மனைவி சந்திரமதியை விலைகூறி விற்றல்
காசிமாநகரிலே, அந்தணர் வீதியிலே தன் மனைவியை விலை கூறி விற்றுக்கொண்டே சென்றார். இதைக்கண்ணுற்ற காசிமாநகர் மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஒருவன், தனக்குச்சொந்தமான ஆடு, மாடு, கோழி போன்ற ஐந்தறிவு ஜீவன்களையோ அல்லது உயிரற்ற பொருள்களையோ விற்பதைத்தான் நாம் பார்த்திருக்கிறோம் ஆனால் இன்றைய தினம் ஒருவர் தன் மனைவியையே விலை கூறி விற்கின்றாரே! ஈதென்ன ஆச்சரியம், தன்னுடைய மனைவியை விற்குமளவிற்கு அவருடைய வாழ்க்கையில் துன்பம் ஏற்பட்டதோ எனப்பேசிக்கொண்டார்கள், அந்தணர் வீதியில் விஸ்வாமித்திரரால் முன்பே நியமிக்கப்பட்ட தேவதூதர் காலகண்ட அய்யர் வடிவிலே வந்து அரிச்சந்திரனிடத்திலே நட்சத்திரேயருக்குச்சேரவேண்டிய பொன்பொருளுக்கு ஈடான விலைக்கு வாங்கிக்கொண்டார். அரிச்சந்திரன் மீளா துயரத்துடன் சத்தியநெறிப்படி தன் மனைவியை காலகண்ட அய்யருக்கு தாரை வார்த்துக்கொடுத்தார். சந்திரமதியைப்பெற்றுக்கொண்ட காலகண்ட அய்யர் சந்திரமதியின் மகனாகிய லோகிதாசனும் தனக்குச்சொந்தம் என்று உரிமைகொண்டாடினார். ஒருவன் பசுவை விற்று விட்டபிறகு அதன் கன்றும் அவனுக்கு சொந்தமாகிறபடியினால் லோகிதாசனும் எனக்கு அடிமையாகிறான் ஆகபடியினாலே லோகிதாசனையும் எனக்கு தாரைவார்த்துக்கொடுங்கள் என்று அரிச்சந்திரனைப்பார்த்துக்கேட்டார் காலகண்ட அய்யர். மனுதர்மத்தின்படி ஒழுகும் சத்திய சீலர் அரிச்சந்திரன் அவ்வாறே தன் மகனையும் தருவதாக வாக்களித்து தன் மகனை காலகண்ட அய்யரிடம் தாரைவார்த்துக்கொடுத்தார். தன் மனைவியையும், மகனையும் ஒரு சேர இழந்த அரிச்சந்திரன் மிகவும் துயரடைந்தார். தான் ஈட்டிய பொருளை நட்சத்திரேயரிடம் கொடுத்து விஸ்வாமித்திரருக்குச்சேரவேண்டிய கடனை அடைத்தார். நட்சத்திரேயர் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். அரிச்சந்திரன் நட்சத்திரேயரிடம் விடைபெற்று தொடர்ந்து பயணிக்க முற்பட்டபோது நட்சத்திரேயர் அரிச்சந்திரனை தடுத்தார். அரிச்சந்திரன் நட்சத்திரேயரைப்பார்த்து அய்யா! ஏன் என்னை தடுக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நட்சத்திரேயர் அய்யா! தாங்கள் விஸ்வாமித்திரருக்குச்சேர வேண்டிய கடன்களை அடைத்துள்ளீர்கள் ஆனால் இத்தனை நாட்களாக நான் உங்களோடு வந்து துன்பப்பட்டு கடனைப்பெற்றுக்கொண்டுச்செல்கின்றேன் அல்லவா? அதற்கு ஊதியமாக தரகுக்கூலியை கொடுத்துவிட்டு நீங்கள் செல்லுங்கள் என்றுச்சொன்னார். அரிச்சந்திரன் நட்சத்திரேயரைப்பார்த்து அய்யா! தங்களுக்கு எவ்வளவு தரகு ஊதியம் தேவை? என்று கேட்டார். அதற்கு நட்சத்திரேயர் தனக்கு பதினாறாயிரம் பொன் தரகுக்கூலியாகத்தேவை என்று கேட்டார். அரிச்சந்திரனும் அவ்வாறே தருவதாக வாக்களித்தார்.
அரிச்சந்திரன் தன்னையே விலைகூறி விற்றல்
தனிமரமாக நின்ற அரிச்சந்திரன் தரகுக்கூலியை தருவதற்காக தன்னையே விற்க முடிவு செய்தார். காசிமாநகர வீதிகளில் சுற்றித்திரிந்து தன்னையே விலைகூறிச்சென்றார் ஆனால் ஒருவரும் வாங்கவில்லை. இறுதியாக தாழ்ந்த குலமரபினர்கள் வாழும் பகுதிக்குச்சென்று தன்னை விற்றுக்கொண்டு சென்ற பொழுது காசிமாநகரின் பிரதான சுடுகாட்டைக்காவல் புரியும் வீரவாகு என்னும் தோட்டி பதினாறாயிரம் பொன்கொடுத்து அரிச்சந்திரனை வாங்கிக்கொண்டார். தான் பெற்றபொருளை நட்சத்திரேயரிடம் கொடுத்து மகிழ்வுடன் நட்சத்திரேயரை வழியனுப்பினார் அரிச்சந்திரன்.
சந்திரமதி பலகொடுமைகளுக்கு ஆளாகுதல்
வீரவாகுவால் வாங்கப்பட்ட அரிச்சந்திரன் தன் எஜமானனிடம் அனைத்து அடிமை வேலைகளையும் செய்யலானார். இப்படி மயானத்திலே காவல் தொழில் புரிந்து அரிச்சந்திரன் வாழ்ந்துகொண்டு வரும் பொழுது; காலகண்ட அய்யரால் அரிச்சந்திரனிடமிருந்து வாங்கப்பட்ட சந்திரமதியும் லோகிதாசனும் பல துன்பங்களை அனுபவித்தனர். காலகண்ட அய்யரும் அவர் மனைவி காலகண்டியும் பலவிதமான அடிமைவேலைகளை சந்திரமதியினிடத்திலும் லோகிதாசனிடத்திலும் வாங்கிக்கொண்டு வாழலாயினர். அரிசிக்குத்துதல், சாணம் தட்டுதல், எஜமானனுக்கும் எஜமானிக்கும் கால்பிடித்து விடுதல் போன்ற எண்ணற்ற அடிமை வேலைகளைச்செய்யலாயினர்.
லோகிதாசன் பாம்பு கடித்து இறத்தல்
இவ்வாறிருக்கையில் ஒருநாள் அமாவாசை திதி நெருங்கிவிட்டபடியினால் அந்தணர்கள் வீட்டில் அதற்குண்டான தர்பைப்புல் தேவைப்படுவதால் தர்ப்பையைக்கொய்து வர லோகிதாசனை தன்வீதியில் வாழும் பிற அந்தணர்பிள்ளைகளுடன் காலகண்ட அய்யரும் அவரது மனைவியும் அனுப்பி வைத்தனர். சிறுகுழந்தையான லோகிதாசன் காட்டிற்குச்சென்று தர்ப்பையைக்கொய்யும் போது நல்லப்பாம்பு கடித்துவிடுகிறது. அய்யோ! அம்மா! அப்பா! என்று கதரிய லோகிதாசனைக்காண பிற அந்தணப்பிள்ளைகளெல்லாம் அங்கு வந்தனர். லோகிதாசன் அவர்களிடத்திலே இங்கு நடந்த விவரங்களை தன் தாயினிடம் சொல்லிவிடுமாறும் தான் இனி பிழைக்கமாட்டேன் என்றும் சொல்விட்டு உயிர் துறந்தான். லோகிதாசனின் சடலத்தை ஒரு ஆலமரத்தின் அடியில் கிடத்தி விட்டு ஆவாரைத்தழைகள் பலவற்றை பொறுக்கி வழிதோறும் அவைகளைப்போட்டுக்கோண்டே அந்தணப்பிள்ளைகளெல்லாம் காலகண்ட அய்யரின் வீட்டை அடைந்து லோகிதாசனின் மரணச்செய்தியை சொன்னனர். லோகிதாசனின் சடலம் இருக்குமிடத்தையும் அவ்விடத்தை கண்டுபிடிக்க ஆவாரம் தழைகளை அடையாளத்திற்காக வழிநெடுகிலும் போட்டு விட்டு வந்துள்ளதையும் தெரிவித்துவிட்டு இரவு நேரமாகையினால் அனைத்து அந்தணப்பிள்ளைகளும் அவரவர் வீடுதிரும்பினர்.
லோகிதாசனின் மரணச்செய்தியைக்கேட்டு சந்திரமதி புலம்பல்
தன்மகனின் மரணச்செய்தியைக்கேட்ட சந்திரமதி மயக்கமுற்று கதறி அழுதாள். சூரியகுலத்தின் ஒரே வாரிசான நீ இறந்துவிட்டாயா மகனே! உன் தந்தை என்னை மீட்டுக்கொள்வதற்காக மீண்டும் ஒருநாள் வந்து கேட்டால் நான் அவருக்கு என்ன பதில் சொல்லப்போகிறேனடா மகனே! உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன்! நீ பிறந்த நாளிலே உன் தந்தை பெருமகிழ்ச்சியடைந்து அயோத்தி மாநகர் முழுமைக்கும் இலவச உணவு, உடை, கோதானம் போன்ற பலகோடி தானங்களை உன் தந்தையார் நாட்டுமக்களுக்காக செய்தாரடா என் மகனே! உன் தந்தை செய்த பலகோடி தானதர்ம புண்ணியங்கள் கூட உன் மரணத்தைத்தடுக்கவில்லையா மகனே? அந்த தர்மதேவதை உன் மரணகாலத்தில் தூங்கிவிட்டாளா மகனே? என்று பல்வாறாக புலம்பி அழுதுகொண்டு தன் எஜமானரிடத்திலே மன்றாடி அனுமதி பெற்று ஆவாரத்தழைகளை பார்த்துக்கொண்டே தன் மகனின் சடலம் வைக்கப்பட்டிருக்கும் ஆலமரத்தடியை அடைந்தாள் சந்திரமதி. தன் மகனின் சடலத்தைக்கண்டு தன்மகன் லோகிதாசனின் பாட்டனாரான திரிசங்கு சக்கரவர்த்தியின் புகழையும் அதற்கு முன் அயோத்தியை ஆண்ட அவரின் மூதாதையர்களான சூரியகுலத்தின் பேரரசர்களின் தர்மவாழ்வையும் நினைவு கூர்ந்து அப்படிப்பட்ட உயர்ந்த குலத்தில் பிறந்த உனக்கா இந்த கதி? இந்த உலகைக்காக்கும் இறைவன் பரமேஸ்வரனும் செத்துவிட்டானோ? இந்த பூமியில் நீதி மரணமடைந்துவிட்டதோ? என்றெல்லாம் புலம்பியபடி கதறி அழுதாள்.
சந்திரமதி லோகிதாசனின் சிதைக்குத்தீமூட்டல்
பலமணிநேரம் அழுத பிறகு தன்னைத்தானே தேர்த்திக்கொண்டு இரவு முடிவதற்குள் தன் எஜமானரின் வீட்டுக்குத்திரும்பி பணிவிடைகளைச்செய்யவேண்டுமாதலால் தன்மகனின் சடலத்தை எரிப்பதற்காக தன் மகனை சுமந்து கொண்டு நள்ளிரவு நேரத்தில் காசிமாநகரின் சுடுகாட்டை அடைந்து சுடு காட்டில் தன் மகனின் சடலத்தைக்கிடத்தினாள். காட்டிலுள்ள விரகுகளையெல்லாம் பொறுக்கிக்கொண்டு வந்து தன்மகனின் சடலத்தின் மீது முறையாக அடுக்கினாள். பிறகு தன் குலகுருவாகிய வசிட்டரையும் தன் குலத்தின் மூலகுருவாகிய சம்புகமுனிவரையும் நினைத்து தன்மகனின் சிதைக்குத்தீமூட்டினாள்.
மயானக்காவலர் ஆட்சேபம் தெரிவித்தல்
அப்பொழுது அந்த சுடுகாட்டை காவல் புரிந்து வரும் வீரவாகுத்தோட்டியின் அடிமையான அரிச்சந்திரன் அங்கே வந்து தீயை அணைத்து சடலத்தை எரிப்பதை நிறுத்தினான். காலங்கள் பல கடந்தமையாலும் தானும் தன் மனைவியும் அடிமை வேலை செய்து வருவதாலும் இருவரின் உருவங்களும் மாற்றம் பெற்றபடியினாலும், அதுமட்டுமல்லாமல் நள்ளிரவு காலமானதாலும் ஒருவரையொருவர் அடையாளம் காணமுடியவில்லை.
அரிச்சந்திரன் சந்திரமதியைப்பார்த்து அடிப்பெண்ணே! நீ இந்த நள்ளிரவிலே இந்த சுடுகாட்டின் காவலாளியான எனக்குத்தெரியாமல் எப்படி பிணத்தைச்சுடலாம்? என்று கேள்விகள் பல கேட்டு பிணம் சுடுவதை நிறுத்தினான். அரிச்சந்திரன் தன்னெதிரே நின்ற பெண்ணைப்பார்த்து மயானக்காவலராக விளங்கக்கூடிய எனக்குச்சேரவேண்டிய மயானக்கட்டளைகளாகிய கால்பணம், முழம்துண்டு, வாய்க்கரிசி போன்றவைகளைக்கொடுத்தால் மட்டுமே பிணத்தை சுடமுடியும் என்று தெரிவித்தார். இதைக்கேட்ட சந்திரமதி மயானக்காவலராகிய அரிச்சந்திரனிடத்திலே அய்யா! எனக்கு திக்கு இல்லை எனவே, என்னால் நீங்கள் சொல்லும் கட்டளையை செலுத்தமுடியாது என்று சென்னாள். இதைக்கேட்ட மயானக்காவலரான அரிச்சந்திரன் அப்படியானால் உமக்கு கணவனில்லையா? என்று கேட்டார். இதைக்கேட்டு மனம் நொந்த சந்திரமதி மயானக்காவலரை நோக்கி அய்யா! எனக்கு கணவருண்டு ஆனால் அவருடைய அரவணைப்பில் நான் இப்பொழுது இல்லை எனவே, என்னால் தாங்கள் கேட்கும் கட்டளையை கொடுக்க இயலாது எனவே, தயவு செய்து என்மகனின் பிணத்தை எரிக்க அனுமதியுங்கள் என்று வேண்டிக்கேட்டாள். எதிரே நின்ற பெண்ணைக்கண்ட அரிச்சந்திரன் அடிப்பெண்ணே! உன் கழுத்தில் அழகாக ஒளிர்கின்றதே விலைமதிக்க முடியாத தாலி அதை விற்று எனக்குச்சேரவேண்டிய கட்டளையைக்கொடுத்துவிட்டு உன் மகனின் சடலத்தை எரித்துக்கொள் என்று சொன்னார். மயானக்காவலரின் வார்த்தையைக்கேட்ட சந்திரமதி மிகவும் மனம் கலங்கினாள். தேவர்கள், மூவர்கள் முதலான ஈரேழு பதினான்கு லோகங்களில் வாழும் யார் கண்ணுக்கும் தெரியமுடியாத என் கணவரின் கண்ணுக்கு மட்டுமே தெரியக்கூடிய எனது கற்பின் சின்னமாக விளங்கக்கூடிய மாங்கல்யம் ஒரு மயானக்காவலாளியின் கண்ணுக்குத்தெரிந்துவிட்டதே! இந்த துன்பத்தை நான் எப்படி தாங்கிக்கொள்வேன்? என்று கதரி புலம்பி மண்ணிலே வீழ்ந்தாள் சந்திரமதி.
இதைக்கண்ட அரிச்சந்திரன், தான்தான் வாழ்வில் பெருந்துயரத்தை அனுபவித்து வருபவன் என்று நினைத்தால் இந்தப்பெண் என்னைவிட பெருந்துயரத்தை அனுபவிப்பவள் போலல்லவா தெரிகின்றது என்று நினைத்துக்கொண்டு தன்னை இகழ்ந்து பேசியதையும் பொருட்படுத்தாமல் அந்த பெண்ணின் மீது நீர் தெளித்து மயக்கம் தெளிவித்தார். சந்திரமதியின் வார்த்தைகளைக்கேட்ட அரிச்சந்திரன் ஒரு கணம் சிந்தித்தார், தன் எதிர் முன் நின்றகின்ற பெண் ஒருவேளை தன்னுடைய மனைவி சந்திரமதியாக இருக்குமோ! அவளுக்குத்தானே அத்தகைய சிறப்பு உண்டு எனவே, அவளின் முழுவரலாற்றைக் கேட்டுவிடலாம் என்று நினைத்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.
சந்திரமதி தன் வரலாற்றைக்கூறுதல்
அம்மா! தாங்கள் யார்? எந்த ஊர்? உங்கள் மகன் எப்படி இறந்தான்? விவரமாக எனக்குச்சொல்லுங்கள் என்று வேண்டிக்கொண்டார். சந்திரமதி மயானக்காவலர் அரிச்சந்திரனைப்பார்த்து தன்னைப்பற்றிய விவரங்களைச்சொல்ல ஆரம்பித்தார். கண்ணமாபுரியை ஆளக்கூடிய மதிதேய மன்னரின் பெருந்தவப்பயனாய் ஒரே மகளாக ஒப்பற்ற மகளாக சந்திரமதி என்னும் திருப்பெயரோடு நான் பிறந்தேன். தேவரகசியத்தின்படி குழந்தையாக இருக்கும் பொழுதே எனக்கும் என் கணவருக்கும் திருமணமானபடியினால் என் கணவர் கட்டிய மாங்கல்யம் நாளுக்கு நாள் அழகோடு வளர்ந்து வந்தது. என்கணவருக்கு மட்டும் தான் என் கழுத்திலுள்ள மாங்கல்யம் தெரியும் அது மற்ற யாவரின் கண்ணுக்கும் தெரியாது. நான் பருவமடைந்தவுடன் என் தந்தை நடத்திய சுயவரப்போட்டியில் கலந்துகொண்டு அயோத்தியை ஆளக்கூடிய திரிசங்கு சக்கரவர்த்தியின் ஒரே மகனான ஒப்பற்ற மகனான சத்தியம் தவறாத அரிச்சந்திர மன்னன் என்னை திருமணம் செய்துகொண்டார். தேவர்கள் எல்லோரும் வந்திருந்து எங்களை ஆசீர்வதித்து இளமையிலேயே எங்களுக்குத்திருமணம் நடந்ததை எங்களுக்கு உணர்த்தி தேவரகசியத்தின்படி இளமையில் அரிச்சந்திரமன்னன் எனக்குக்கட்டிய தாலியானது என் கணவராகிய அரிச்சந்திரமன்னனுக்கு மட்டும் தான் தெரியும் என்றுரைத்து தேவலோகமடைந்தனர். சத்தியம் தவறாமல் என் கணவர் அயோத்தியை ஆண்டு கொண்டு வந்த பொழுது விஸ்வாமித்திர முனிவரின் சூழ்ச்சியால் நாடிழந்து, நகரிழந்து, கணவனைப்பிரிந்து, தற்பொழுது என் ஒரேமகனான லோகிதாசனையும் பாம்புக்கடியால் இழந்து நான் துடிதுடித்துக்கொண்டிருக்கின்றேன் என்று தன்னுடைய முழு வரலாற்றையும் கூறினாள் சந்திரமதி.
அரிச்சந்திரன் உண்மையை அறிதல்
இதைக்கேட்ட அரிச்சந்திரன், அய்யய்யோ! சந்திரமதி! நான்தான் உன் கணவன் அரிச்சந்திரன்! நம்மகன் இறந்துவிட்டானா?. நான் என்ன செய்வேன்! என்று சுடுகோலை கீழே போட்டுவிட்டு அழுது புலம்பினான் அரிச்சந்திரன். பிறகு அழுகையை நிறுத்திவிட்டு தம்மைத்தேர்த்திக்கொண்டு தன் மனைவியையும் தேர்த்தி தன்மனைவியிடம் பேசலானார் அரிச்சந்திரன். சந்திரமதி! எனக்குச்சேரவேண்டிய வாய்க்கரிசி மட்டும் எனக்கு வேண்டாம் ஆனால் என் எஜமானனுக்குச்சேரவேண்டிய கால்பணமும், முழந்துண்டும் கட்டாயம் தேவை, அப்படி இருந்தால் தான் நான் நம் குழந்தையின் பிணத்தை எரிக்கமுடியும் ஏனென்றால் நான் சத்தியம் தவறாதவன், எந்த நிலையிலும் கடமையைத்தவறாதவன், எனவே உனடியாக நீ உன் எஜமானரிடம் சென்று அன்பாக வேண்டி கால்பணத்தையும் முழந்துண்டையும் பெற்றுக்கொண்டுவா என்று ஆறுதல் வார்த்தைகளைக்கூறி சந்திரமதியை அனுப்பினார். அளவில்லாத துயரங்களுடன் தன் எஜமானரின் வீட்டை நோக்கிச்சென்றுகொண்டிருந்த சந்திரமதி வழியில் ஒரு அழகான ஆண்குழந்தை இறந்திருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தாள். தான் கண்டகுழந்தையைப்பார்த்தவுடன் தன் மகன் லோகிதாசனின் நினைவு சந்திரமதிக்கு வந்தது. உடனே, அந்தக்குழந்தையை தன் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு கதறினாள்.
சந்திரமதிக்கு மரணதண்டனை வழங்குமாறு காசிராஜன் கட்டளையிடுதல்
அந்த நேரத்தில் காசிராஜனுடைய குழந்தை காணாமல் போய்விட்டதை அறிந்து காசிராஜனின் காவலாட்கள் காணாமல் போனக்குழந்தையைத்தேடிக்கொண்டு வந்தனர். சந்திரமதியின் தோள்களில் காசிராஜனின் குழந்தை இருப்பதைக்கண்ட காசிநாட்டுக்காவலர்கள் சந்திரமதிதான் குழந்தையைத்திருடியவளென்றும். அவள் தான் குழந்தையை கொலை செய்து விட்டாள் என்றும் தீர்மானித்து சந்திரமதியை அரசனிடம் கொண்டு நிறுத்தினர். காசிராஜன் சந்திரமதியை விசாரணைசெய்யாமல் சந்திரமதியைக்குற்றவாளி எனத்தீர்மானித்து அவள் சிரசை வெட்டிக்கொல்லுமாறு தன் காவலர்களுக்குப்பணித்தார். காசிநாட்டுக்காவர்கள் சந்திரமதியை காசிநாட்டின் பிரதான மயானக்காவலனான வீரவாகுமூலம் அரிச்சந்திரனிடத்திலே சேர்ப்பித்து அரசகட்டளையைக்கூறினர். மிகவும் மனம் கலங்கிய அரிச்சந்திரன் தன் மனைவி குற்றவாளி அல்ல என்று தெரிந்தும் அரச கட்டளைக்குப்பணிந்து தன் கடமையைச்செய்ய தீர்மானித்தார்.
அரிச்சந்திரன் அரசகட்டளையை நிறைவேற்றுதல்
அரிச்சந்திரன் சந்திரமதியை நோக்கி அவள் கழுத்தை நீட்டுமாறு பணித்து வாளை ஓங்கி கழுத்தை வெட்டுவதற்கு முற்பட்டபோது விஸ்வாமித்திரர் வந்து தடுத்தார். அரிச்சந்திரன் விஸ்வாமித்திரரைப்பார்த்து ஏன்? இந்த நேரத்தில் வந்து என் கடமையைச்செய்யவிடாமல் தடுக்கின்றீர் என்று கேட்டார். அதற்கு விஸ்வாமித்திரர், அரிச்சந்திரா! உன் மனைவி குற்றமற்றவள் எனவே அவளைக்கொல்வது தவறல்லவா? எனவே, அவளைக்கொல்லாதே என்று சொன்னார். அதைக்கேட்ட அரிச்சந்திரன், அய்யா! முனிவரே! என் மனைவி குற்றமற்றவள் என்பது எனக்கும் தெரியும், இருந்தாலும் அரச கட்டளைப்படியும் என் தொழில் தர்மப்படியும் நான் கடமையாற்றுவது தான் தர்மம் எனவே, நான் சந்திரமதியின் கழுத்தை வெட்டுவதுதான் சரி என்று சொல்லி இரண்டாவது தடவையாக வாளை ஓங்கி கழுத்தின் மீது வெட்டினார் அரிச்சந்திரன். என்ன ஆச்சர்யம்! சந்திரமதியின் கழுத்தில் பட்டவெட்டு பூமாலையாக கழுத்தில் விழுந்திருந்தது. தன் கடமையை சரிவர செய்யமுடியவில்லையே என்று நினைத்த அரிச்சந்திரன் உலகத்தின் தலைவனாகவும், தான் தற்பொழுது வாழும் காசிநகரத்தின் தலைவனாகவும் விளங்கக்கூடிய அன்னை விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதரைப்பணிந்து, இறைவா! நான் சத்தியத்திற்கும் தர்மத்திற்கும் கட்டுப்பட்டவன் என்பது உண்மையானால் இதோ இந்த மூன்றாவது வெட்டில் சந்திரமதியின் தலை துண்டாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு மூன்றாவது வெட்டிற்காக வாளையோங்கினான் அரிச்சந்திரன்.
உமாமகேஸ்வரன் காட்சிக் கொடுத்தல்
உலகத்தின் அன்னை விசாலாட்சிதேவியும், உலகத்தின் தந்தை காசிவிஸ்வநாதரும் ரிடபவாகனத்தின் மீது அமர்ந்து கொண்டு தேவர்கள் சூழ காட்சிக்கொடுத்து அரிச்சந்திரனை தடுத்து நிறுத்தி ஆசீர்வதித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக