ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கீதை-ஒரு அறிமுகம் – 3. ஸ்ரீ கிருஷ்ணன் சகாயத்தையே பாண்டவர் நாடினர்

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் எவ்விதத்திலும் சமாதானம் உண்டாகவில்லை. முன்னையவர்க்கு உரிய நாட்டில் ஒரு சிறு பகுதியையும் திருப்பித்தரப் பின்னையவர் அறவே மறுத்துவிட்டனர். போர்புரிவதால் விளையும் கேடுகளை எண்ணிப் பாருங்கள் என்று சொல்லிவிட்டு, சமாதானப்படுத்த வந்த ஸ்ரீகிருஷ்ண பகவான் துவாரகைக்குத் திரும்பிப் போவாராயினர். எனினும், போர் புரிவதைத் தவிர வேறு வழியில்லை. ஸ்ரீ கிருஷ்ணனுடைய சகாயத்தை நாடி இருதரத்தாரும் துவாரகைக்குச் சென்றார்கள். அவர்கள் வரும்பொழுது கண்ணன் கண்வளர்ந்திருந்தார். பாண்டவர்களின் சார்பில் இளையவன் அர்ஜுனன் முதலில் பள்ளியறைக்குள் சென்று கேசவரின் கால்மாட்டில் நின்றுகொண்டிருந்தான். கௌரவர்களுள் மூத்தவன் துர்யோதனன் பின்பு வந்து, தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டான். கண் விழித்ததும் கால்மாட்டில் நின்ற குந்தி மைந்தனைக் கேசவர் பார்த்தார்; பேச்சும் நடந்தது. பாண்டவர்களுக்குத் துணை புரிவதாகப் பகவான் ஒத்துக்கொண்டார். பின்பு துர்யோதனனிடத்திருந்தும் அதே விண்ணப்பம் வந்தது. தாம் ஒரு பக்கம், தமது சேனை யொருபக்கம் சேர்வதாக ஸ்ரீ கிருஷ்ணன் முடிவு கட்டினார். அர்ஜுனன் கிருஷ்ணனுடைய சகாயத்தையும், துர்யோதனன் சேனையின் உதவியையும் பொறுக்கி யெடுத்தார்கள். கடவுள் நமக்குத் துணையாயிருக்கும்போது பிரதிகூலமான மற்றவைகள் நமக்கு என்ன கேடு செய்யவல்லது? கடவுள் துணை நமக்கில்லாது போய்விட்டால் அனுகூலமான மற்றவைகள் நமக்கு என்னதான் நன்மை செய்துவிடும்? வாழ்க்கை சம்பந்தமான இரண்டு பெரிய கேள்விகள் இவை. மஹாபாரதப் போராட்டத்தின் முடிவே இவ்விரண்டு கேள்விகளுக்கும் விடை தருகிறது.
மேலும், தாம் படையெதையும் எடுத்துப் போர் புரிவதில்லையென்றும், பார்த்தனுக்கு வெறும் தேர் ஓட்டும் தொண்டு புரிதலை மட்டும் வைத்துக்கொள்வதென்றும் கண்ணபிரான் இசைந்திருந்தார். துர்யோதனனுடைய வேண்டுதலுக்குச் செவி சாய்ப்பவராய் அவர் அங்ஙனம் வாக்குக்கொடுத்தார். அத்தகைய உடன்படிக்கை தங்களுக்கு எல்லா விதத்திலும் அனுகூலமானதென்று துர்யோதனன் எண்ணித் திருப்பினான். கண்ணனுடைய கண்காணிப்பு ஒன்று போதாதா, இனி அச்யுதன் ஆயுதம் வேறு எடுத்து அமர் தொடுத்தல் வேண்டுமா? என்று கௌரவர் கூட்டத்தை நண்ணி நின்ற விவேகியர் சிலர் எண்ணுவாராயினர்.

கீதை-ஒரு அறிமுகம் – 2. மஹாபாரதத்தில் அடங்கியது

பகவத்கீதை மஹாபாரதம் என்னும் இதிகாசத்தில் அடங்கியுள்ளது. பீஷ்மபர்வத்தில் 25-வது அத்தியாயத்திலிருந்து 42-வது அத்தியாயம் வரையில் இந்த அரிய நூலைக் காணலாம். ஆக, இதன்கண் பதினெட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன. இவைகளில் அமைந்துள்ள சுலோகங்களின் தொகை எழுநூறு. மஹாபாரதம் என்ற காவியம் முன்பு இயற்றப்பெற்றது என்றும், பகவத்கீதை என்ற சாஸ்திரம் பின்பு அதன்கண் புகுத்தப் பெற்றதென்றும் சிலர் கருதுகின்றனர். ஆனால் அகச் சான்று அதற்கு இடம் தருகிறதில்லை. இலக்கிய அமைப்பு பகவத்கீதை உட்பட ஆதியோடந்தம் ஒரே பாங்கில் இருக்கிறது. மொழியமைப்பில் ஒற்றுமையிருப்பது போன்று கருத்து அமைப்பிலும் ஒற்றுமையிருக்கிறது. மஹாபாரதத்தில் அடங்கியுள்ள விஷயங்களைப் பால் என்று வைத்துக்கொண்டால் பகவத்கீதையில் அடங்கியுள்ள விஷயங்களை வெண்ணெயென்று பாராட்டலாம். மஹாபாரதம் என்னும் உடலுக்கு பகவத்கீதை ஹிருதயமாக அமைந்துள்ளது என்று பகர்வதும் பொருந்தும். உடல் ஒரு காலத்திலும் ஹிருதயம் இன்னொரு காலத்திலும் உண்டானவைகளல்ல

கீதை-ஒரு அறிமுகம் – 1. பிரஸ்தானத்திரயத்தில் ஒன்று

ஒவ்வொரு மதத்துக்கும் சாஸ்திரம் இன்றியமையாதது. மதம் மாறிப் போகாதிருப்பதற்கும், மறைந்து போகாதிருப்பதற்கும் சாஸ்திரம் துணைபுரிகிறது. எந்த சமயத்துக்கு சாஸ்திரம் இல்லையோ அது விரைவில் உரு மாறியமைகிறது. பின்பு நிலையற்றதாய் அது அழிந்துபட்டுப் போகிறது. ஆனால் ஒரு நூலை உறுதியான பற்றுக்கோடாகக் கொண்டுள்ள மதம் என்றைக்கும் அசைவற்றிருக்கிறது. எதிர்ப்புகளையும், தாக்குதல்களையும் அது தாங்கி நின்று மீளுகிறது. உலகத்தில் நீடுழி நிலைத்துள்ள மதங்களுக்கெல்லாம் அதனதன் சாஸ்திரங்கள் உள. இந்து மதத்தில் கணக்கற்ற சாஸ்திரங்கள் இருக்கின்றன. பொதுவாக அவையனைத்துக்கும் வேதங்களே முதற் காரணமானவைகளென்று பகர்வார்கள். வேதங்களில் பல பகுதிகள் மறைந்து போய்விட்டன. ஆனால் வேதங்களினின்று தெள்ளி யெடுத்த உபநிஷதங்கள் நன்கு காப்பாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. மெய்ப்பொருள் ஆராய்ச்சியில் உபநிஷதங்களின் போக்கு எத்தகையது என்று இயம்புவது பிரம்ம சூத்திரம். இதற்கு வேதாந்த சூத்திரம் என்பது மற்றொரு பெயர். உபநிஷதங்களில் அடங்கியுள்ள கருத்துக்களையெல்லாம் தெளிவுபட விளக்குவது பகவத்கீதை. உபநிஷதங்களைப் பசுக்கள் என்று வைத்துக் கொண்டால் பகவத்கீதையைப் பால் என்று பகரலாம். நேரே பாலைப் பெற்றுக்கொள்ளும் வசதி வாய்க்கப்பெற்றவர்களுக்குப் பசுவை வளர்க்கும் சிரமம் வேண்டியதில்லை.
உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய இம் மூன்று நூல்களும் பிரஸ்தானத்திரயம் என்னும் பெயர்பெறுகின்றன. முடிவான பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது அதன் பொருள். இம்மூன்றனுள் கருத்து வேற்றுமை கிடையாது. தத்துவ விளக்கம் அல்லது மெய்ப்பொருள் விளக்கம் இவைகளுள் முறையாக அமைந்திருக்கிறது. ஹிந்து மதத்துக்கு சாஸ்திரம் எது என்னும் கேள்வி எழுமிடத்துப் பிரஸ்தானத்திரயம் என்றே பதில் அளிக்கவேண்டும். இவைகளில் அடங்காத தத்துவ விளக்கம் வேறு எந்த நூலிலும் இல்லையென்று உறுதி கூறலாம். மற்ற சாஸ்திரங்களில் சொல்லியுள்ள கோட்பாடுகள் பிரஸ்தானத்திரயத்தில் அடங்கியுள்ள கோட்பாடுகளுக்கு விளக்கமாக வந்து அமையலாம். அப்படியல்லாது முரண்படுபவைகளாக வந்தமையுமானால் முரண்படுகிற மற்ற சாஸ்திரங்களைப் புறக்கணிப்பது இந்தியாவில் தொன்றுதொட்டு நடைமுறையில் வந்துள்ள ஐதிகமாகும்.

கீதையின் பெருமை

ஸ்ரீமத்பகவத்கீதை சாட்க்ஷõத் ஸ்ரீபகவானுடைய திருவாய்மொழி. அதன் பெருமை எல்லையற்றது; அளவற்றது. அதை உள்ளபடி வர்ணிக்க யாராலும் முடியாது. ஆதிசேஷன், சிவபெருமான், மஹாகணபதி ஆகியவரும்கூட இதன் பெருமையை முழுமையாகக் கூற முடியாது என்றால் மனிதர்களான நம்மால் மட்டும் எப்படி முடியும். இதிகாசங்களிலும், புராணங்களிலும் ஆங்காங்கு இதன் பெருமையைப் பாடியிருக்கிறார்கள். இப்படி இதுவரை கூறியுள்ள பெருமை அவ்வளவையும் ஒன்று திரட்டினால் கூட அதன் பெருமை இவ்வளவு தான் என்று கூற முடியாமலிருக்க, அதன் பெருமையை முழுமையாகக் கூறிவிட முடியும் என்பது எங்ஙனம் பொருந்தும்.
கீதை <உயர்ந்த ரஹஸ்யங்கள் பொதிந்த நூல். இதில் எல்லா வேதங்களின் ஸாரமும் திரட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் அமைப்பு எளிமையும், அழகும் பொருந்தியது. சிறிது காலப் பயிற்சியினாலேயே யாரும் இதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால், இதன் கருத்துக்கள் ஆழம் மிக்கவை; உட்பொருள் பொதிந்தவை. ஒருவர் வாழ்க்கை முழுவதும் இடைவிடாது இதைப் படித்துக் கொண்டே இருந்தாலும் இதை முழுமையாகக் கற்றுத் தேர்ந்துவிட்டதாக நினைக்க முடியாது. நாள்தோறும் புதிய புதிய கருத்துக்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். அதனால் கீதை என்றும் புதிதாகவே திகழ்கிறது. இவ்விதம் ஒரே முனைப்புடன் நம்பிக்கையும், பக்தியும் கொண்டு ஆராய்ந்து கொண்டே இருந்தால், இதனுடைய ஒவ்வொரு சொல்லிலும் நுண்ணிய ரஹஸ்யங்கள் பொங்கி வருவதை நேரிடையாக அனுபவிக்கலாம். பகவானுடைய கல்யாண குணங்கள், ப்ரபாவங்கள், ஸ்வரூபம், தத்வம், ரஹஸ்யம், உபாஸனை, கர்மம், ஞானம் இவற்றைப் பற்றியெல்லாம் கீதாசாஸ்த்ரத்தில் கூறப்பட்டுள்ளவாறு வேறு எந்த ஒரு நூலிலும் ஒருங்கே காண்பது அரிது. பகவத்கீதைக்கு இணையான நூலே கிடையாது. நன்னெறி புகட்டாத ஒரு சொல் கூட கீதையில் கிடையாது. கீதையில் எந்த ஒரு சொல்லும் வெறும் சுவையூட்டுவதற்காக மட்டுமே அமைந்ததில்லை. இதில் வருகின்ற அத்தனை விஷயங்களும் உண்மையானவை. ஸத்ய ஸ்வரூபனான பகவானுடைய பேச்சிலே சுவையைக் கற்பனை செய்து பார்ப்பது அவரது சொல்லை அவமதிப்பது போலாகும்.
கீதையில் எல்லா சாஸ்த்ரங்களும் அடங்கும். எல்லா சாஸ்த்ரங்களுமே கண்ட முடிவுகளின் ஸாரம் இதில் நிறைந்திருக்கின்றது. எல்லா சாஸ்த்ரங்களுக்கும் இது கருவூலம் என்று சொன்னால் அது மிகையன்று. கீதா சாஸ்த்ரத்தை ஒருவன் தெளிவாகப் புரிந்து கொண்டுவிட்டால் பிற சாஸ்த்ரங்களில் உள்ள தத்துவங்களின் அறிவு, தானே வந்து அமையும். அதற்காகத் தனியாக உழைக்க வேண்டியதில்லை.
மஹாபாரதத்தில், ஸர்வஸாஸ்த்ரமயீ கீதா (பிஷ்ம. 43/2) என்று கூறப்படுகிறது. இவ்வளவு சொன்னாலும் போதாது. எல்லா சாஸ்த்ரங்களும் வேதங்களினின்றும் தோன்றியவை. வேதங்கள் ப்ரம்மதேவனின் திருமுகத்திலிருந்து வெளிவந்தவை. அந்த ப்ரம்மதேவன் பகவானுடைய உந்தித்தாமரையில் உதித்தவன். இவ்வாறு சாஸ்த்ரங்களுக்கும், பகவானுக்கும் இடையே மிக அதிகமான இடைவெளி உள்ளது. ஆனால் கீதையோ ஸாக்ஷõத் பகவானுடைய முகத்தாமரையிலிருந்து நேராக வெளி வந்தது. ஆகவே மற்ற சாஸ்த்ரங்களைவிடச் சிறந்தது என்று கூறுவதில் மிகை ஒன்றுமில்லை. பகவான் வேதவ்யாஸரே கூறுகிறார் :
கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: ஸாஸ்த்ரஸங்க் ரஹை:
யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத் மாத் விநி:ஸ்ருதா – (மஹா. பீஷ்ம. 43/1)
கீதையை நல்ல முறையில் கேட்க வேண்டும், பாட வேண்டும், படிக்க வேண்டும், கற்பிக்க வேண்டும், மனனம் செய்ய வேண்டும், மனதில் தரிக்க வேண்டும். கீதை பகவான் பத்மநாபனின் முகத்தாமரையிலிருந்து வெளிவந்தது. எனவே, கீதையைச் செவ்வனே ஓதுதல் வேண்டும். பிற சாஸ்த்ர நூல்கள் எதற்கு?
இந்த ச்லோகத்தில் பத்மநாப: என்ற சொல் வருகிறது. எல்லா சாஸ்த்ரங்களுக்கும் ஆணிவேரான வேதங்களைத் தம் முகத்திலிருந்து வெளியிட்ட அந்த ப்ரம்மதேவரே பகவானின் உந்தித்தாமரையிலிருந்து உதித்தவர். அந்த பகவானுடைய திருவாயிலிருந்து வெளி வந்தது கீதை என்பது கருத்து.
கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது. கங்கையில் நீராடுவதற்குப் பயன் முக்தி என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. கங்கையில் நீராடுபவன் வேண்டுமானால் முக்தி அடையலாம். அவன் பிறரைக் கரையேற்ற முடியாது. ஆனால் கீதை வடிவான கங்கையில் மூழ்கி எழுபவன் தான் மட்டும் முக்தியைப் பெறுவதில்லை. பிறரையும் கரையேற்றும் தகுதி படைத்தவன் ஆகிறான். கங்கை பகவானுடைய திருவடித் தாமரையிலிருந்து பெருகியது. ஆனால் கீதை ஸாக்ஷõத் பகவானுடைய திருமுகத் தாமரையிலிருந்து வெளிவந்தது. கங்கைக்குச் சென்று அதில் நீராடுபவனுக்கு மட்டுமே கங்கை முக்தியை அளிக்கிறது. கீதையோ ஒவ்வொரு வீடாகச் சென்று அங்குள்ளவருக்கு முக்தி மார்க்கத்தை போதிக்கிறது. ஆகவே கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது.
கீதை காயத்ரியை விடச் சிறந்தது. காயத்ரி ஜபம் செய்தால் மனிதன் முக்தி பெறுவான். அது சரிதான். காயத்ரியை ஜபம் செய்பவன் ஒருவன் மட்டுமே முக்தி பெற முடியும். கீதாபாராயணம் செய்பவன் தானும் கரையேறிப் பிறரையும் கரையேற்றுவானே! முக்தியை அளிக்கும் பகவானே அவனைச் சார்ந்து விடுகிறான் என்றால் அப்புறம் முக்தியைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? முக்தி அவனுடைய திருவடித் தூசியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவன் முக்தியெனும் சத்திரத்தைத் திறந்து விடுகிறான்.
கீதை பகவானைவிடப் பெருமை வாய்ந்தது என்று சொல்வோமேயானால் அதுவும் மிகையாகாது. கிருஷ்ணர்சொல்கிறார்.
கீதாஸ்ரயேஹம் திஷ்டாமி கீதா மே சோத்தமம் க்ருஹம்
கீதாஜ்ஞாநமுபாஸ்ரித்ய த்ரீந்லோகாந் பாலயாம்யஹம் – (வராஹபுராணம்)
(கீதையை அண்டி நான் வாழ்கிறேன். கீதைதான் என்னுடைய சிறந்த வீடு. கீதையின் ஞானத்தைக் கைக்கொண்டு நான் மூவுலகங்களையும் காக்கிறேன்)

பாண்டவர்களுக்குத் துணை போன கிருஷ்ணர்

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் குரு÷க்ஷத்திரப் போர் ஆரம்பமானது. பகவான் கிருஷ்ணர் அனைவருக்கும் பொதுவானவர். அப்படியிருக்கும் போது பாண்டவர்களுக்குத் துணையாக கிருஷ்ணர் ஏன் இருந்தார்?
ஒரு முறை துரியோதனனும் அர்ஜுனனும் கண்ணபிரானின் உதவியைப் பெறுவதற்காக துவாரகைக்குச் சென்றனர். பகவான், நான் ஆயுதம் எடுப்பதில்லை. நிராயுதபாணியான நான் வேண்டுமா? அல்லது என் சேனை அனைத்தும் வேண்டுமா? என்று கேட்டார். துரியோதனன், அவருடைய சேனையே தனக்கு வேண்டும் என்றான். ஆனால் அர்ஜுனன், கண்ணபிரானின் உதவிதான் தேவை என்றான். யுத்தம் தொடங்க, இரு திறத்தாரின் சேனைகளும் அணிவகுத்து நின்றனர். கிருஷ்ணரின் ரதத்தில் அர்ஜுனன் அமர்ந்து, இரு பக்கத்து சேனையில் இருப்பவர்களையும் பார்த்தான். அவர்கள் எல்லோருமே தனது உறவினர்களாகவும் ஆசிரியர்களாகவும் இருப்பதைக் கண்டான். அவனுடைய மனம் கலங்கியது. எனக்குப் போர் வேண்டாம்; அரசு வேண்டாம்; போகங்கள் வேண்டாம்; என்றெல்லாம் பலவாறு வருந்தினான்.
அர்ஜுனன் தன் உறவினர்கள் மீது அம்பெய்யத் தயங்கிய போது, தர்மத்தைக் காக்க அவர்களை அழித்தாலும் தவறில்லை. அதற்குரிய பலாபலன்கள் தன்னையே சேருமென பகவான் கிருஷ்ணர் சொன்னார். எனவே, எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள். ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு வேதநூல் இருக்கிறது. ஆனால் இந்து மதத்துக்கு மட்டும் பல வேதங்கள், உபநிஷத்கள், சாஸ்திரங்கள் உள்ளன. இருந்தாலும் பகவத்கீதையே அனைத்திலும் உயரிய வேதநூலாக கருதப்படுகிறது. எனவே தான் கீதையை ஐந்தாவது வேதம் என்கின்றனர்.
பகவத் கீதையைப் பெரியோர்களிடம் உபதேச ரூபமாக முதலில் கிரகித்து, அதன் பொருளையும் நன்கறிந்து தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால், சகல உபநிஷத்துகளையும் பாராயணம் செய்வதால் உண்டாகும் நற்பலன்கள் நமக்குக் கிட்டுவது உறுதி.
பகவத் கீதைக்கு அன்று முதல் இன்று வரை எத்தனையோ உரைகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றை ஓரளவு மட்டுமே கணக்கிட்டு, மூவாயிரத்துக்கும் அதிகமான உரைகள் இருக்கின்றன. பகவத்கீதைக்கு சங்கரர், ராமானுஜர், மத்வாசாரியார் என்ற ஆசார்யர்கள் முறையாக எழுதிய பாஷ்யங்களையே உயர்ந்தவையாகவும் குருமூலமாக உபதேச முறையில் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டியவையாகவும் கருதிப் போற்றுகிறார்கள். சங்கராசாரியர் அத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; ராமானுஜர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; மத்வாசாரியர் துவைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும் கீதைக்கு பாஷ்யங்களை இயற்றியிருக்கிறார்கள்.
இவர்களுக்குப்பின் இந்த ஆச்சார்ய பரம்பரையில் வந்த சில மகான்கள், இந்த ஆச்சார்யர்களின் கீதா பாஷ்யங்களுக்கு டீகா என்ற விளக்க உரை எழுதியிருக்கிறார்கள்.
இந்த வைதீக சம்பிரதாய முறையிலான உரைகளைத் தவிர, சமஸ்கிருதத்திலும், கிரீக், ஜெர்மன், லத்தீன், ஆங்கிலம், பிரெஞ்ச், ருஷ்யன் முதலிய பல வெளிநாட்டு மொழிகளிலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராட்டி, வங்காளி, குஜராத்தி போன்ற நம் நாட்டு மொழிகளிலும் ஆயிரக்கணக்கில் பகவத் கீதைக்கு உரை எழுதியிருக்கிறார்கள்.
லோகமான்ய பால கங்காதர திலகர் எழுதிய கர்ம யோகம், மகாத்மா காந்தி எழுதிய அநாஸக்தி யோகம், ராஜாஜி எழுதிய கை விளக்கு ஆகிய கீதை உரைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் பகவத் கீதையின் மகிமையைப் பறைசாற்றுகின்றன.

பகவத்கீதை – 18 அத்தியாயங்களின் தாத்பரியம் என்ன?

1. விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம்.
2. சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது.
3. கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம்.
4.ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது.
5. சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது.
6.தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது.
7. ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது.
8. அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது.
9. ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது.ஒன்பதாம் படி.
10. விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது.பத்தாம் படி.
11. விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
12. பக்தி யோகம். இன்பம் – துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை – பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது.
13. ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல்.
14. குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே.
15. தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது.
16. சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது.
17. சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது.
18.மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது.
சத்தியம் நிறைந்த இந்தப் பதினெட்டு அத்தியாயங்களையும் முழு மனதுடன் படித்து, அதன் படி வாழ்ந்து வந்தால், நமக்கு பகவான் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே பதினெட்டு அத்தியாயங்கள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.www.danvantarinadi.com

பகவத்கீதை – ஒரு அறிமுகம்

ஒவ்வொரு மனிதனும் அவசியம் படித்து, தெரிந்திருக்க வேண்டிய நூல்கள் மூன்று: அவை
கடவுளான கிருஷ்ணர் மனிதனான அர்ஜுனனுக்கு கூறிய பகவத்கீதை.
மனிதனான மாணிக்கவாசகர் கடவுளான சிவனுக்கு  கூறிய திருவாசகம்.
மனிதனான திருவள்ளுவர்  மனிதனுக்கு கூறிய திருக்குறள்.
இதில் பகவான் கிருஷ்ணர் அருளிய கீதை இந்துக்களின் வேதநூல் ஆகும்.
பகவத்கீதையை பகவத்கீதா என்று சொல்வதும் வழக்கம். பகவத் என்றால் இறைவன். கீதா என்றால் நல்ல உபதேசம். இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. கீதா என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது தாகீ என்று மாறும். தாகீ என்றால் தியாகம். வாழ்வில் வரும் அனைத்து சுகதுக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதும் இதன் பொருள். துறவு கொள்ளுங்கள்,  எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள் என்பதும் கீதா விற்குரிய ஆழமான பொருளாகும்.
கீதையும் 18 அத்தியாயங்களும்: கீழே கொடுக்கப்பட்டுள்ள  பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
www.danvantarinadi.com