புதன், 5 அக்டோபர், 2016

கொரிய மொழியும் தமிழ்ச் செம்மொழியும்

செம்மொழி மாநாட்டு கருத்தரங்கு வளாகத்திற்கு (கொடீசியா) அருகில் ஊடகம் என்றொரு
பெரிய தற்காலிக அலுவலகம் அமைத்திருந்தனர். அங்கு ஊடகத்தினருக்கு எல்லா
வசதிகளும் அளித்திருந்தனர். ஒரு தொலைக்காட்சி நிருபர் என்னை அங்கு
வரச்சொல்லியிருந்தார். வேளியே போக பயம்! ஏனெனில் வளாகத்தில் இருக்கும் வரை
நமக்கு கட்டுரையாளர் என்ற மதிப்பு. வெளியே உள்ள ஜனத்திரளுள் காணாமல்
போய்விட்டால், கடலில் கரைத்த பெருங்காயம் போல் ஆகிவிடுவோம். அதுமட்டுமல்ல, நான்

திரண்டு இருக்கும் ஜனத்திரள் (படம் நன்றி: மதன் கார்க்கி)
முன்பு சொன்னது போல் ஓரிடத்திலிருந்து ஓரிடம் செல்ல பாதுகாப்பு வளையத்துள்
செல்ல வேண்டும். ஏதோ லடாக், காஷ்மீர் பகுதியில் சஞ்சாரிப்பது போன்ற அச்ச
உணர்வைத்தரும் அனுபவம். வழி தெரியாமல் தொலைந்து போனால் 7 கி.மீ வளைவிற்குள்
எவ்வகை தனியார் போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை. எனவே ஆட்டோ, டாக்சி என்று
ஏதும் எடுத்துக் கொண்டு ஓடமுடியாது. கட்டுரையாளர்களை கட்டுக்குள்
வைத்திருக்கும் உபாயமா? இல்லை 21ம் நூற்றாண்டு தமிழகத்தில் இனிமேல் கூட்டங்கள்
இப்படித்தான் நடத்தப்படும் என்பதற்கான அறிவிப்பா? என்று தெரியவில்லை.
ஆயினும், நான் ஊடக வளாகம் நோக்கிப் போனேன். போனது நல்லதாய் போய்விட்டது. எனது
பழைய நண்பர் ஜுங் நம் கிம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பாக அது அமைந்துவிட்டது!
உண்மையில் போன வேலையை விட்டு அவருடன் பேசிக்கழித்து திரும்பி விட்டேன் என்றால்
பாருங்கள். திரு.கிம் தம் பேட்டியில் சொல்லியிருப்பதுபோல் இரண்டு தமிழர்கள்
பேசும் மொழியைப் பார்த்து, ‘அட! இது நம் கொரியன் போல் உள்ளதே?’ என்று ஆர்வம்
மிக அவர் தமிழ் படித்திருக்கிறார். என்னைப் பார்த்ததும் ‘தாங்கள் கண்ணன்தானே?’
என்றார் (இதுவும் ஒரு பிசிராந்தையார் நட்புவகை என்று காண்க). தூரக்கிழக்கின்
பிரதிநிதித்துவம் இல்லாத குறையை அவர் போக்கியது போல் உணர்ந்தேன்.
சோழர்கள் கொரியாவை தமது தூரக்கிழக்கு முகாமாக வைத்திருந்தனர் என்று இவர்
நம்புகிறார். அதற்கான சாத்தியங்கள் உண்டெனினும் நாம் நிரூபிக்க வேண்டும்.
கொரியாவில் ‘சொல்லா’ (சோழா) என்றொரு மாவட்டம் உள்ளது. பௌத்தம் தேசிய மதமாக 19ம்
நூற்றாண்டுவரை இருந்திருக்கிறது. தமிழகத்துறவி போதிதர்மர் (தாருமா) இங்கு மிக
சிறப்பாக வழிபடப்படுகிறார். இவர்கள் மொழி தமிழ் நெடுங்கணக்கை ஒத்திருக்கிறது.
க்யோன்ஜு எனும் அருங்காட்சியகத்திற்கு சென்றால் ‘அது தமிழக காட்சியகமா? இல்லைக்
கொரியக் காட்சியகமா?’ என்று சந்தேகம் வரும் அளவிற்கு நமது தெய்வச்சிலைகள்
இருக்கின்றன (கருடன், ஹனுமன், இந்திரன்), தொல்லியல் பொருள்கள் உள்ளன. இங்குள்ள
பெண்கள் கற்பைப் பேணுகின்றனர். தாய், தந்தையரை ‘அம்மா, அப்பா’
என்றழைக்கின்றனர். காசு கொடுக்கும் போது வலது கையால் மரியாதையுடன்
கொடுக்கின்றனர். பெரியோரை மதிக்கின்றனர் (பஸ்ஸில் பெரியோருக்கு இடமளிக்கும்
சிறுவர்களை இங்குதான் பார்க்கமுடியும்). எல்லாவற்றிற்கும் மேலாக கொரிய
ஆய்வகங்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் இந்திய ரத்த பந்தத்தைக் காட்டுவனவாக உள்ளன.
தமிழர்கள் ஹவாய் தீவுவரை சென்றுள்ளதற்கான சான்றுகள் இருப்பதாக என் அமெரிக்க
நண்பன் சொன்னான். 14ம் நூற்றாண்டு நாகபட்டிணம் வியாபாரிகள் நியூசிலாந்து
சென்றுள்ளதை அங்குள்ள ஒரு மணிக்கூண்டு செப்புகிறது. எனவே கொரியா சோழர்களின்
கிழக்கு முகாமா? (அவுட்போஸ்ட்) என்று இங்குள்ள சரித்திர நிபுணர்கள்தான்
மேல்கொண்டு கண்டு சொல்ல வேண்டும்.

எனவே எனது கட்டுரையில் இதை ஹைலைட் (ஒளிபாய்ச்சுதல்) செய்ய தீர்மானித்தேன்.
காரணம், சும்மா தமிழர்களின் ஈகோவை உசுப்பிவிடுவதல்ல. இந்த உறவை புதுப்பிப்பதால்
தமிழகத்திற்கு மிகப்பெரிய பொருளாதார ஆதாயம் உள்ளது. ஒரு உறவும் இல்லாத நாடுகளே
sister cities என்று இரண்டு நகரங்களை பிணைக்கும் போது இயேசு பிறப்பதற்கு முன்பே
இந்தியாவுடன் பட்டுப்பாதையில் தொடர்பிலிருந்த நம் சொந்த உறவை ஏன்
விட்டுக்கொடுக்க வேண்டும்? சிங்கப்பூரில் இருக்கும் தென்னாசிய ஆய்வு மையம்
ஒருமுறை ‘கொரியாவில் இந்தியர்கள்’ என்று கட்டுரை வாசிக்க அழைத்த போதுதான் நான்
பல விவரங்கள் தெரிந்து கொண்டேன். உதாரணமாக இந்தியாவில் முதலீடு செய்யும்
மிகப்பெரிய நாடாக கொரியா நிற்கிறது. இது சாதாரண விஷயமல்ல. 200 ஆண்டுகள் நம்மை
ஆண்ட இங்கிலாந்து நம்மை நம்புவதில்லை. அமெரிக்கா பாகிஸ்தானை நண்பன் என்று
சொல்லுமே தவிர உலகின் மிகப்பெரிய குடியரசான இந்தியாவை சேர்த்துக் கொள்ளாது.
நிலமை இப்படி இருக்கும் ஊர், பேர் தெரியாத கொரியா, திடீரென வளர்ச்சியுற்று
இந்தியாவின் அரசியலை நம்பி முதலீடு செய்கிறது என்றால் அது வெறும் வியாபார
உந்துதல் மட்டுமல்ல (business risk) நமக்குள்ள உறவை அவர்கள் நம்புகிறார்கள்.
எப்படி ஒரு முஸ்லிம் மெக்காவை நோக்கி தொழுகிறானோ அது போல் ஒரு பௌத்தன் புத்தன்
பிறந்த பூமியான இந்தியாவை நோக்கித் தொழுகிறான். அவர்கள் நம்மை
மதிக்கிறார்கள். ஆனால் நாம் இன்னும் முழு ஈடுபாடுடன் அந்த சகோதரர்களை வாரி
அணைக்கவில்லை.  அது ஏன்? என்றுதான் நான் கேள்வி எழுப்பினேன். நல்ல வேளையாக கிம்
வந்து சேர்ந்தது ரெட்டை நாயனக்கச்சேரி போல் ஆகிவிட்டது. (அவரது பேட்டியை
வாசிக்க). மேலும் மத்திய அரசு சமீப காலங்களில் கிழக்கு நோக்குக! எனும் அரசியல்
கோஷத்தை முன் வைத்துள்ளது. ஆசியாவின் இரண்டாவது பெரும் பொருளாதார வல்லரசான
கொரியாவுடன் நட்புக் கொள்வதால் தமிழகத்திற்குத்தான் லாபம்.
நான் முன்பு சுட்டியபடி, கொரியாவில் ஒரு பிரபலமான சீரியல்
ஓடிக்கொண்டிருக்கிறது. அது சுரோ மன்னன் என்பதாகும். இவன் ஒரு இந்திய இளவரசியை
மணந்து 10 குழந்தைகள் பெற்றதாகவும். அவர்களின் நேரடி வாரிசுகள்தான் இன்று
பிரபலமாக இருக்கும் ஹியோ, கிம்ஹே வம்சாவளியினர் என்று சொல்கிறது ஐதீகம். அந்த
இளவரசி யார்? எங்கிருந்து வந்தாள்? இது தமிழர்களால் ஆராயப்பட வேண்டிய முக்கிய
தலைப்பு. ஏனெனில் வழக்கம் போல் வடபுலத்தார் இதிலும் முந்திக்கொண்டு ஒரு
சரித்திரம் எழுதிவிட்டனர். அதாவது இந்த அரசி அயோத்யா எனும் நகரிலிருந்து
வந்ததாக அச்சரித்திரம் கூறுகிறது. அதுவொரு சீனக்குறிப்பிலிருந்து
எடுக்கப்பட்டிருக்கிறது. அச்சொல்லின் வேர் கவனமாக ஆராயப்பட வேண்டும் என்பதில்
கிம்மும், நானும் உடன்படுகிறோம். காரணம், அவ்வரசி கொரியா வந்த போது மீன்
சின்னத்தைத் தாங்கி வருகிறாள். அயோத்தியாவில் ஏது மீன் சின்னம்? அது பாண்டிய
முத்திரை அல்லவோ? பாண்டியர்கள்தானே சங்க காலத்தில் பட்டுப்பாதையின் நாயகர்கள்?
பாண்டிய மன்னர்களுக்கு மெய்காப்போனாக யவனர்கள் இருந்ததை சரித்திரம்
செப்புகிறதே. விஜய நகரப் பேரரசின் காலத்தில் வந்த யுவான்வுவாங் போன்ற சீன
யாத்திரீகர்கள் தென்னகத்தின் பெருமையை எழுதி வைக்கவில்லையா?
கொரிய சரித்திர ஆவணங்களெல்லாம் பழைய சீனமொழியில் இருக்கின்றன. கொரியர்களுக்கே
தம் சரித்திரமறிய சீனம் கற்றுக்கொள்ள வேண்டிய நிலை. கொரிய, இந்தியப்பயணக்
குறிப்புகளெல்லாம் சீனத்தில் உள்ளன. நாம் சீனம் கற்று அதை ஆய்விற்கு உட்படுத்த
வேண்டும். அதைச் செம்மொழி நிதி செயல்படுத்த வேண்டும். சேஜோன் அரசன் (1418-1450)
கொரிய எழுத்தைக் கண்டு பிடித்து உருவாக்கியது ஒரு ரகசியமாகவே இன்றும் உள்ளது.
அவன் ஒரு மொழியியல் வல்லுநன். 18முறை சீனா பயணப்பட்டிருக்கிறான், அம்மொழியின்
நுணுக்கங்கள் அறிய. ஆனால் பாமரனும் புரிந்து கொள்ளும் எளிய ஒலி, வரி வடிவமொன்றை
கொரிய மொழிக்கு (ஹங்குல்) கொடுக்க வரும் போது அவன் தமிழ் மொழியை முன்னுதாரணமாக
எடுக்கிறான். ஏன்? அவன் சபையில் தமிழக புத்த பிட்சுக்கள் இருந்திருக்க
வேண்டும். அவர்களுடன் கலந்தாலோசித்து இருக்க வேண்டும். ஆனால் இவ்வரிவடிவ
உருவாக்கத்தை அவன் மிக ரகசியமாகச் செய்திருப்பதாக சரித்திர ஆசிரியர்கள்
சொல்கிறார்கள். அதனால், தமிழ் நெடுங்கணக்கிற்கும், ஹங்குல் வரிவடிவத்திற்குமான
சான்றுகளை உடனே எடுக்க முடியவில்லை. ஏன் அதை அவ்வளவு ரகசியமாகச் செய்தான்?
யூகம் 1. சங்ககாலத் தமிழ் அரசர்களில் பல புலவர்கள் இருந்திருக்கிறார்கள். சிலர்
புலவரை எழுத வைத்து தன் பெயரைப் போட்டுக்கொள்வதுமுண்டு. அதுபோல் இவ்வரிவடிவ
உருவாக்கத்தின் புகழ் அனைத்தும் அரசனையே சாரும் என்பதற்காகச் செய்திருக்கலாம்,
ஆனால்,
யூகம் 2. சீனக் கொரிய அரசுகள் ஆவணப்படுத்துவதில் மிகத்தேர்ச்சி பெற்றவர்கள்.
ஆவண ஆசிரியன் சுதந்திரமானவன் என்று சரித்திரம் சொல்கிறது. அரசர்கள் விட்ட
பிழைகள் கூட அங்கு பதிவாகியுள்ளன. எனவே அரசர்களே இந்த ஆவணக்காரனுக்கு பயந்து
நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே, இந்த அரசன் அப்படிச் செய்திருக்க
வாய்ப்பில்லை.
யூகம் 3. கொரியா சீனம் எனும் பேரரசை அண்டி வாழ்ந்த நாடு. அப்போது சீன மொழியே
தேசிய மொழி. இந்த அரசனோ பாமரர்கள் மேல் இரக்கப்பட்டு ஒரு மொழியாக்கத்தில் ஈடு
படுகிறான். அது பேரரசிற்கு உவப்பான செயலாக இருந்திருக்காது. அதுவொரு புரட்சி
என்றே கருதப்பட்டிருக்கும். மொழிச்சுதந்திரம் என்பது ஏற்புடையதாக
இருந்திருக்காது. எனவே சேஜோன் இதை மிக ரகசியமாகச் செய்திருக்க வேண்டும். ஒரு
வரி வடிவம் கொடுத்து விட்டு அதற்கு அரசன் கொடுத்த பெயர் ‘யோன்மியோன்’ அதாவது
vulgar script என்பது. கொச்சை வடிவம் என்று அவனே சொல்லிவிடுவதால் பேரரசுகள்
அதைக் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கலாம். மேலும் இந்த வரிவடிவம் அரசு அதிகாரம்
பெற்றது 20 நூற்றாண்டில்தான். அதுவரை பத்திரிக்கைகள் கூட சீன மொழியிலேயே நடை
பெற்று வந்தன. ஆனால் இந்த ஹங்குல் தேசிய உருவாக்கத்திற்கு காரணியாக
இருந்திருக்கிறது. தங்கள் மொழி, தங்கள் வரிவடிவம் எனும் ஒரு சுதந்திரப்
பிரகடணம் புரிய உதவியிருக்கிறது. இந்த அரசன் வாந்த காலத்தில் இவ்வளவு புகழ்
பெற்றிருப்பானோ என்னவோ? இன்று அவன் புகழ் கொடி கட்டிப்பறக்கிறது! இந்த அரசன்

வாழ்ந்த 15ம் நூற்றாண்டில் தமிழகத்தை யார் ஆண்டார்கள்? எங்கெங்கு
பயணப்பட்டார்கள்? பௌத்தம் அப்போதும் வலுவுடன் இருந்ததா?
ஹங்குல் மொழி வரிவடிவம் உலகின் மிக அறிவியல் தன்மையுள்ள வரி வடிவம் என்று
ஐக்கியநாடுகள் சபை சொல்கிறது! அதன் மூலம் தமிழ் என்றால் செம்மொழியான
தமிழுக்குப் பெருமை சேர்க்காதா?
எனவேதான் செம்மொழி மாநாட்டில் கொரியத்தமிழ் உறவு பற்றி சிலாகித்துப் பேசினேன்.
ஆனால் டாக்டர் செல்வகுமார் ஒரேயடியாக எந்த சம்பந்தமும் கிடையாது என்று அங்கு
பலரின் எரிச்சலைக் கிளப்பினார் (சபையைப் பார்த்து எழுந்த முடிவு. எனக்கு
எக்கோபமும் வரவில்லை). நான் என் கட்டுரை முற்றும் முடிவுமான ஒரு சேதியைத்
தருவதாகச் சொல்லவில்லை. இத்தொடர்பு ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய ஆய்வு
பொருள் என்றுதான் சொன்னேன். அதை வலியுறுத்தவே இச்சேதியை பல்கலைக் கழகங்களுக்கு
எடுத்துச் சென்றேன்.

தமிழுக்கும் கொரியாவிற்குமுள்ள உறவு பற்றி அவர்களை விட நாம்தான் கவலைப்பட
வேண்டும். அதற்கு காரணமிருக்கிறது. கொரியா 50களில்தான் சுதந்திரமடைகிறது.
இந்தியா போல் ஏழ்மையும், வறுமையும் பீடித்திருந்த காலம். ஆயினும் நம் குருதேவ்
டாகூர் கொரியா போய் இப்படிப் பாடுகிறார்:
In the golden age of Asia
Korea was one of its lamp-bearess
and that lamp is waiting to be
lighted once again for the
illumination of the East
என்ன தீர்க்கதரிசனம்!!
ஆனாலும், ஹான் நதி அற்புதம் (the miracle of Han River) அவ்வளவு எளிதாக
நடந்துவிடவில்லை. அதற்காக மிகக்கடுமையாக உழைத்தார்கள். தேசிய உணர்வை
எவ்வகையிலேனும் ஊட்டினர். அதில் இந்த ஹங்குல் மொழி ஒன்று. அதுவொரு தேசியப்பீடு.
இப்போது போய் நாம் இம்மொழியை செஜோன் தமிழ் மொழியிலிருந்து எடுத்தான் என்று
சொன்னால் அது உவப்பளிக்காது. நானும் சில சரித்திர ஆய்வாளர்களிடம் முயன்று
பார்த்தேன். யாருக்கும் அதில் ஆர்வமில்லை. எனவே நாம்தான் முயன்று மொழியியல்
ஆய்வு செய்ய வேண்டும்.
கொரிய-தமிழ் ஒற்றுமை என் கண்ணில் மட்டும் படவில்லை, ஒரு கிறிஸ்தவ
பாதிரியாருக்கும் பட்டிருக்கிறது.
Hulbert, H.B.
A Comparative Grammar of the Korean Language and the Dravidian Family of
Languages,
Seoul, 1906
இந்தப் புத்தகம் எந்த நூலகத்தில் கிடைத்தாலும் நண்பர்கள் சேதி சொல்லவும். இதை
நாம் ஆவணப்படுத்த வேண்டும்.
தமிழகக்கல்வி நிலையங்களில் கொரிய மொழி சொல்லித்தர வேண்டும். இன்னும் பிரெஞ்ச்,
ஜெர்மன் என்று இருந்தால் எப்படி? இந்த நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு. நம்
மாணவர்கள் சீனம், கொரியன், யப்பானியம் பேச வேண்டும். அப்போதுதான் விட்டுப்போன
உறவுகள் வலுப்படும்.
மிக அதிசயமாக கொரிய மொழியில் தமிழில் இருக்கும் சிக்கலெல்லாம் இருக்கின்றன 😉
அம்மொழியில் Coffee என்று சொல்ல முடியாது. தமிழில் சொல்வது போல் ‘நல்ல காப்பி’
ஒண்ணு போடப்பா! என்றுதான் சொல்லணும். ஏனென்றால் அங்கு f ஒலி கிடையாது. “Waqf
Board” என்பதை நிச்சயமாக கொரியன் மொழியில் எழுத முடியாது நாம் எழுதுவது போல்,
‘வக்போர்டு’ என்றுதான் எழுத வேண்டும். அதே போல் ‘ghazals’ என்பதை தமிழில்
உள்ளது போல் ’கசல்’ என்றுதான் எழுத வேண்டும். அப்படியெனில் ‘ஜ’ ஒலி இல்லையா
என்றால், உண்டு! தமிழில் செய்வது போல், ‘ராசா’ என்று எழுதிவிட்டு, ‘ராஜா’
என்றும் கூப்பிடலாம். ஏனெனில், தமிழில் உள்ளது போல் ‘ஜ’ விற்கு தனி எழுத்து
கிடையாது. ’புஷ்பம்’ என்று கொரிய மொழியில் எழுத முடியாது. எங்கள் பள்ளி
வாத்தியார் சொல்வது போல், ‘புட்பம்’ என்றும் சொல்லலாம், ”தம்பி சொல்வது” போலும்
சொல்லலாம்! என்று இருக்கும் (எங்க வாத்தியாருக்கு ‘ஷ்’ வராது . ’க’ Gha
பிரச்சனை அங்கும் இருக்கிறது. Pusan என்றும் எழுதலாம் Busan என்றும்
எழுதலாம், ஏனெனில் கொரிய மொழியில் வித்தியாசமில்லை. Sweta என்பதைத் தமிழில்
எழுதுவது போல் ‘சுவேத்தா’ என்றுதான் எழுத வேண்டியிருக்கும் (ஸ்வேதா என்றில்லை.
ஏனெனில் தமிழில் இல்லாதது போல் அங்கும் ‘ஸ்’ ஒலிக்குறிப்பு இல்லை).
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது சேஜோன் ‘சித்தம்’ எழுத்துமுறையைக்
கைகொண்டு ’ஹங்குல்’ வரிவடிவம் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அந்தப்
பழமையான முறையில் நான் மேற்சொன்ன ஒலிகளுக்கெல்லாம் வரிவடிவங்கள் உள்ளன. கொரிய
ஹங்குலில் இல்லை. இன்னும் சுவாரசியமாக பண்டைய தமிழக முறையில் உள்ளது போல்
கூட்டு எழுத்து ஹங்குலில் இருக்கிறது. என் தந்தை கூட கூட்டு எழுத்து எழுதுவார்.
கொரிய மொழியில் அது முடியும்!
சித்தம் எழுத்து என்பது பௌத்த நூற் பயன்பாட்டில் இருக்கலாம். இங்கு ஓம் என்பதை
சித்த எழுத்தில்தான் எழுதுகிறார்கள். ஆனால் சேஜோன் யோசித்தது, பாமரனும்
பயன்படுத்தும் ஒரு எளிய மொழி வரி வடிவம். ஏனெனில் இம்மொழி சீனம் போன்ற ஒலி மொழி
அல்ல (tonal language). தமிழ் போல் உள்ள மொழி. தமிழில் ’மேகம்’ என்று
எழுதுவிட்டு மேஹம் என்போம். இங்கும் அது முடியும் (not the exact word but the
possibility). தமிழில் உள்ளது போல் ‘பேச்சு மொழி’ எழுத்து மொழியிலிருந்து
வெகுவாக மாறுபடும். ஆனால் எழுதும் போது செந்தரமாக்கப் பட்ட முறையில்தான் எழுத
வேண்டும். ‘எங்கடா மேஞ்சிட்டு வரே?’ என்று கேட்டால் ‘கூரை மேஞ்சுட்டு வரேன்’
என்பது போல் கொரிய மொழியில் பேசமுடியும். சொல் பிறழ்ச்சி என்பது இங்கும்
அனுமதிக்கப்படுகிறது.
இதையெல்லாம் அந்த ஹூபெல்ட்டு பாதிரியார் பார்த்துவிட்டுத்தான் மொழி ஒற்றுமை
இருக்கு என்று சொன்னாரா? என்று எனக்குத்தெரியாது. ஆனால் அவர் கண்ணிலும் இந்த
மொழி ஒற்றுமை பட்டிருக்கிறது.
ஆனால் பாதிரியார் பார்த்திருக்க முடியாத ஒரு விஷயம் சேஜோன் மன்னன் தமிழ் கணக்கு
முறையையும் எழுத்தில் சேர்த்ததுதான். நெடுங்கணக்கு என்பதை அட்சரசுத்தமாகக்
கையாண்டு இருக்கிறான். எப்படி என்கிறீர்களா?  0 + 1 என்னும் போது 0
மதிப்பில்லை. ஆனால் ஒன்றுக்குப்பிறகு அதே பூஜ்யம் (சுழி) வரும் போது பத்து
எனும் 10 மடங்கு கூடுதல் மதிப்பு வந்து விடுகிறது. அது போல் கொரியன்
உயிர்/உயிர்மெய்யெழுத்திற்கு முன்னால் 0 வரும் போது அதற்கென ஒலி கிடையாது
(மதிப்புக் கிடையாது அதாவது அ என்று எழுதும் போது 아 வரும் 0 மதிப்பில்லை).
ஆனால் இதே 0 ஒரு உயிர்மெய்யிற்குப் பின் வந்தால் ‘ங்’ எனும் ஒலி பெருகிறது.
உதாரணமாக சேசோங் என்பதில் 세청 ’சோ’விற்குக் கீழே (இரண்டாவது எழுத்து) 0 வரும்
போது ஒலி பெறுகிறது எனவே சொங் அல்லது சோங் (குறில், நெடில் பற்றியெல்லாம் ஆராய
வேண்டியுள்ளது!).
எனவே என் யூகம் என்னவெனில் 15ம் நூற்றாண்டில் வழக்கிலிருந்த தமிழோடு ஒரு புத்த
பிட்சு அங்கு போயிருக்க வேண்டும். சேஜோன் அரச சபையில்
மொழி ஆக்கத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். அப்போது தமிழ் வரிவடிவங்களுக்கு ஒத்த
வடிவங்களை ஹங்குலில் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். கீழே உள்ள தமிழ் வரி வடிவப்
பரிணாமத்தைப் பார்த்தால் 15ம் நூற்றாண்டில் இப்போதுள்ள எழுத்துமுறை நடைமுறைக்கு
வந்துவிட்டது என்பது தெரியும்.


இப்போது கீழேயுள்ள படங்களைப் பாருங்கள் (இவை முன்பு மின் தமிழில் வந்தவைதான்).
வரிவடிவ, நெடுங்கணக்கு ஒற்றுமை தெளிவாகும்.

முதல் எழுத்து, உயிர் எழுத்து. மேலே தமிழ், கீழே கொரியன்.

உயிர் மெய் உருவாகும் விதம்.

கூட்டு எழுத்துமுறை காண்க. முன்பு ‘க்கி’ என்பதைக் கூட்டாக தமிழில்
எழுதமுடியும்.

நமது ‘ல’ எழுத்து அப்படியே கொரிய ஹங்குலில் இருப்பது ஆச்சர்யம் இல்லையா?
இப்படியெல்லாம் நான் எழுதும் போது உடனே தமிழர்கள் நான் என்னமோ கொரிய மொழி
தமிழிலிருந்து வந்தது என்று சொல்ல வருகிறேன் என்று அவசரப்பட்டு முடிவிற்கு
வருகின்றனர். எனவே மீண்டும் வலியுறுத்திச் சொல்ல வேண்டியுள்ளது. இரண்டு
மொழிகளுக்கும் ஒற்றுமை இருக்கிறது. நான் பேசுகின்ற விஷயத்தைப் பற்றி Stephen
A.Tyler எனும் மொழியியல் அறிஞர் (Tulane University) தனது ’Dravidian and
Uralian: The lexical evidence’ எனும் புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு
பதிவிடுகிறார், “In conjuction with the present materials and with
Collinder’s materials for the relation between Uralic and Altaic can
probably be taken as further evidence for a ‘super family’ consisting of
Dravidian, Uralian and Altaic. As an item of historical interest, Uralic and
Altaic are precisely the language groups Caldwell called ‘Scythian’. In view
of the probable inclusion of Korean in the Altaic family, it is also
interesting to note that Hulbert attempted to demonstrate a relationship
between Dravidian and Korean!
ஆக, செம்மொழி மாநாட்டிற்கு உகந்த தலைப்பாக அல்லவோ இந்த ஆய்வு அமைகிறது.
வாய்ப்பை நாம் நழுவ விடலாமா?
அப்படியே அச்சாக தமிழ் என்றால் பிரச்சனை இல்லையே! மருவிட்ட மலையாளமே
நமக்குப் புரியவில்லை. மொழியிலார் பேசுவது புரோட்டா திராவிட மொழிக்
குடும்பம் பற்றி. உரால் மலையில் நம் முன்னோர்கள், மங்கோலிய மொழியினருடன்
வாழ்ந்த காலம். எத்தனை ஆயிரம் ஆண்டுகள் முன்? கொரிய மொழி மங்கோலிய
மொழியிலிருந்து பிரிகிறது, நிறைய சீன மொழி வளத்தை எடுத்துக் கொண்டு
வளர்கிறது.
தமிழ் மொழிக்கான தொடர்பு பல வழிகளில் அங்கு போய் சேர்கிறது.
1. ஒத்த ஒரு தாய் மொழியிலிருந்து இரண்டும் கிளைத்திருக்கலாம் (ரொம்பப் பழைய கதை)
2. சங்கால வணிகத்தில் பட்டுப்பாதை வழியாக மொழிப்பரிமாற்றம்
நடந்திருக்கலாம் (சரித்திர காலம்)
3. பௌத்தம் அங்கு தழைத்தோங்கிய காலத்தில் நமது போதிதர்மர் அங்கு சென்று
பௌத்தமும் தமிழும் அளித்திருக்கலாம் (7 AD முன்)
4. 15ம் நூற்றாண்டில் சேஜோன் ஆண்ட காலத்தில் தமிழ் மீண்டும் வரிவடிவ
ஆக்கத்தில் பங்கு கொண்டிருக்கலாம்.
> இது சீன படிவமாக இருப்பதால். சீன மொழியில் எவ்வாறான பலுப்பல் ஏற்படுகின்றது என்பதையும் பார்க்க வேண்டுமோ??!!
தேவை இல்லை. இவள் நேரடியாக இந்தியாவிலிருந்து கொரியா வருகிறாள். வரும்
போது சில கற்களைக் கொண்டு வருகிறாள். அது அருங்காட்சியகத்தில் உள்ளதாம்.
அந்தக் கல் தமிழகக் கல்லா என்று ஆராய வேண்டும். அவள் மீன் சின்னத்துடன்
வருகிறாள். பாண்டிய இளவரசியாக இருக்கலாம்.
நம் மாணவர்கள் மானியம் பெற்று கொரியமும் (ஹங்குல்), சீனமும் கற்று கொரியா வந்து
ஒவ்வொற்றுமைகளைக் கண்டு ஆய்வு செய்ய வேண்டும். இந்தியாவிலிருந்தும் செய்யலாம்.
ஆனால், மிக முக்கியமான ஒரு தரவு கொரியாவில் உள்ளது. அது சீனத்தில் எழுத்தப்பட்ட
ஒரு குறிப்பு. அது ஹியோ என்ற இந்திய அரசி (அது என்ன பெயர் என்று கண்டு பிடிக்க
வேண்டும்), கொரியா வந்து சுரோ மன்னனை மணந்து கொரிய சந்ததியினரை உருவாக்கினாள்
என்கிறது. அவள் ‘அயோத்’ எனும் இடத்திலிருந்து வந்தாள் என்கிறது. வட இந்திய
சரித்திரவியலர் உடனே அது ‘அயோத்யா’ என்று தீர்மானம் செய்து அங்கு இந்த அரசிக்கு
நினைவாலயமே கட்டிவிட்டனர். முதலில் கொரிய பலுப்பலில், ‘ஹியோ’ என்னும் பெயர்
இந்திய பலுப்பலில் எதைக்குறிக்கும் என்று கண்டு பிடிக்க வேண்டும். தமிழ்
பெயர்கள் கர்நாடகா, ஆந்திரா போகும் போதே பலுப்பலில் மாறுபடுவதைக் காண்கிறோம்.
கொரியா எத்தனை ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளது என்று யோசிக்க வேண்டும்! ஹியோ
என்னும் பெயர் தமிழ் பெயரின் மரூவுவாக இருந்தால், ‘அயோத்’ என்பது எந்த ஊர்
என்று கண்டு சொல்ல வேண்டும். மூலபாடத்தை படிக்க முடிந்தால்தான் மேற்கொண்டு
நகரமுடியும். அயோத்தியில் கோயில் கட்டியவர்களெல்லாம் ஆங்கில மொழி பெயர்ப்பை
வைத்துக் கொண்டு முடிவிற்கு வந்திருக்கின்றனர். நாமாவது மூலத்திலிருந்து
ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
இதுவே என் வேண்டுகோள். இதை மாணவர்களிடம், ஆய்வாளர்களிடம் சொல்லத்தான் நான்
புதுவை சென்றேன். எனது விரிவான இப்பேச்சு ‘தமிழ் இணையம் 2010’ கருத்தரங்கில்
முரசொலி மாறன் அரங்கில் அமைந்துவிட்டது. எத்தனை தமிழ் அறிஞர்கள் கேட்டிருப்பர்
என்று தெரியாது. சில தமிழாசிரியர்கள் சபையில் உடனே ஆர்வம் காட்டினர் (நன்றி).
இதன் விழியம் (வீடியோ) இதுவரை கிடைக்கவில்லை. எனவே நானே புதுவை செல்லும் ஒரு
வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன் (வீட்டில் ஒரே திட்டு ’வந்து உருப்படியாக
வீட்டில் இருந்தானா, வந்த கதை போன கதை சொல்வானா? என்றால் காலில் சக்கரத்தைக்
கட்டிக்கொண்டு அலைகிறானே’ என்று). என் திட்டத்தைச் சொன்ன பத்தவது நிமிடத்தில்
என் பேச்சை புதுவைப் பல்கலைக் கழகத்தில் சுப்பிரமணிய பாரதி தமிழ் புலத்தில்
ஏற்பாடு செய்துவிட்டார் (நன்றி). அங்கு மாணவர்கள் மிக ஆர்வமாகக் கேட்டது எனக்கு
மகிழ்ச்சி. பலர் தமிழ் மரபு அறக்கட்டளை தரவுகளை தங்கள் ஆய்விற்கு
பயன்படுத்துவதாகச் சொன்னது மட்டில்லா மகிழ்வைத் தந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக