சனி, 11 ஜூன், 2016

செய்தி வழங்கல்

அரிச்சந்திரா! தர்மத்தின் தலைவனே! தர்மத்தின் காவலனே! கவலைப்படாதே உன் மனைவி குற்றமற்றவள் ஆகையினால் தான் உன்னால் அவளைக்கொல்ல முடியவில்லை, சத்தியமும் தர்மமும் ஒருவரை சோதிக்கும் ஆனால் அது யாரையும் கைவிட்டுவிடாது. ஈரேழு பதினான்கு லோகங்களை உள்ளடக்கிய இவ்வுலகத்தில் உமக்கு நிகரான சத்தியவான் யாரும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காகவும் “இந்த உலகத்தில் சத்தியத்தின் ஒரே தலைவன் ” நீர்மட்டுமே என்பதை நிரூபணம் செய்வதற்காகவும் தேவசபையின் கட்டளைப்படி உமது வாழ்க்கையில் சத்திய சோதனை நடத்தப்பட்டது அதில் நீ வென்றுவிட்டாய், அது மட்டுமல்லாமல் உம்மை சோதித்தவர்கள் அனைவரும் தேவர்கள்; நீர்காத்தது சுடுகாடு அல்ல யாகசாலை; அதுமட்டுமல்ல நீ இழந்ததாகக்கருதும் உன்மகன் மற்றும் காசிராஜனின் மகன் ஆகிய இருவர்களும் சாகவில்லை அவர்கள் இருவரும் என் மைந்தர்கள் முருகன் மற்றும் விநாயகனுடன் கயிலாயத்திலே விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி அந்த இரண்டு குழந்தைகளையும் உயிருடன் மயானத்திற்கு வரவழைத்து ஆசீர்வதித்தார் இறைவன்.

லோகிதாசனுக்கு அயோத்தியை முடிசூட்டல்
இதுநாள் வரை நீ, இழந்ததாகக்கருதும் அயோத்தி நாட்டை உன் பிரதம அமைச்சர் “சத்தியக்கீர்த்தி” சத்தியம் தவறாமல் ஆட்சிசெய்து கொண்டு வருகிறார். எனவே, உம் நாட்டையும் நீ இழக்கவில்லை எனவே, மீண்டும் அரசாட்சியை ஏற்றுக்கொண்டு வாழ்வாயாக! என்று ஆசீர்வதித்தார் பரமேஸ்வரன். யாருக்கும் கிட்டாத பெரும்பயனான இறைவனின் பரிபூரண தேவசபைபோடு கூடிய காட்சியைக்கண்ட அரிச்சந்திரன் பெருமகிழ்ச்சியடைந்தார். இறைவனை நோக்கி ஒரு விண்ணப்பம் செய்தார், இறைவா! என்மகன் லோகிதாசனுக்கு அயோத்தியை முடிசூட்டுங்கள் என்று வேண்டினார். அவ்வாறே லோகிதாசனுக்கு இறைவனின் கட்டளைப்படி முடிசூட்டப்பட்டது. இறைவன் லோகிதாசனை ஆசீர்வதித்தார். அரிச்சந்திரன் இறைவனை நோக்கி மீண்டும் ஒரு விண்ணப்பம் செய்தார். இறைவா! நான் இதுநாள்வரை இந்த மயானத்திலேயே இருந்துவிட்டேன் ஆகபடியினாலே இந்தமயானத்தை அரசாட்சி செய்யக்கூடிய ஒரு சிறந்த தெய்வீகப்பணியை எமக்கு அளித்து என்னை சிறப்பு செய்யுங்கள் என்று வேண்டிக்கொண்டார்.

சத்தியத்தின் காவல் தெய்வமாக அரிச்சந்திரன் நியமிக்கப்படல்
அரிச்சந்திரனின் வேண்டுகோளைக்கேட்ட இறைவன், அரிச்சந்திரனைப்பாத்து, அரிச்சந்திரா! நீ விரும்பியபடி பூலோகத்திலுள்ள அனைத்து மயானங்களிலும் நீர் தர்மத்தின் தலைவனாக காவல்தெய்வமாக இருந்து பூலோகத்தில் மரணமடையும் ஒவ்வொரு ஆன்மாவும் உம்மைவந்து வணங்கியபிறகு உம்முடைய அனுமதி பெற்ற பிறகு உம்முடைய கட்டளைப்படி தான் அடுத்த நிலையை அடையவேண்டும் என்கிற வரத்தை உமக்குத்தருகிறேன். இவ்வுலகில் பிறந்து மடியும் ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் அவரவர் செய்த நல்வினைத்தீவினைகளின்படி முக்தியையோ அல்லது மறுபிறவியையோ அல்லது சூன்யதிதி நிலையோ அல்லது நரகமோ கொடுத்து அதன் பிரதியை சித்திரகுப்தனுக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்கிற வரத்தை நான் உமக்குக்கொடுக்கிறேன்.

நீர், உம்மனைவி கற்புக்கரசி சந்திரமதியுடன் சிரஞ்சீவியாக இப்பூவுலகில் வாழ்ந்து தர்மத்தின் தலைவனாக இவ்வுலகில் தேவர்களுளொருவனாகி உன் மனைவியை உன் ஆத்மபீடத்தில் சுமந்துகொண்டு உன் கடமைகளை ஆற்றுவாய் என்று ஆசீர்வதித்து மறைந்தார். இறைவனின் கட்டளையை ஏற்று அவ்வாறே தன் மனைவியை ஆத்மபாகத்தில் சுமந்துகொண்டு தன் கடமையைச்செய்யலானார் அரிச்சந்திரன்.

விஸ்வாமித்திரர் தோல்வியை ஒப்புக்கொள்ளுதல்
இச்சூழ்நிலையில் அரிச்சந்திரன் பொய்யன் என்று நிரூபிக்கத்தவறிய விஸ்வாமித்திரர் தன் தவறான செயலுக்காக தேவசபையில் மன்னிப்புக்கேட்டார். தாம் ஒப்புக்கொண்டபடி தன் தவ வலிமையின் பாதியை வசிட்டருக்கு அளித்துவிட்டு மதுக்குடம் ஏந்தி தென்திசைநோக்கிப்புறப்பட்டார் விஸ்வாமித்திரர். அரிச்சந்திரன் வாழ்க! அவன் தர்மம் வாழ்க! அவன் சத்தியம் வாழ்க! என்று தேவர்களெல்லாம் பறைசாற்றினர். தேவசபை கலைந்தது, தேவேந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் பெருமகிழ்வெய்தினான்.
அரிச்சந்திரன் திருக்கோயில் - தர்மத்தின் பீடம்
அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு மயானத்திலும் அரிச்சந்திரனுக்கு பூசை செய்து வீரசம்புகமுனிவர் அருளிய “தர்மநீதிப்” பாடல்கள் முழுவதும் பாடியபிறகு; அரிச்சந்திரனின் அனுமதி பெற்று பிறகு பிணங்கள் எரிக்கப்படுவதும் புதைக்கப்படுவதும் நடைபெற்று வருகின்றது. இன்னன்ன புண்ணியங்கள் செய்தவர்கள் இன்னன்ன உயர்வானப்பலன்களை அடைவார்கள் என்றும்; இன்னன்ன பாவங்கள் செய்தவர்கள் இன்னன்ன தாழ்வானப்பலன்களை அடைவார்கள் என்றும் தர்மநீதிப் பாடல்களில் வீரசம்புகர் சொல்லியுள்ளார். ஆக, மரணமடைந்தவரின் ஆன்மாவின் பாபபுண்ணியக்கணக்குகள் அரிச்சந்திரனால் சரிபார்க்கப்பட்டு அடுத்த நிலை நிர்ணயிக்கப்படுகிறது. அரிச்சந்திரனின் உயர்வு தெரியாமல் பல மயானங்களில் அரிச்சந்திரனின் சிலையை அமைத்து கோயில் கட்டி வழிபடாமல் தற்காலிகமாக ஒரு கருங்கல்லையோ அல்லது செங்கல்லையோ வைத்து அதை அரிச்சந்திரனாக பாவித்து மக்கள் கடமையாற்றி வருவதால் இவ்வுலகில் தர்மம் குறைந்து கொண்டே வருகின்றது. எனவே, ஒவ்வொரு மயானத்திலும் முறையாக அரிச்சந்திரனுக்குக்கோயில் கட்டி அவரை முறையாக பூசித்தால் இவ்வுலகில் மீண்டும் தர்மம் தழைத்தோங்கி இல்வுலகம் பல நன்மைகளையும் பெறும்; இவ்வுலக மக்கள் இன்பமாக வாழலாம் என்கிற சூட்சுமத்தை அருள்குரு காகபுஜண்டர் உபதேசித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக