அத்தியாயம் -1
அர்ஜுன விஷாத யோகம்
குழப்பமும் கலக்கமும்
இன்றோ நாளையோ ஒவ்வொருவரும் இறைவன்
என்னும் உண்மையை நாடிச் சென்றே ஆக வேண்டும் .அது இன்றா ? அல்லது நாளையா ?
என்பது தான் கேள்வி .பல துயரங்கள் நம்மை தாக்கும் போது என்ன செய்வது என்ற
குழப்பம் ஒவ்வொரு மனிதனையும் வந்து தவிக்க வைக்கும்.எல்லாம் இவ்வளவு தானா ?
என்ற மிகப் பெரிய சோகம் ஏற்படும் .அத்தகைய சூழ்நிலையில் தான் அர்ஜுனன்
இருக்கிறான்.உற்றார் ,உறவினரைக் கொன்று தான் அரசாட்சியை பெற வேண்டுமா ?
என்னும் மிகப் பெரிய சோகத்தில் குழம்புகிறான்.கலங்குகிறான் .தவிக்கிறான்.
அதன் காரணமாக போரிலிருந்து விலகலாம் ,சண்டையிடத் தேவையில்லை என முடிவு செய்கிறான்.தன் முடிவிற்கான
காரணங்களை ஸ்ரீ கிருஷ்ண பகவானிடம் கூறுகிறான் ...
கீதை உபதேசத்தை நேரில் கேட்டவனான சஞ்சயனிடம் திருதிராஷ்டிர மன்னன் கேட்கின்ற கேள்வியுடன் அத்தியாயம் துவங்குகிறது ...
த்ருதாஷ்டிரன் கேட்கிறான்...
ஸஞ்சயனே !
குருக்ஷேத்ரமென்னும் தர்ம பூமியில்
யுத்தம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன் ஒன்று கூடிய
என் பிள்ளைகளும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள் ?
ஸஞ்சயன் சொன்னான் :-
அப்போது
துரியோதன மன்னன் ,
வியூகமாக அணிவகுத்து நிற்கும் பாண்டவ சேனையைப் பார்த்து துரோணாச்சரியரின் அருகே சென்று
இவ்வாறு கூறினான்.
குருநாதா !
தங்கள் சிஷ்யனும் ,
புத்திசாலியும்
துருபதமன்னனின் மகனுமான
திருஷ்டத்யும்னனால் அணிவகுக்கப்பட்ட
இந்த பாண்டவர்களின் பெரிய சேனையைப் பாருங்கள் .
இந்த பாண்டவ சேனையில்
சூரர்களும் ,
பெரிய வில்களைத் தாங்குபவர்களும் ,
சண்டை செய்வதில்
பீம,அர்ஜுனர்களுக்குச் சமமானவர்களுமான
யுயுதானன், விராடன்,
மஹாரதனான த்ருபதன்,
த்ருஷ்டகேது,
சேகிதானன்,
வீரனான காசிராஜன்,
புருஜித், குந்திபோஜன்,
மனிதசிரேஷ்டனான சைப்யன் ,
பராக்கிரமசாலியான யுதாமன்யு,
உத்தமொளஜஸ்,
வீரமிக்க சுபத்திரையின் மகன்,
துரொளபதியின் குமாரர்கள்,
இவர்கள் எல்லோருமே மகாரதர்கள்.
பிராம்மணோத்தமரே!
இனி
நமது சேனையில்
முக்கியமானவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
என்னுடைய சேனைத்தலைவர்களை
ஞாபகத்திற்காகத் தங்களுக்குச் சொல்கிறேன்.
தாங்கள், பீஷ்மர், கர்ணன்,
க்ருபாசார்யர்,
யுத்ததில் ஜெயிப்பவரான அஸ்வத்தாமா,
விகர்ணன்,
ஸோமதத்தனின் மகன் பூரிச்ரவஸ்,
மற்றும்
அனேக வீரர்கள்
எனக்காக உயிரையும் பொருட்படுத்தாதவர்கள்,
இவர்கள் எல்லோரும்
பற்பல ஆயுதங்களைத் தாங்குபவர்கள்,
போர்க்கலையில் வல்லவர்கள்.
இப்படிப்பட்ட நம் சேனை
பீஷ்மரால் காக்கப்பட்டு
அபரிமிதமாக இருக்கிறது.
பீமனால் காக்கப்பட்ட இந்த பாண்டவர்களின் சேனையோ
மிதமாக இருக்கிறது.
ஆகையால்,
நீங்கள் எல்லோரும்
சேனைகள் நுழையும் வழிகள் எல்லாவற்றிலும்
அவரவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள
இடத்தில் இருந்து ,
பீஷ்மாச்சாரியரையே கவனமாகக் காத்து வாருங்கள்.
இவ்வாறு
துரியோதனன் சொல்லிக் கொண்டிருக்க ,
வீரம் பொருந்தியவரும் ,
குரு வம்சத்துப் பெரியவரும் பாட்டனாருமான
பீஷ்மர்,
உரத்த சிங்கநாதம் செய்து ,
சங்கையும் ஊதினார்.
அதைக் கேட்டு
துரியோதனன் மகிழ்ச்சியடைந்தான்.
பிறகு,
சங்குகளும் ,பேரிகைகளும் ,
தம்பட்டங்களும்,பறைகளும் ,
கொம்புகளும்
வெகு வேகமாக முழக்கம் செய்தன.
அந்த முழக்கம்
ஒரு பேரொலியாக இருந்தது.
அதற்குப் பிறகு
வெள்ளைக் குதிரைகள் பூட்டிய பெரிய தேரில் அமர்ந்திருந்த
கண்ணனும் ,அர்ஜுனனும்
தெய்வத்தன்மை பொருந்திய
தம் சங்குகளை ஊதினார்கள்.
பாஞ்ச ஜன்யம் என்ற சங்கைக்
கண்ணன் ஊதினார்.
தேவதத்தம் என்ற சங்கை
அர்ஜுனன் ஊதினான்.
அச்சமூட்டும் செயல்களைப் புரிபவனும்,
ஓநாய் போன்ற வயிற்றைப் படைத்தவனுமான
பீமசேனன் ,
பொளண்டிரம் என்ற தன் பெரிய சங்கை ஊதினான்.
குந்தியின் மகனான தர்மராஜன்,
அநந்த விஜயம் என்ற சங்கையும்,
நகுலனும் சகாதேவனும்
முறையே
ஸுகோஷம் ,மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும்
ஊதினார்கள்.
வில்வீரனான காசிராஜனும்,
மஹாரதியான சிகண்டியும்,
த்ருஷ்டத்யும்னனும்,
விராட தேசத்தரசனும்,
யாராலும் தோற்கடிக்கப்படாத சாத்யகியும்,
துருபதனும் ,
துரொளபதியின் பிள்ளைகளும்,
புஜபலம் மிக்கவனும்
சுபத்திரையின் குமாரனுமான
அபிமன்யுவும்,
எல்லோரும்
ஒரே சமயத்தில்
தனித்தனியாக
தங்கள் சங்குகளை
முழக்கினார்கள்.
அந்த பெருமுழக்கம்
வானத்தையும்
பூமியையும்
எதிரொலிக்கச் செய்து கொண்டு
துரியோதனாதியரின் இதயங்களைப் பிளந்தது.
அரசே!
ஆயுதங்களைப் பிரயோகிக்கும் அந்த சமயத்தில்
ஆஞ்சநேயரைத்
தன் தேர்க்கொடியில்
அமரச்செய்து கொண்டவனான அர்ஜுனன்,
கெளரவர்கள் போரிடுவதற்காக நிற்பதைக் கண்டு
வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு ,
ரிஷிகேசனான கிருஷ்ணனிடம்
இந்த வார்த்தைகளைச் சொன்னான்.
அர்ஜுனன் சொன்னதாவது :-
அச்சுதா !
என்னுடைய தேரை
இரண்டு சேனைகளின் நடுவில் நிறுத்து.
யுத்தம் செய்ய வேண்டுமென்ற ஆசையுடன்
இங்கு நின்று கொண்டிருக்கும் இவர்களை
நான் பார்க்க வேண்டும்.
இந்த யுத்தத்தில்
யாரோடு நான் சண்டையிட வேண்டுமோ,
துர்புத்தியுள்ள துரியோதனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக யுத்தம் செய்யும் எண்ணத்தோடு
இங்கே யார் யார் வந்திருக்கிறார்களோ
அவர்களை
நான் பார்க்கப் போகிறேன்.
ஸஞ்சயன் சொல்கிறான் !
பாரத மன்னரே ,
இவ்வாறு அர்ஜுனன் கண்ணனிடம் சொல்ல,
அவர் அந்த உயர்ந்த ரதத்தை
பீஷ்மர், துரோணர்
இவர்களுக்கும்,
எல்லா அரசர்களுக்கும் எதிரில் நிறுத்தி,
''அர்ஜுனா !
இங்கு ஒன்றுகூடியுள்ள கெளவர்களைப் பார் !
என்றான்.
அர்ஜுனன் ,
அங்கே இருபுறத்து சேனைகளிலும்
நின்று கொண்டிருக்கும்
தகப்பன்மார்களையும்,
பாட்டன்மார்களையும்,
ஆச்சார்களையும்,
மாமன்மார்களையும்,
சகோதரர்களையும்,
பிள்ளைகளையும்,
பேரப்பிள்ளைகளையும்,
சிநேகிதர்களையும்,
மாமனார்களையும்,
நண்பர்களையும்
கண்டான்.
அவ்வாறு எல்லா பந்துக்களும் நிற்பதைக் கண்ட அர்ஜுனன்,
அதிக இரக்கம் கொண்டு ,
மிக்க வருத்தத்துடன்
இவ்வாறு சொன்னான்;-
கிருஷ்ணா !
போர் செய்ய விரும்பி
இங்கே வந்திருக்கும் இந்த பந்துக்களைப் பார்த்து
என் உடலுறுப்புகள் தளர்வடைகின்றன.
வாய் உலர்ந்து போகிறது.
உடலில் நடுக்கமும்
மயிர்க்கூச்சமும் உண்டாகிறது.
கையிலிருந்த காண்டீபம் நழுவுகிறது.
உடலெல்லாம் எரிகிறது.
நிற்கவும் முடியவில்லை.
மனம் குழம்புவது போலிருக்கிறது.
கேசவா !
பல கெட்ட சகுனங்களை
நான் காண்கிறேன்.
யுத்தத்தில்
சொந்த ஜனங்களைக் கொல்லுவதால்
எந்த நன்மையும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
கிருஷ்ணா !
நான் வெற்றியை விரும்பவில்லை.
ராஜ்யத்தையோ,
சுகத்தையோ விரும்பவில்லை.
கோவிந்தா!
ராஜ்யத்தாலோ,
போகங்களாலோ,
உயிர் வாழ்ந்திருப்பதாலோ,
எனக்கு என்ன பிரயோஜனம் ?
எவருக்காக நாம் ராஜ்ஜியத்தையும் ,
போகங்களையும்,
சுகங்களையும் விரும்புகிறோமோ,
அப்படிப்பட்டவர்களெல்லாம்
பிராணனையும்
செல்வங்களையும் துறந்து
இந்த யுத்த பூமியில் நிற்கிறார்கள்.
ஆசாரியர்கள்,
தகப்பன்மார்கள்,
பிள்ளைகள்,
பாட்டன்மார்கள்,
மாமன்மார்கள்,
மாமனார்கள்,
பேரன்கள்,
மைத்துனர்கள்,
சம்பந்திகள்,
இவர்களெல்லாரும் நிற்கிறார்களே!
மதுசூதனா !
இவர்கள் என்னைக் கொல்ல வந்தாலும்
நான் இவர்களைக் கொல்ல விரும்பவில்லை.
மூவுலகங்களும் கிடைப்பதாக இருந்தாலும்கூட ,
அதையும் நான் விரும்ப மாட்டேன்.
அப்படியிருக்க
ஒரு பூமிக்காகவா நான் இவர்களைக் கொல்வேன் ?
ஜனார்த்தனா !
திருதராஷ்டிரனுடைய மக்களைக் கொன்று
நமக்கென்ன மகிழ்ச்சி வந்து விடப்போகிறது ?
இந்த மகா பாவிகளைக் கொல்வதால்
நமக்குப் பாபமே வந்து சேரும்.
ஆகவே ,
மாதவா !
நம் பந்துக்களான
திருதராஷ்டிரன் மக்களை நாம் கொல்வது தகாது.
சொந்தக்காரர்களைக் கொன்றுவிட்டு
நாம் எப்படிச் சுகமாக இருக்க முடியும் ?
நீயே சொல்.
பேராசையால் விவேகம் அழிந்து போனவர்களான இவர்கள்
குல நாசத்தால் ஏற்படும் கெடுதலையும்
மித்திர துரோகத்தால் ஏற்படும் பாபத்தையும்
அறியவில்லை.
ஜனார்த்தனா !
குல நாசத்தால் ஏற்படும்
கெடுதியை நன்கறிந்தவர்களானா நாம்
இந்த பாபச் செயலிலிருந்து விலகத் தெரிந்து கொள்ளவேண்டாமா ?
குலம் அழிந்தால்
புராதனமான குல தர்மங்கள் அழிந்து போகும்.
தர்மம் அழிந்தால்
குலம் முழுவதையும்
அதர்மம் சூழ்ந்து விடும்.
அவ்வித கலப்பு
குலத்தை அழித்தவர்களுக்கும்,
அந்த குலத்திற்கும் நரகத்தையே தரும்.
இவர்களுடைய பித்ருக்களெல்லாம்
சிரார்த்த பிண்டமும்,
தர்ப்பண ஜலமும் அற்று
நரகத்தில் விழுவார்கள்.
வர்ணக் கலப்பை உண்டாக்குகின்ற குல பாதகர்களின் இத்தகைய தீங்குகளால்
நிலையான ஜாதி தர்மங்களும்
குல தர்மங்களும்
அழிந்து போகும்.
ஜனார்த்தனா !
குல தர்மங்கள் அழியப் பெற்ற மனிதர்களுக்கு நிலையாக
நரக வாசமே கிடைக்குமென்பதைக்
கேள்விப்பட்டிருக்கிறோமே !
ஐயோ !
கஷ்டம் !
ராஜ்ய சுகத்தில் ஆசை வைத்து
பந்துக்களைக் கொல்லப் புகுந்து,
பெரிய பாபத்தைச் செய்யத் தொடங்கி விட்டோமே !
ஒருவேளை ,
நான் கையில் ஆயுதம் தரிக்காமலும் ,
எதிர்க்காமலும் இருக்கும் போது,
ஆயுத பாணிகளான திருதாஷ்டிரக் குமாரர்கள்
யுத்தத்தில் என்னைக் கொன்று விட்டார்களேயானால் ,
அதுவே எனக்கு மிகவும் நன்மையாக இருக்கும்.
ஸஞ்சயன் சொன்னது :-
இப்படிச் சொல்லி விட்டு ,
அர்ஜுனன்,
போர்க்களத்தில்
அம்பையும் வில்லையும் எறிந்து விட்டு
துக்கத்தால் மனம் கலங்கி ,
தேர்த்தட்டில் அமர்ந்து விட்டான்.
அர்ஜுந விஷாத யோகம் என்ற முதல் அத்தியாயம் முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக