இந்தியாவுக்கு இராவணன் எப்படி வந்தான்?
கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1303; தேதி: 22 செப்டம்பர் 2014
மஹாவம்ச ஆய்வுக் கட்டுரை வரிசையில் இது ஒன்பதாவது கட்டுரை.
இராவணன் ஆண்ட இலங்கை இப்போதைய ஸ்ரீலங்கா இல்லை என்றும் அது கோதாவரி முகத்வாரத்தில் இருந்த நதியிடைத் தீவு என்றும் , அக்காலத்தில் பறக்கும் புஷ்பக விமானம் இருந்ததற்கு தடயம், சாட்சியம் இல்லை என்றும் வெளிநாட்டு அறிஞர்களும், மார்கசீய வரலாற்று அறிஞர்களும் கதைத்த ஒரு காலம் உண்டு. ராமாயணம், மஹாபாரதம் ஆகியனவற்றை “வர்க்கப் போராட்ட வருணனைகள்” என்று அவர்கள் நகைத்த காலமும் உண்டு. இவர்களுக்கு தமிழ் இலக்கிய அறிவு போதாமையே இது போன்ற அரைகுறை ஆய்வுகளுக்குக் காரணம்.
சிலப்பதிகார தமிழ் காவியத்தில் கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் (கஜபாகு) என்று இளங்கோ அடிகள் குறிப்பிட்டத்தில் இருந்து கடல் ச்சூழ்ந்த இலன்கையே நாம் அறிந்த இலங்கை, ஆற்றிடை திட்டு அல்ல என்பது விளங்கும். அது மட்டுமல்ல ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் இப்போதைய ஸ்ரீல்ங்காவை ராமனோடும் ராவணனோடும் தொடர்பு படுத்திப் பாடியுள்ளனர். எனினும் இவை எல்லாம் பழங்கதைகள். இப்போது உலகமே ஒப்புக்கொண்ட உண்மை- இன்றைய ஸ்ரீலங்காதான் அன்றைய ராமாயண இலங்கை.
தொல்முதுகோடி என்று தனுஷ்கோடி பற்றிய குறிப்பும் சங்க இலக்கியத்தில் உண்டு. ராமசேது என்னும் கடற்பாலம் இருந்ததற்கான தடயங்களை ‘நாஸா’ என்னும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமும் படம் மூலம் நிரூபித்துள்ளது.
ஒன்றுவிட்ட சகோதரனான குபேரனிடமிருந்து ராவணன் புஷ்பக விமானத்தைப் பறித்தான். இது எண்ணத்தால் — பெட்ரோலால் அல்ல — பறக்கச் செய்யும் விமானம். இதுபற்றி நியூ சைன் டி ஸ்ட் பத்திரிக்கையில் வந்த ஒரு விஞ்ஞான கட்டுரையை நான் எழுதி இருக்கிறேன். அதில் முழு விவரம் காண்க.
புஷ்பக விமானத்தை நம்ப மறுக்கும் அறிவியல் புத்தி ஜீவிகளுக்கு மஹாவம்சம் சில அரிய பயணக் குறிப்புகளைப் படைக்கிறது.
இந்தியர்களுக்குப் பருவக் காற்றின் ரகசியம் தெரியும். இந்த ரகசியம் கரிகால் சோழனுக்கும் தெரிந்திருந்ததால் அவன் கடலுக்கு அப்பால் உள்ள தீவுகளை வெல்ல முடிந்தது.
நளியிரு முந் நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களியியல் யானைக் கரிகால் வளவ
— – புறநானூறு, பாடல் 66, வெண்ணிக் குயத்தியார் பாடியது.
வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்தி கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மத யானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ! – என்று உரைகாரர்கள் இதற்குப் பொருள் எழுதியுள்ளனர்.
அவன் வழியில் “ஞாலம் நடுங்கவரும் கப்பல்களுடன்” சென்று ராஜராஜ சோழனும் மாயிருடிங்கம் (பிலிப்பைன்ஸ்), மாபூப்பாளம் (போர்னியோ) மாநக்கவாரம் (நிகோபர் தீவு முதல் இந்தோ நேஷியா வரை)— முதலிய பல தீவுகளை வென்றான்.
இலங்கை – வட இந்திய கடற்பயணத்துக்கு ஒரே வாரம் போதும் என்கிறது மஹாவம்சம் (அத்தியாயம் 11):
தேவானாம் ப்ரிய திஸ்ஸன் (கடவுளருக்கு பிரியமானான்) என்ற இலங்கை மன்னன், அதே பெயருள்ள அசோகச் சக்ரவர்த்திக்குப் பரிசுப் பொருட்களுடன் தூதர் குழு ஒன்றை அனுப்புகிறான். அவர்கள் இலங்கையில் உள்ள ஜம்புகோளத்தில் கப்பல் ஏறி ஏழு தினங்களில் தாம்ரலிப்தியை அடைகின்றனர். இது மேற்குவங்கத்தில் மிதுனபுரி அருகே உள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்று. இன்று தாம்லுக் என்ற சிறிய ஊராக இருக்கிறது. எப்படி பூம்புகார், குமரிக்கோடு, தனுஷ்கோடி, துவாரகா முதலிய ஊர்களை சுனாமிப் பேரலைகள் விழுங்கினவோ அப்படியே இந்த ஊர் துறைமுகத்தையும் கடல் விழுங்கிவிட்டது.
இலங்கைக்கு புத்தர் வாழ்ந்த காலத்தில் வந்த வங்காளதேச அரசன் விஜயனும் இங்கேயிருந்துதான வந்தான். முதலில் யக்ஷிணி (குபேர) வம்சப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டு பின்னர் பாண்டியநாட்டுத் தமிழ் பெண்ணைக் கல்யாணம் முடித்தான. துரதிருஷ்டவசமாக குழந்தைகள் பிறக்கவில்லை!
தாம்ரலிப்திக்குச் சென்ற இலங்கைக் குழு அடுத்த ஏழே நாட்களில் பீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா (பாடலிபுத்ரம்) நகரை அடைந்துவிட்டது. மாமன்னன் அசோகன் இலங்கைத் தூதுக்குழுவுக்கு ஐந்து மாதங்களுக்கு ராஜ உபசாரம் செய்கிறான். பின்னர் அசோகன் அனுப்பிய நிறைய பரிசுப் பொருள்களுடன் அந்தக்குழு இலங்கைக்குத் திரும்புகிறது. இதற்கு 12 நாட்கள் ஆயின.
ஏன் ஐந்து மாதம் இலங்கைக் குழு அங்கே தங்கியது? பருவக் காற்றின் போக்கை அறிந்த நம்மூர் மாலுமிகள் இந்த குறிப்பிட்ட காலத்தில் புறப்பட்டால் இதனை நாட்களில் சென்றுவிடலாம் என்பதை அறிந்து வைத்திருந்தனர். ஆகையால் போனவுடன் திரும்பிவர இயலாது. கொஞ்சம் காலம் தங்கிவிட்டு காற்று எதிர்த் திசையில் வீசும் போது திரும்பவேண்டும்.
அத்தியாயம் 18-ல் அசோகன் அனுப்பிய போதி மரம், ஒரு பெரிய குழுவுடன் இலங்கைக்கு வந்த செய்தி கூறப்படுகிறது. அதை வாங்குவதற்காச் சென்றவர், ஐப்பசி மாதம் சுக்லபக்ஷம் த்விதியை திதியில் (வளர்பிறை இரண்டா நாள்) ஜம்புகோளத்தில் புறப்பட்ட அதே நாளன்று புஷ்பபுரத்துக்குப் (பாட்னா) போய்ச்சேர்ந்தார் என்னும் மஹாவம்ச கூற்றை நம்புவது கடினம். ஒருவேளை அதே சுக்ல பக்ஷ த்விதீயை — ஆனால் வேறு ஒரு மாதமாக — ஆக இருக்கலாம். மஹா வம்ச ஒரிஜினலைப் பிற்காலத்தில் எழுதியோர் விட்ட தவறாக இருக்கலாம் இது என்பது என் கருத்து. அல்லது இதை மந்திர –தந்திர –அற்புத– அதிசய வகைச் செய்திகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
அத்தியாயம் 19-ல், சாலை மார்கம் பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது. பாட்னாவில் கங்கை நதியில் போதிமரத்தை ஏற்றிவிட்ட, அசோகன், விந்தியமலையைக் கடந்து ஒரே வாரத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தாம்ரலிப்திக்கு வந்துவிடுகிறான். இதிலிருந்து அக்காலத்தில் விந்திய மலை வழியாக நல்ல சாலை மார்க்கம் இருந்தது புலப்படும். இது அகத்தியர் அமைத்த பாதை. அதைப் புரணங்கள், “அகஸ்தியர் விந்திய மலையை கர்வ பங்கம்” செய்தார் என்று புகலும்/ புகழும்!
ஆக மேற்கூறிய குறிப்புகளைக் காண்கையில் அக்காலத்தில் கப்பல் வழி, சாலை வழிப் போக்குவரத்து மிக நன்றாக இருந்தது என்பது தெள்ளிதின் விளங்கும். வெள்ளைகாரன் வந்த பின்னால்தான் இந்த நாட்டில் போக்குவரத்து வசதிகள் அதிகரித்தன என்று கூறுவோரின் வாயை அடைக்க இதுவே போதும். வால்மீகியும் பரதன் — ஈரான்- ஆப்கனிஸ்தான் எல்லையில் இருந்து வந்த வழியை விரிவாகக் கொடுத்துள்ளதை ராமாயணத்தில் படித்து அறிக!!
புஷ்பக விமானத்தை நம்பாதோரும் இந்தக் குறிப்புகளை ஏற்கத்தான் வேண்டும். ஆக கைலாச மலையை ராவணன் அசைத்தான் – சிவபெருமானிடம் நல்ல அடி வாங்கினான் என்று ஞான சமபந்தப் பெருமான பதிகத்துக்கு பதிகம் பாடுவதும் உண்மையே.
அரபு நாட்டு ஷேக்குகள், அவர்கள் நாட்டில் தடை செய்யப்பட்ட, அட்டூழியங்களையும் பாப காரியங்களையும் பண்ணுவதற்கு பம்பாய்க்கும், ஹைதராபத்துக்கும் வந்து செல்லுவது போல அக்காலத்தில் ராவணனும் அவன தங்கை சூர்ப்பநகையும் சமூக விரோதச் செயல்களில் இறங்க மத்திய இந்தியாவில் இருந்த தண்டகாரண்யம், இமயமலையில் உள்ள கைலாசம் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். ராவணனால் விரட்டப்பட்ட குபேரன், இமயமலை திபெத் பகுதியில் குடியேறினான். அக்கலத்திலும் இந்தியா அகதிகளை ஏற்றுக் கொண்டதற்கு இதுவும் ஒரு சான்று.
பருவக்காற்றைக் கண்டுபிடித்தவன் தமிழனா? கிரேக்கனா? என்ற எனது பழைய கட்டுரையில் இது பற்றி விரிவாக எழுதியுள்ளேன். பருவக்காற்று ரகசியத்தை ஒரு இந்திய அசடு (மண்டு), எகிப்தில் அலெக்சாண்டிரியா நகரில் உள்ள ஒரு மாலுமியிடம் உளறிவீட்டான். அதன் பின்னர் போர்ச்சுகீசியர், பிரெஞ்சுக்காரர், பிரிட்டிஷ்காரர் முதலிய ஐரோப்பியர்கள் இந்தியாவைச் சூறையாட வழிவகை ஏற்பட்டது. — ((காண்க: தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள், ச.சுவாமிநாதன், நாகப்பா பப்ளிகேஷன்ஸ், சென்னை-14, ஆண்டு 2009; இதே புத்தகத்தை நிலாசாரல்.காம் ஈ-புத்தகமாகவும் வெளியிட்டுள்ளது)) —
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக